இந்தப் பிறப்பில் மட்டும் தான் நீ, நீ !
- Sridhana

- Jul 17, 2020
- 1 min read
பிறந்ததுமே
நம்ம வீட்டு பிள்ளையா?
அடுத்த வீட்டு பிள்ளையா?
என்று பெரியவர்கள் வினவி சூசனமாய் கேட்டு
அந்த பிஞ்சு பிள்ளையின் காதில்
பெரியகர்வத்தை பரிசளிக்கின்றனர்...
இன்றும் தொடர்கிறது
நமக்கென்று ஒரு ஆண் வாரிசுவேண்டும்
என்ற மதிப்பில்லா ஆசை!
சமூகத்தின் தவறில் ஒன்று!
வளர வளர,
வலியில் அழுதால் கூட
நீ ஏன் பெண்பிள்ளைபோல்
அழுகிறாய் என்று
அவன் மனஅழுத்தத்தை
வெளியில் கொட்டமுடியாதவாறு
ஆண்பசைகொண்டு அடைக்கின்றனர்...
ஆண்கள் கண்ணீரும் உப்புநீர்தான் என்பதை மறந்த
சமூகத்தின் தவறில் ஒன்று!
பருவம் மாறுகையில்
இருவரின் பருவமாற்றங்கள் பற்றிய கல்வி
இருபாலினருக்கும் அவசியம்...
மூடிமூடி வைக்கும்வரையில்
உள்ளிருப்பதை என்னவென்று அறிய ஆர்வம்
பேருருவம் எடுக்கும்...
அழுத்தம் அதிகம் அழுத்தத்தொடங்கும் ...
அது வெறியாக மாறி
மனிதஉருவில் மிருகமாகவே மாற்றுகிறது...
ஆணின் வலு சற்று அதிகம்தான்...
இன்னும் வலுவூட்டுவது
இந்த சமூகத்தின் தவறில் ஒன்று!
உடலால் பெண் கருவை சுமந்தாலும்,
மனதால்
தன் பிள்ளையையும் மனைவியையும் சுமக்கும் திறன்
ஓர் ஆணுக்கு மட்டும்தான் உள்ளது!
பெண்ணின் வலிகள் பல உடலால்...
அவை பெண்ணைவிட ஆண்களுக்குநன்கு புரியும்,
என்னவென்று சொன்னால் மட்டும் !
இந்த சமூகத்தின் தவறில் ஒன்று !
பாலுக்கும் கள்ளிப்பாலுக்கும் உள்ள நூலளவு
வித்யாசம் - குடித்துதான் உணரவேண்டும் என்றில்லை...
இதற்குமுன் குடித்தவர்,
அடுத்த சந்ததிக்கு எடுத்துரைத்தால் கூட
புரியும் பலருக்கு ...
பொத்திப்பொத்தி வளர்ப்பதில்லை
புதருக்குள் விழாமல் வளர்ப்பது!
ஆம், அனுபவம் சிறந்த ஆசான் என்றும்!
பட்டுத்திருந்த பலவாழ்க்கை இல்லை
ஒரு வாழ்க்கை தான் - ஒரு வாழ்க்கை மட்டும் தான்
இந்தப் பிறப்பில் மட்டும் தான் நீ, நீ !
பிள்ளைகளுக்கு என்று தனியறை
என்று ஒதுக்குகிறோமோ,
அன்றே பெற்றவர்களிடம் இருந்து
தனி... தனிமை அடைகின்றனர் !
பிள்ளைகள்
பக்குவம் அடையும் வரை
பக்கம் வைத்துதான் பார்ப்போமே !
பாதி தவறுகள் தவிர்க்கப்படும் !
பிள்ளைகள் என்றால் பிள்ளைகள்தான்
ஆண் பிள்ளை பெண் பிள்ளை
என்றுபிரிவை இதிலிருந்து பிரித்தேவைக்கிறேன் !
ஆண்களை அடிமையாக்கி
ஆளவேண்டும் என்றுநினைக்கும் பெண்ணிற்கும் சரி
பெண்களை கட்டுக்குள்
வைத்துக்கொள்ளவேண்டும் என்றுநினைக்கும் ஆணிற்கும் சரி
எல்லாம் வயதில் தான் ஏய்ப்பு வெற்றி...
முதுமை தழுவுகையில்
இதரேதர சார்புநிலை தானேமுளைத்துவிடும்...
சாதித்தது என்னவென்று தேடித்தேடி பார்க்கத்தோன்றும்...
அன்று புரியும்,
சமூகம் - நாம் தானென்றும்...
மாற்றம் - நம்மில் இருந்தாவது மாறெட்டுமென்றும்...
உடலுறுப்பில் மட்டும்தான் வேறுபாடுகள் உண்டு...
அன்பு அரவணைப்பில்
அனைத்து பாலினரும்
நிகரானவர்தான் என்றும் !
-ஶ்ரீதனா




Very nice...
👏👏👏👌
அன்பை நோக்கி மட்டும் நகர வேண்டும் !