புற்றைக்கொன்றபுற்று !
- Sridhana
- Dec 19, 2020
- 3 min read
பரபரப்பான உலகத்திலும் சோம்பேறி ஆகும் ஐடி கம்பெனியில் ராகா, ப்ரித்வி இருவரும் பணிபுரிந்து வந்தனர். வேலை வேகமாக நடந்ததோ இல்லையோ, காதல் வேகமாக நடந்தது. இருந்தும் எல்லை தவறவில்லை இருவரும். ப்ரித்வியின் பெற்றோர்கள் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர் ப்ரித்விக்கு ஒரே ஒரு தம்பி மட்டும் தான்; அவனும் கல்லூரிப் படிப்பு இறுதியாண்டு படித்துக்கொண்டுஇருந்தான். ராகாவும் தன் தலைவந்த வாயில் தெரியாமல், ஆசிரமத்தில் வளர்ந்து வந்தாள்.
ப்ரித்வியும் ராகாவும் ஒரு வழியாக திருமணம் செய்தனர். அவ்வப்போது ப்ரித்வியின் தம்பி ரகு வீட்டிற்கு வந்து பார்த்து செல்வதுண்டு. இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க புதுவரவு ஒன்று உதித்தது ப்ரித்வி-ராகாவின் அன்பிற்கு பரிசாய். கருவுற்றிருக்கும் காலத்திலும் ராகாவை ஐடி வேலை சிறிதும் ஓய்வெடுக்க விடவே இல்லை. சிறந்த அறிவு கதைகளும், சிந்தனைகளும் கேட்டு வளர வேண்டிய குழந்தை இன்று இருக்கும் அதிநவீன மென்பொருள் பற்றி தெரிந்து வளர்ந்து வந்தது கருவறையில்.
பிரசவ தேதி நெருங்கியது. அவர்களுக்கு கிடைத்தது அழகான பெண் குழந்தை. அழகு என்றால் அழகு அப்படி ஒரு அழகு. அந்தக்குழந்தை சிரிக்கும் சிரிப்பில் நமது மனதில் இருக்கும் கவலைகள் அனைத்தும் அப்படியே கரைந்துவிடும். இருக்கும் இடமே அவ்வளவு ஆனந்தமாக மனம் மிதக்கும். பலநேரம் வேலையின் வலியைப்போக்க அந்தக்குழந்தையின் சிரிப்பு மருந்தாகியது. வாழ்க்கையை மிக அழகாக மாற்றியது அந்த குழந்தை.
குழந்தைக்கு அமுதா என்று பெயரிட்டனர். பெயருக்கேற்றவாறு அனைவரின் மனதிலும் அமுதத்தை அள்ளிக்கொட்டினாள். நாட்கள் நகர நகர கொஞ்சம் கடினமாகவே இருந்தது ஏனெனில் ஐடி வேலை. கல்லூரி படிப்பு முடிந்து தொழில் துவங்கவேண்டியும், குழந்தையை பார்த்துக்கொள்ளவும் ப்ரித்வியின் தம்பி ரகு வந்தான்.
ப்ரித்வி, ராகா, ரகு, அமுதா நால்வரும் அவ்வப்போது வெளியே செல்வதும், பெரிய கடைகளில் விதவிதமாக ரகரகமாக வாங்கி உண்பதும், பார்க்காத இடங்கள் எல்லாம் சென்று பார்ப்பதும், அங்கங்கே கொஞ்சம் சொத்துக்கள் சேர்ப்பதுமாய் நாட்கள் நகர்ந்தன. ஐடி வேலையில் அதிகப்பணம் ஊதியமாய்ப்பெற பணிமாறிக்கொண்டே இருந்தனர் ப்ரித்வியும் ராகாவும். இறுதியில் கர்நாடகா வந்துச்சேர்ந்தனர். புதுப்பள்ளி அமுதாவிற்கும் கிடைத்தது. ரகு தனது தொழிலை மேம்படுத்த அரும்பாடுபட்டான்.
எட்டு ஆண்டுகள் இப்படியே கடந்தது. எவ்வளவோ வற்புறுத்தியும் திருமணம் செய்ய மறுத்துவிட்டான் ரகு. அதற்குக் காரணம் என்னவென்று கேட்டதற்கு மௌனச்சிரிப்பை பதிலாய்க்கொடுத்தான் ரகு. "நான் உங்களுடனே கடைசிவரைக்கும் இருந்துக்கொள்கிறேன். நீங்கள் இருவரும் என் செல்லக்குட்டி அமுதாவும் போதும் எனக்கு.", என்றுக் கூறினான். அமுதாவிற்கு தனது சித்தப்பாவின் மீது அதிக பாசம் ஏனெனில் அம்மாவும் அப்பாவும் அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அதிக நேரம் பிள்ளைக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்று ஐடி கம்பெனி வேலையிலேயே மூழ்கிக் கிடந்தனர்.
