உணர்விற்குப் பெயர் தேடும் உறவு !
- Sridhana
- Aug 6, 2020
- 5 min read
குளிர்ந்த காற்றையும், இருண்ட வானத்தையும், அரை கிளாஸ் டீயோடு ரசித்துக்கொண்டு இருந்த மருத்துவமனையின் காவலாளியை உலுக்கியது உள்ளே நுழைந்த அவசரஊர்தியின் சத்தம். வாசலில் அவசர ஊர்தி நிற்பதற்குள், மறுபுறம் வந்துநின்றது விலையுயர்ந்த வாகனம் நான்கு. முதல் மூன்று மகன்கள் அவரவர் மனைவியோடு மூன்று கார்களிலும் நான்காம் காரில் திருமணமாகாதக் கடைக்குட்டி செல்லப்பொண்ணு வந்து இறங்கினாள்.
"டாக்டர் டாக்டர் சீக்கிரம் வாங்க", என்றுப் பதறிக்கொண்டு கத்தினான் மூன்றாம் மகன் பாண்டியன். விரைந்து வந்த செவிலியர் கதவைத் திறக்க, முதல் மகன் சேரனும் இரண்டாம் மகன் சோழனும் சூழ்ந்தனர்.
விரைந்து வந்த மருத்துவரிடம், ஒரு மகன்கூட தெளிவாகக்கூறவில்லை என்ன நடந்தது என்று. அவர்கள் பேசியவார்த்தைகள் எல்லாம் பிதற்றல் என்று, நிதானமாக இருந்த மருத்துவருக்கும் நான்காம் மகளான கங்காவிற்கும் மட்டும் விளங்கியது. "டாக்டர், அப்பாவிற்கு ஒரு போன் வந்தது, பேசியது யார் என்றுத் தெரியவில்லை. ஆனால் பேசிமுடித்தவுடன், அப்பா அப்படியே கீழே உக்கார்ந்துவிட்டார். உடல் முழுதும் வியர்வை. அருகில் நான் தான் இருந்தேன். கொஞ்சம் தண்ணி கேட்டார், தண்ணீர் கொண்டுவருவதற்குள் அப்பா மயங்கிவிட்டார்.", என்று நிதானமாய் விளக்கினாள் கங்கா. விரைந்து அவசரசிகிச்சைப் பிரிவிற்கு சென்றனர். செவிலியர் வந்து பாண்டியனிடம், "சார் உங்க அப்பாவின் விபரம் வேணும், கொஞ்சம் சொல்லுங்க", என்றார். கண்களைத்துடைத்த வண்ணம், "சொல்லுங்க சிஸ்டர்", என்றான் பாண்டியன்.
"உங்க அப்பா பெயர், என்ன வயது, சுகர், பிபி, என்ன தொழில்?", என்று வரிசையாக அடுக்கினார் அந்தச் செவிலியர். "அப்பா பெயர் சந்தானம், வயது 60 , சுகர் மட்டும்தான் பிபி ஏதும் கிடையாது சிஸ்டர்", என்றான் பாண்டியன்.
சந்தானம் இருந்த அறையின் வாசலில் அனைவரும் கனத்த மூச்சோடு நின்று கொண்டிருந்தனர். வெளியில் நிற்போர்க்கு, நிமிடங்கள் யுகங்களாக இருந்தது மருத்துவர் வெளியே வரும்வரை. சற்று நிதானமாக வெளியே வந்த மருத்துவர், "மைல்டு ஹார்ட் அட்டாக் தான், யாரும் பயப்பட வேண்டாம். இன்று ஒரு நாள் மட்டும் ICU வில் இருக்கட்டும் நாளை வார்டுக்கு அனுப்புறேன். யாராவது ஒருவர் மட்டும் போய்ப்பாக்கலாம்", என்றார் மருத்துவர். அதுவரை யாரோ கழுத்தை இறுக்கப்பிடித்து மெல்லவிட்டது போல் இருந்தது அனைவருக்கும். "கங்கா, நீ போய் பார்த்துட்டு வா", என்றாள் சேரனின் மனைவி. மூன்று மகன்கள் போல் மூன்று மருமகளும் அன்பானவர்கள், ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறியபடி நின்றுகொண்டிருந்தனர், கங்கா மெல்லக்கதவைத் திறந்து உள்ளேச் சென்றாள்.
முகத்தில் இருந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கை கீழே இறக்கிவிட்டு, "கங்கா, இங்கவரத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு போன் வந்தது, அது எங்கிருந்து வந்திருக்குன்னு உடனே விசாரிக்கச்சொல்லு, எந்த ஊர், முகவரி, ஏதாவது விபரம் கிடைக்குதான்னு பார்க்கச்சொல்லு மா", என்று பதற்றத்தோடு பேசினார் சந்தானம். தனது தாய் இறந்தபின் இப்படி ஒரு படபடப்பை தன் தந்தையின் முகத்தில் பார்த்ததேயில்லை கங்கா. "சரி அப்பா, நான் பாத்துக்கிறேன். நீங்க எதையும் யோசிக்காதீங்க.", என்றாள் கங்கா.
