மறைத்த காதல் - பாகம் 10!
- Sridhana

- May 1, 2020
- 2 min read
பாகம் - 10
“அய்யோ இவர் குறுஞ்செய்தி அனுப்புகிறார், ராகவன் குறும்புத்தனம் செய்கிறானே, என்ன சொல்லி ராகவனை சமாளிப்பது”, என்று மனதிற்குள்ளே யோசிக்க ஆரம்பித்தாள் துளசி... “இரவில் பேசலாம், குறுஞ்செய்தி வேண்டாம்” என்று ராகவனுக்கு பயந்து துளசி செய்தி அனுப்பினாள். மாறனால் சூழ்நிலை சரியில்லை என்பதை உணர முடிந்தது. வீட்டுற்கு வந்தவுடன் துளசி தன் அன்னையின் படத்தை பார்த்து அழுதுகொண்டே சிரித்தாள். துணிகளை மாற்றிய பின் மாறன் கொடுத்த கைப்பேசியை எடுத்து பார்த்தாள். மாறனின் எண் பதிந்து இருந்தது. “இவருக்கு அழைக்கலாமா வேண்டாமா?” என்று அவள் அறையில் இருந்தபடி யோசித்துக் கொண்டிருந்தாள் துளசி. “எப்படியும் வெட்டியாகத்தான் இருப்பார்”, என்று நினைத்தபடி மாறனுக்கு அழைத்தாள் துளசி.
“துளசி, என்னால் நம்ப முடியவில்லை உன்னிடம் இருந்து அழைப்பு வந்தது” என்றான் மாறன். “ஏன், என்னாச்சு?” சிறிது ஆர்வமாக கேட்டாள் துளசி. “இல்லை பொதுவாக ஆண்கள்தான் முதலில் அழைக்க வேண்டும் என்று பெண்கள் நினைப்பார்கள், ஆனால் பரவாயில்லை நீயே அழைத்துவிட்டாய்!”, என்று மெல்ல சிரித்தவாறு கூறினான் மாறன். “ஓ அப்படியா, சரி நான் வைக்கிறேன்.” என்று செல்ல கோபத்தோடு பேசத் தொடங்கினாள் துளசி. “ஏ ஏ, நான் சும்மா ஒருபேச்சுக்கு சொன்னேன். நீ எனக்கு அழைத்த ஆனந்தத்தில் என்ன பேச என்று தெரியாமல் உன்னிடம் கூறிவிட்டேன்”, என்று பதபதைத்து பேசினான் மாறன். மாறனின் பதற்றம் குரலில் தெரிந்தது துளசிக்கு.
“ம்ம், சரி சரி! நீங்க எதோ வெளியூரில் வேலை செய்கிறீர்கள் என்று அப்பா சொன்னார், எந்த ஊர் அது? என்ன வேலை? எவ்வளவு நேரம் வேலை இருக்கும்?”, என்று படபடவென கேள்விகளை கேட்டு தள்ளினாள் துளசி.
ஒரே நேரத்தில் எத்தனைக் கேள்விகள் கேட்கிறாள் இவள் என்று மனதில் தோன்றியது மாறனுக்கு. “பெங்களூரில் சொந்தமாக மூன்று துணிக்கடை வைத்துள்ளேன், சொந்தமாக வீடு நமக்காக கட்டிருக்கிறேன். நமது அழகான வாழ்க்கையை அங்கேதான் நாம் இருவரும் ஆரம்பிக்க போகிறோம்.” என்று பொறுமையாக விளக்கினான். “அய்யோ இருவர் மட்டுமா? அப்போ அத்தை மாமா? எங்க அப்பா அண்ணாவ விட்டுட்டு பெங்களூர் போகணுமா? இதே துணிக்கடையை நம்ம ஊரில் தொடங்க முடியாத?, என்று மீண்டும் கேட்கத்தொடங்கினாள் துளசி. மெல்ல சிரித்தபடியே, “நம்ம மட்டும் தான். அம்மா அப்பாவிற்கு இந்த ஊரைவிட்டு வர மனதில்லை. இங்கேயும் கடை துவங்கவேண்டும் விரைவில். மாதம் ஒருமுறை நாம் இங்கு வரலாம். கொஞ்ச நாள் உனக்கு எல்லாமே கஷ்டமாகத்தான் தெரியும். நான் உன்னோடு தான் எப்பொழுதும் இருப்பேன். நன்கு பார்த்துக்கொள்வேன் உன்னை. இப்போதே இதை அனைத்தையும் நினைத்து பயப்பட தேவையில்லை. பார்த்துக்கொள்ளலாம் அனைத்தையும்!”, என்று அன்பாய் கூறினான் மாறன். மாறனின் பதில்கள் ஆறுதலாக இருந்தாலும் இன்னும் பல கேள்விகளை விதைத்தது துளசியின் மனதில். இருந்தும் எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தாள் துளசி.
துளசியின் மௌனத்தை களைக்குமாறு “உனக்கு என்ன சாப்பிட பிடிக்கும், உன் பொழுது போக்கிற்கு என்ன செய்ய பிடிக்கும் உனக்கு ? உனக்கென்று இருக்கும் எதிர்பார்ப்புகள் என்ன?”, என்று அடுக்கடுக்காக கேள்விகளை பட்டியலிட்டான் மாறன். “சாப்பிட - சுத்தமான அசைவம் சாப்பாடு தான் பிடிக்கும். புதன், ஞாயறு மட்டும் சாப்பிட மாட்டேன். அன்று சாப்பிட தோன்றினால் தடை ஏதும் கிடையாது இதுவரை எனக்கு!”, என்று கூறினாள் துளசி. “இனிமேலும் தடை ஏதும் இருக்காது உனக்கு. ஆனால் நான்
சுத்த சைவ சாப்பாடு மட்டுமே சாப்பிடுவேன்”, என்று கூறினான். “சைவமா? முதல் பதிலே ஒத்துபோகலயா? சுத்தம்!”, என்று விரக்தியாக கூறினாள் துளசி. “ஒரே போல் இருந்தால் வாழ்க்கை சுவரஷ்யமாக இருக்காது. ஒரே போல் ரசனை இருந்தால் தான் வாழ்க்கையை இறுதிவரை வாழமுடியும் என்றும் கிடையாது. எனக்காக நீ உனக்காக நான் என்று விட்டுகொடுபதுதான் வாழ்க்கை”, என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தான் மாறன். “நீங்க எப்பவும் இப்படிதானா பேசிக்கொண்டே இருப்பீர்களா?”, என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் துளசி. துளசியின் இந்த கேள்வியை கேட்டு தினறிய மாறன் “இதுவரை நான் யாரிடமும் இவ்வளவு பேசியதில்லை. உன்னிடம் மட்டும் தான் இப்படி பேசுகிறேன்.” , என்று நிதானமாக பதிலளித்தான். சில நொடிகள் அமைதி உலவியது. “துளசி, இதை கேட்பதற்கு என்னை தவறாக எண்ணவேண்டாம். நான் கன்னித்தன்மையோடு இருக்கிறேன். நீயும் அப்படிதானே?, என்று பட்டென்று போட்டு உடைத்தான் தன் மனதில் ஓடிய கேள்வியை.

-தொடரும்...





Comments