ஒரே ஒரு வாழ்க்கைதான் - வெம்பி அழுகாமல் விரும்பி வாழுங்கள்...
- Sridhana
- Sep 1, 2020
- 2 min read
Updated: Sep 1, 2020
இந்த ஒரு ஜென்மம் மட்டும் தான் - நாம் சொந்தம். அடுத்த ஜென்மத்தில் (அப்படி ஒன்று இருந்தால்), இதே சொந்தத்தோடுதான் பிறப்போம் என நிச்சயம் இல்லை. எவராயினும் உயிரோடு இருக்கும் பொழுதே கோபமோ, சோகமோ, வருத்தமோ பேசி சரி செய்துவிட வேண்டும். இறந்தபின் எந்தச்சொந்தமும் சவம்தான், எந்தச்சவத்திற்கும் காதுகேட்க்காது, அழாதே என்று கட்டி அணைக்கமுடியாது.
வாழும்பொழுது இருக்கும் உலகை மட்டும் நினைத்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது. பணம் என்பது முக்கியம் தான் ஆனால் பாசத்தைவிட இல்லை. பணம் நிலையானது இல்லை. வரவு செலவு (மருத்துவமும் சேர்த்து) அவரவர் வீட்டில் நடப்பது தான், எவ்வளவு பணம் வந்தாலும் தேவை தீராது. அவரவர் வாழ்க்கையில் இருக்கும் இன்பம் துன்பம் அவரவர் வாங்கி வந்த வரம். அதை எப்படி நேர்மையாகவும் அடுத்தவர் மனம் நோகாதவாறு சமாளித்து வெற்றிப்பெறுகிறோம் என்பது தான் வாழ்க்கையின் தனித்துவம் (உங்களுக்கு வாழ்க்கையிடும் சாவாலும் கூட!)!
அடுத்தவர் கஷ்டத்திற்குத் தெரியாமல் காரணமாகுதலே பாவம்.
இதில், தெரிந்தே மனதை ஒருநிமிடமேனும் வருந்தச்செய்தால் அது மிகப்பெரிய பாவம். நம் கஷ்டத்தை அடுத்தவர் தலையில் சுமத்துவது, நம் கருக்குழந்தையை அடுத்தவர் கருவறையில் சுமக்கச்சொல்வதற்குச் சமம். நல்லபிள்ளையோ இல்லையோ, உன் பிள்ளை என்ற உரிமை இந்த உலகத்தின் முன் புதைக்கப்படும்.
எந்த நிமிடமும் அனைவரும் நமக்குத் தேவை என்று எண்ண வேண்டும்; நம் தேவைக்கேற்ப ஆட்களைத் தேர்வு செய்யக்கூடாது. பணமிருந்தால் போதும், நம்ம பிள்ளைங்க வளர்ந்தாகிற்று, நம்ம குடும்பம் மட்டும் போதும் இனி என்று வாழ்ந்தாலும், மனதில் ஏக்கத்தோடு மட்டும் வாழக்கூடாது. நம் பிள்ளை வாழும் நாள் முழுதும் நம்மால் வாழமுடியாது, நமக்குப்பின் நம்பிள்ளைகளை கவனித்துக்கொள்ளவும், வழிநடத்தவும் நமக்கு உண்மையான உறவு வேண்டும், நம் சொந்தம் வேண்டும். நாங்க இருக்கோம் என்று சொல்ல உருத்தான சொந்தம் வேண்டும்.
நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்களும், நம் சொந்தத்தோடு மட்டும் தான் ஒத்துப்போகும், நாம் அன்றாடம் பார்ப்போரிடம் எல்லாம் ஒத்துப்போகாது. கண்ணுக்கு தெரியாத செல்கள்கூட ஒன்றாக இருக்கையில், பேசத்தெரிந்த சொந்தம் சேர்ந்து வாழ்வதில் தவறொன்றும் இல்லையே ?
சொந்தத்திற்காக பணமோ இல்லை சொத்துமுழுதும் எழுதிவைக்க வேண்டும் என்றில்லை, "என்னமா சாப்பிட்டியா என்னப்பா சாப்பிட்டியா? எல்லாம் சரியாகிவிடும், நல்ல இருப்ப நீ எப்பொழுதும்" என்ற அன்பான நம்பிக்கையான வார்த்தைகள் போதும். உடலுறுப்பு மறைக்க ஒட்டுத்துணி கூட இல்லாமல்தான் கருவறையைப் பிளந்து வெளியே வந்தோம், உயிர் பிரிந்தபின்பும் அழுகியோ சாம்பலாகவோத்தான் போகப்போகிறது இந்தத்தேகம். இடைப்பட்ட இந்த நாட்களுக்கு இத்தனை வலிகளையும் வேதனைகளையும் உடலுக்கும் மனதிற்கும் ஏன் தரவேண்டும்?
வளர்ந்தாலும் சிறுபிள்ளைகளாகவே வாழ்வோம், சிரித்து வாழ்வோம், சோகத்திலும் சிரித்து வாழ்வோம், சேர்ந்து நின்று இன்பம் துன்பம் பகிர்வோம்!...
பணச்சொந்தம் சேர்க்காமல்,
பாசச்சொந்தம் சேர்ப்போம்!
இருப்போர் இல்லாதோருக்கு பகிர்ந்து வாழ்வோம் (பறித்து அல்ல)!
தவறெனில் மன்னிக்கவும்,
சரியெனில் மதிக்கவும் - சொந்தத்தை !
நம் முன்னோர்க்கு நாம் செய்யும் நன்றிக்கடன்நாம் சேர்ந்து வாழ்வதில் தான் உள்ளது; அவர்கள் பெருமை கொள்ளும்படி வாழ்ந்தால், இறந்தவர் நம்மோடு உள்ளம் குளிர்ந்து வாழ்வர்; வாழ்த்துவர்!
-வெம்பி வெம்பி அழுவோரில் நானும் ஒருவர் !
Comments