குழப்பமாக வெளியே வந்த கங்கா, "அப்பாவிற்கு யாரோ போன் பேசிருக்காங்க, அவங்க எங்க இருந்து பேசினாங்கன்னு அப்பாவிற்கு தெரியணுமாம், நீங்க எல்லாரும் உடனே யாருனு விசாரிங்க. வேற எதுவுமே அப்பா பேசல. ", என்று தன் அண்ணன்களிடம் கூறினாள். இவர்கள் பேசுகையில் அங்கு வந்த மருத்துவர்கள், "இங்க யாரும் இருக்கக்கூடாது, ஏதாவது வேணும்ன்னா நாங்களே சொல்றோம், இனி நாளைதான் பாக்கமுடியும்.", என்றார். சொல்லி அரைமணி நேரத்திற்குள் விவரங்களைக் கண்டுபிடித்தனர், அவ்வளவு பாச அடிமைகள் தன் அண்ணன்களுக்கு உள்ளது.
உள்ளூர் என்றதும் கங்கா நேரில் சந்திக்கக் கிளம்பினாள். அங்குச் செல்லும்வரை யாராக இருக்கும் என்றக்கேள்விகொண்டு தன் மூளையின் பின்மேட்டை குத்திக்குடைந்தாள். அவர் வீட்டின் அழைப்புமணியைத் தன் மூளையைக் குத்தியதை விட அதிகமாகவே அழுத்தினாள். திறந்தது லட்சணமான ஒரு பெண் என்பதனைக்கண்டு சற்று திகைத்தாள். "சொல்லுங்க, யாரு மா வேணும் உங்களுக்கு?", என்ற ரம்மியமானக்குரல் கங்காவின் காதில் விழுந்தாலும், பேசும்தமிழ் மறந்ததுபோல் வெறும் வாயைமட்டும் அசைத்தாள் கங்கா. சிரித்தமுகத்தோடு மீண்டும், "நான் பேசுறது கேக்குதாமா?", என்றுக் கூறி உலுக்கியபோது பேசத்தொடங்கினாள் கங்கா. "அம்மா, நான் சந்தானம்", என்றுக் கூறிமுடிப்பதற்குள், "சந்தானம் அனுப்பினானா, சந்தானம் எங்க? நீ சந்தானம் கிட்ட வேலைபார்க்கிறப் பொண்ண ?, நேத்து நான் மீண்டும் போன் பண்ணேன் ஆனா யாருமே எடுக்கல! என்ன அச்சுன்னு தெரியல", என்று சந்தோசத்தில் மொட்டைவெயிலில் கொட்டும் ஐஸ்கட்டி மழைபோல் கொட்டித்தீர்த்தாள் அந்தப்பெண். கங்காவும் "ஆம்!", என்றுத்தலையை அசைத்தபடி உள்ளேச் சென்றாள்.
பொருள் ஏதும் பெரிதாக இல்லை வீட்டினுள். கங்கா உள்ளேநுழைந்ததும், "உன் கண்ணு ரொம்ப அழகா இருக்குமா, நான் உன்ன கண்ணம்மான்னு கூப்பிட்டுக்கவா?", என்றுச் செல்லவேண்டுகோள் எடுத்தாள் அந்தப்பெண். "நீங்க கண்ணம்மான்னே கூப்பிடுங்க என்னை, உங்க பேர் என்ன?, உங்களுக்கு எப்படித் தெரியும் அய்யாவை? இத்தனை நாள் இங்கதான் இருந்தீங்களா?", என்றுக் கேள்விகளை அடுக்கினாள் கங்கா. "இப்படிக் கடைல ஒரு தோசைமேல இன்னொரு தோசையை அடுக்குறமாதிரி கேள்வியை அடுக்குற. ம்ம், உசார் தான் கண்ணம்மா நீ!" என்றாள் அந்தப் பெண். தன் உணர்ச்சிமூட்டையில் இருந்து வாராத சிரிப்பை வெளியில் இழுத்து அசட்டுச்சிரிப்பொன்றை வீசினாள் கங்கா. "சரி சரி, உன் முகத்தில் ஒட்டவில்லை உன் அசட்டுச்சிரிப்பு. ஹா ஹா ...", என்றுக்கூறி அருகில் இருந்த தண்ணீரைக்குடித்துவிட்டு மீண்டும் பேசத்தொடங்கினாள் அந்தப் பெண், "என்னை அனைவருக்கும் சூரியா என்றுதான் தெரியும். நானும் சந்தானமும் ஒரேக் கல்லூரியில் படித்தோம், எப்பொழுதும் முதல் மதிப்பெண் நான், கடைசி மதிப்பெண் சந்தானம். எப்பொழுதும் தனிமையில் தான் சந்தானம் இருப்பான். பார்த்தவுடனே காதல் சொல்லும் பசங்களுக்கு நடுவில் சந்தானம் சற்று வேறமாதிரிதான். மூன்று ஆண்டுகள் நல்ல நண்பர்களாகப் பழகி, என்னைப்பற்றி அவனும், அவனைப்பற்றி நானும் நன்கு புரிந்து இருந்தோம். சூரியா இருக்குமிடத்தில் தான் சந்தானம் இருப்பான் என்று அனைவரும் கூறும் அளவிற்கு நெருங்கிய உறவு அது. நட்பு மட்டும் தான் எங்களுக்குள் இருந்தது என்ற நினைப்போடுக் கல்லூரி இறுதிநாளை எட்டினோம். இறுதிநாளன்று சந்தானத்தின் அப்பா தீடீரென்று வந்து தரதரவென சந்தானத்தை இழுத்துச்சென்றார். அவனைப்பிரிந்து நான் இதுவரை வாழ்ந்த நாள் தேடலுக்குப்பின் நேற்றுதான் நான் சந்தானத்திடம் பேசினேன்.", என்றாள் சூரியா.
