பிரிவில்லா பிரிவு …
- Sridhana

- Oct 28, 2022
- 1 min read
அதிகாலை 2.45 மணி அளவு
என் தந்தையின்
தொண்டைக்குழியில் இருந்து
வந்த மூச்சை இழுக்கும் சத்தம்
என்னை எழுப்பி இழுத்தது!
தந்தைதான், இருப்பினும்
பயம் கவலை இரண்டும் கலந்த ஓர் உணர்ச்சி
என்
கைகளை நடுங்கச்செய்தது..
கண்களை கலங்கச்செய்தது..
மெல்ல நடந்து அருகில்
சென்றேன்..
என் கண்கள் தெளிவாக இல்லை,
என் கண்களில் தேங்கிய
கண்ணீரை அகற்றினேன்…
கட்டிலில் அப்பா
அவரைச்சுற்றி கீழே
அவர் நினைப்பிலேயே
அழுது அயர்ந்த
என் அம்மா, அத்தைகள்…
என் உள்ளங்கையை
அப்பாவின் நெற்றிமேல்
கவலையோடு வைத்தேன்…
தனசேகரா என்று நான்
அழைத்த மறுநொடி கண்விழித்தார், மூன்று நாட்களாய் கண்திறக்காதவர்…
அதிர்ச்சியில் அப்பாவின்
தலையில் கை வைத்தபடியே
ஒருபுறம் அம்மாவை உதைத்து
எழுப்பினேன்…
“அப்பா கண்ணத்துறந்துட்டார்”,
என்று அலறிக்கொண்டே
என் தம்பிகளை எழுப்பினேன்…
“டே அப்பா, யப்பா,
தனசேகரா,
என்ன வேண்டும்?
தண்ணி வேணுமா?”
என்று நான் கேட்க கேட்க
என்னை சிரித்த முகத்தோடு
தெளிவாகப்பார்த்தார்…
அவர் கண்கள் அடுத்து
தந்தையின் ஆசை மனைவியான
என் அம்மாவைத்தேடியது…
விக்கி விக்கி அழுதுகொண்டு
தலைமேட்டில் அம்மா
கால்மேட்டில் தம்பிகளும் நானும்
சுற்றி பாசமலர்கள் இருவர்..
அப்பா அவரது தொண்டையைத் தடவினார்,
தண்ணீர் கொடுத்தோம்
மார்பைத்தடவினார் ,
கண்கள் என்னைப்பார்த்தது..
அவர்
முகத்தில் அவ்வளவு தெளிவு
இதழோரத்தில் லேசான செல்லச்சிரிப்பு…
அப்பாவின் கண்கள் ஒரு சுத்து
அனைவரையும் பார்த்தது..
அடுத்த மூச்சு
இல்லை உடலில்…
அப்பாவின் மார்பில்
அழுத்தினான் தம்பி,
பலனில்லை…
“டேய் யப்பா யப்பா,
தனசேகரா
டாடி
யோவ்”, என்று கதறினேன்…
“என்னடாச்செல்லம்”
என்று என்னைக் கேட்க அவர்
மீண்டும் எழவில்லை…
“காமாட்சிம்மா, செல்லம், பொன்னுகாமாட்சி,
தங்க காமாட்சி,
வைரக்காமாட்சி
வைடூரிய காமாட்சி
காஞ்சி காமாட்சி
மதுரை மீனாட்சி
காசி விசாலாட்சி
என் சித்தவனாக்கன்பட்டி (குலதெய்வம் பெயர்)
பொன்னு காமாட்சி” என்று
இனி கொஞ்சும்
என் அப்பாவின் அன்புக்குறலை
எங்குக்கேட்பேன்??
துவண்டு விழும்போதெல்லாம்
தட்டிக்கொடுத்த வார்த்தைகள்
காதில் கேட்டாலும்,
மீண்டும் சொல்ல நீங்கள்
இல்லையே அப்பா…
அனைத்தும் பதினைந்து
நிமிடங்களில் ..
அதிகாலை 2.45 முதல் 2.55 எங்களைப் பார்த்த
கண்கள் அசையவில்லை 3மணிக்கு…
கதறி கதறி
அழுதேன்(அழுகிறேன் இந்நொடியும்)
நாட்கள் நகர்ந்தாலும்
வலி மறப்பதில்லை…
உயிர் பிரிவதற்கு
மூன்று நாட்கள் முன்
அவர் கூறிய வார்த்தைமட்டும்
ஆறுதலாய் இன்றும்
என்னைத் தழுவித்தட்டிக்கொடுக்கிறது
“போய்விட்டு அப்பா திரும்ப வருவேன்டா, கவலைப்படாத”, என்றார்…
- இப்படிக்கு,
தந்தையில்லா செல்லமகள்



Comments