ரகு தனது தொழிலில் கவனம் செலுத்தினாலும் முதல் முக்கியத்துவம் அமுதாவிற்குக் கொடுத்தான். தாய்மொழியல்லாது வேறு மாநிலம் என்பதால் அமுதாவுக்கு பள்ளியிலும் நல்ல நண்பர்கள் கிடையாது. இந்நிலையில் அமுதாவிற்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது ரகுவின் அன்பு மட்டும்தான். பெற்றோர்களுக்கு மேல் அவளது சித்தப்பாவை பெரிதும் போற்றினாள் அமுதா. கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தார் தனது சித்தப்பா. அதிகநேரம் ரகுவோடே அமுதா இருப்பாள்.
அமுதாவின் பத்தாம் பிறந்தநாள் வந்தது. ராகா பிறந்தநாள் பரிசாக எண்ணவேண்டும் உனக்கு என்றதும், "எனக்கு உங்ககூட இருக்கணும் அம்மா", என்றுக்கேட்டாள் அமுதா. இத்தனை நாள் கேட்காமல் அன்று கேட்டதும், மண்டையில் அதிகஎடைகொண்ட சுத்திகொண்டு அடித்தது போல் இருந்தது ராகாவிற்கு.
அடுத்த நாளே ராகா தனது வேலையை விட்டுவிட்டு, "அமுதா குட்டி, இனி நான் உன்னோடே தான் இருப்பேன். எனக்கு வேலை முக்கியம் இல்லை நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன்", என்றாள் ராகா.
ராகா இதைச்சொன்னதும் அமுதாவிற்கு அளவு கடந்த பாசம், சந்தோசம் எப்படி வெளிப்படுத்த என்றுத்தெரியவே இல்லை. மறுபக்கம் ரகுவின் தொழிலில் நல்ல முன்னேற்றம் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமானது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டான். அவ்வப்போது தொலைபேசியில் மட்டும் உரையாடுவதுண்டு ரகு. அப்பொழுதும் அமுதா ரகுவுடன் பேசமறுத்தாள். "அமுதா சித்தப்பா அவங்க தொழிலப்பாக்க வேண்டாமா ? உன்கூடவே இருக்கமுடியுமா சித்தப்பா? இந்த கோபத்துல நீ சித்தப்பா கூட நீ பேசாமல் இருப்பது சரி இல்லை", என்று பலமுறை ப்ரித்வி அதட்டினாலும் அமுதா ஒருமுறைகூட பேசவில்லை. அமுதாவை பேசவைக்க ராகாவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆண்டுகள் இருபது ஓடியது. அமுதா வளர வளர செல்வமும் இன்பமும் வளர்ந்தது ப்ரித்வி ராகாவிற்கு. மூவரும் அமர்ந்திருக்க, தொலைபேசி ஒலித்தது. "அண்ணி, நான் ரகு பேசுறேன். எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரி இல்ல. என்னைக் காப்பாத்த முடியாதுன்னு இங்க இருக்குற மருத்துவர் எல்லாரும் சொல்லிட்டாங்க அண்ணி. என்னுடைய இறுதி நாட்கள் அங்க உங்களோட கழிக்கணும்ன்னு நினைக்குறேன் அண்ணி. நான் நாளை கிளம்பி பெங்களூரு வரேன் அண்ணி.", என்று குறுகிய குரலோடு பேசினான் ரகு. தலையில் இடிவிழுந்தது போல் இருந்தது ராகாவிற்கு. அனைவரும் மௌனமாய் இருந்தனர்.
ரகு பெங்களூரு வந்து சேர்ந்ததும், வீட்டிற்கு கூட வரமுடியவில்லை. நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவர்கள் ரகுவின் மருத்துவ குறிப்புகளைப்பார்த்தனர். "ஆண்குறி புற்றுநோயின் தீவிர நிலையில் ரகு இருக்கிறார். சரியாக கவனிக்காமல் விட்டதால் மிகமோசமான நிலையில் இவர் இருக்கிறார். சில மணிநேரம் தான் இவரால் உயிர் வாழமுடியும்.", என்றுக்கூறி ரகுவின் முன் நின்றிருந்த மருத்துவர்கள் அனைவரும் நகர்ந்தனர். ஒரே ஒரு பெண் மருத்துவர் மட்டும் அங்கு நின்று, "பிஞ்சுஉடம்புன்னு கூட பாக்காமல் எனக்கு நீ செய்த கொடுமைகள் எதுவும் நான் மறக்கவில்லை, என் பெற்றோர்களிடமிருந்து மறைக்கமட்டும் தான் செய்தேன்", என்றுக்கூறி நகர்ந்தாள். நகர்ந்த மறுகணம் ரகுவின் குற்றவுணர்ச்சி இதயத்தில் ஏறிமிதித்தது கொன்றது அவனை. கண்ணீரோடு தன் கண்களும் மூடின.
ராகாவும் ப்ரித்வியும் ரகுவின் அருகே வந்து என்ன ஆச்சு மா உன் சித்தப்பாவிற்கு என்றதும், "கடவுள் சித்தப்பாவை அழைச்சுகிட்டாரு அம்மா, ஒரு மருத்துவரா என்னால ஏதும் செய்யமுடியல", என்றுக்கூறி நகர்ந்தாள் அமுதா.
-Sridhana
Comments