பொய்க்கண்ணுள்ளவளே ... என்னோடு வந்திடு!
- Sridhana

- Aug 8, 2020
- 1 min read
முதல் பார்வை ...
என் விழிகளும்
உன் இதயமும் உரையாடியது...
உரையாடல் கூட இல்லை அது...
வெறும் நுவல் தான் உனக்கு !
என் விழிகள் மட்டும்,
உள்ளிருக்கும் அல்ப ஆசைகளை
உச்சுக்கொட்டும் அளவிற்கு
உன்னிடம் கொட்டித்தீர்த்தது !
உள்ளிழுத்து வெளியிட்ட
உன் மூச்சுக்காற்றில் தேடித்தேடி தவித்தேன்
உன் ஒப்புதல் ஒளிந்திருக்கிறதா என்று ...
உன் நாள் விடியுமுன்,
என் நாள் விடிந்திடும் ...
உன் நாள் முடிந்தாலும்,
உனது ஒவ்வொரு மூச்சுக்காற்றை முத்தமிட,
என் நாள் காத்திடும் !
உடல் சோர்கையில்,
சதை நோகுகையில் - உன்
உடல் சதை நோகாமல்
வலியைமட்டும்
என் கையோடு பிரித்தெடுப்பேன் !
பிள்ளைப்பெற்றெடுக்க பயமா
உனக்கு?
பிள்ளையே வேண்டாம் தாரமே
நமக்கு !
உனக்கு நான்
எனக்கு நீ
இன்றைக்கு மட்டும் அனுபவித்துவாழ்வோம்...
நாளைய நினைவுகளைச் சேர்த்து -
எதிர்காலம் இருக்குமா என்றுத்தெரியாத
காலத்திற்கு காகிதத்தை சேர்க்காமல் !
காதொலிப்பான் ஓதும்போதெல்லாம்
மண்டைக்குள் நேரேப்பாயும் பிடித்தபாடல்போல்
உன் மண்டைப்பின்மேட்டில் தினம் பதிப்பேன்
புதுக்காதல் கதை ...
நான் உன்னருகில் இல்லாத நேரத்திலும்
அழகாய் அந்நினைவில்
நினைவின் வடிவில் உங்கே நிற்பேன்
உன் இதயமாட ...
ருசிக்கு சாப்பிடாமல்,
பசிக்கு ருசித்து சாப்பிடுவோம்!
சமைப்பது என் பொறுப்பிருந்தாலும்,
என் வயிறு நிறையும்
உன் கையால் ஊட்டிவிட்டால் மட்டும்!
பொய்க்கண்ணுள்ளவளே,
மெய் கேளடி, செல்லக்கடி கூட
உன் கையைக் கடிக்கமாட்டேன் !
உன் தோல்நிறம்
என்னைச் சொக்கப்போவதில்லை...
உன் மேனிபோர்த்தும் வண்ணபோர்வைகளும்
என்னை மயக்கப்போவதில்லை...
மடவரலே உனக்காக நான்
தினம் பிறந்து தினம் புதிதாய் காதலிப்பேன்...
விழியில்லை உனக்கென்றாலும்,
நான் இருப்பேன் - விழியாகமட்டுமில்லை
ஒளியாகவும்...
குரலில்லை உனக்கென்றாலும்,
நான் இருப்பேன் - மொழியாகமட்டுமில்லை
ஒலியாகவும்...
இன்றும்போல் என்றும்,
நான் எழுதியதை
நானே உனக்காக ரசித்து வாசித்தது போல் !!
அழகே நீ,
பேதைத் தொடங்கி மடந்தை கடந்தாலும் ...
அரிவை, தெரிவை மூதாட்டி ஆனாலும் - என்றும்
என் செல்ல சீமாட்டி நீயம்மா !
ஊனம் உனக்கில்லை
உன்னை உதிக்கச்செய்யத்தவனுக்கு தான் !
என்னோடு வந்திடு,
என்னோடு வாழ்ந்திடு!
உனக்குப்புரியவைக்கிறேன்
உருகி உருகி,
உன்னை உருக்காமல்
உள்ளுக்குள் அன்பினால் மட்டும் உறைவது
எப்படி என்று !
உனக்கென வாழம்மா - அதை என்னோடு வாழம்மா !
-ஸ்ரீதனா




Thanks da
Semmma... 😍😍😘😘👏👏