வேறு கேள்விகள் ஏதும் கங்கா கேட்கமுடியாதவாறு பேசிமுடித்த சூரியாவைப்பார்த்து, "அய்யாவிற்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை, அதனால் ஆஸ்பத்திரில இருக்காரு, உங்களப்பாக்கணும்ன்னு சொன்னாரு. நீங்க நாளைக்கு வரமுடியுமா கொஞ்சம் ? ", என்றுத் தயங்கித்தயங்கி கூறினாள் கங்கா. "ஒன்னும் பயப்படுற அளவுக்கு இல்லையே சந்தானத்திற்கு?", என்று கேட்குமுன், "இல்லை இல்லை, ஒன்றுமில்லை", என்றுக்கூறி மெல்லச் சிரித்தாள் கங்கா. "நாளைக்கு எங்கவரணும், எப்பவரணும்?", என்றாள் சூரியா. "நானே உங்களைக்காலையில் வந்து அழைச்சுக்குறேன். நீங்க 11 மணிக்குத் தயாரா இருங்க. நான் இப்போ கிளம்புறேன்", என்றாள் கங்கா. "சரி சரி", என்று சோர்வாகப்பேசினாள் சூரியா. கங்கா தன் காரை நோக்கி நடந்தாள்.
சட்டென்று சூரியா தன் குரல் ஒசத்தி, "ஏ கண்ணம்மா, சந்தானத்திற்கு நிஜமாவே ஒண்ணுமில்லையே ?", என்று தன் கண்களில் வலியோடு உதட்டில் பொய்ப்புன்னகையோடு வினவினாள். மீண்டும் அதேச் சின்னச்சிரிப்பு கங்காவிடம், "ஒன்றுமில்லை, நாளைப் பார்க்கிறேன் உங்களை", என்றுமட்டும் கூறினாள்.
மறுநாள் விடிந்ததும் கங்கா மருத்துவமனைக்குத் தன் அண்ணன் சோழனோடு சென்றாள். "அப்பா, இப்போ எப்படி இருக்கு உங்களுக்கு? நான் ரொம்ப பயந்துபோனேன்", என்று வருத்தமாய்க் கூறினான் சோழன். "எனக்கென்ன, நான் தெம்பா இருக்கேன். போன் நம்பர் கண்டுபிடிச்சியா கங்கா?", என்றார் சந்தானம் முழு ஆர்வத்தோடு. "ஏன் அப்பா இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்?", என்றக்கேள்வியோடு, "சூரியா ஆண்ட்டியப் பார்த்தேன், அவங்க எல்லா விசயத்தையும் சொன்னாங்க. நீங்க ரெண்டுபேரும் ஈருடல் ஓருயிர் என்று கூட சொன்னாங்க. தாத்தா உங்களைத் தரதரவென இழுத்துட்டு போயிட்டாங்கன்னு சொன்னாங்க", என்றாள் கங்கா. "ஆமாம்மா, உங்க அப்பா நான் உங்களப்புரிஞ்சுக்கிட்ட மாதிரி, எங்க அப்பா என்னைப் புரிஞ்சுக்கல. யாரோ நானும் சூரியாவும் விரும்புறோம்ன்னு சொன்னதைக் கேட்டு என்னை ஒரு பணக்காரப்பொண்ணோடு அவசரக் கல்யாணம் பண்ணிவச்சுட்டாங்க எங்க அப்பா. பழைய நினைவு வரும்போது எல்லாம், மயக்கமருந்து குடுக்காம உள்ள இருக்குற ஒவ்வொரு நரம்பையும் கொஞ்சம் கொஞ்சமா பிச்சு வெளிய போடுற மாதிரி வலிக்கும். ரொம்ப கஷ்டப்பட்டுதான் வெளியேவந்து உங்க அம்மாகூட வாழ்க்கை நடத்த ஆரம்பிச்சேன். பிள்ளைங்க நாலாச்சு. உங்க அம்மா தோளுக்கு நீங்க எல்லாரும் வளரவும், சாமி தோளோடு போய் சேந்துட்டா. இப்போ திரும்பவும் தனியாளா ஆகிட்டேன் நான்.", என்றுக்கூறி கண்கலங்கினார். "தனி ஆளா? என்ன அப்பா சொல்றீங்க, நாங்க எல்லாரும் உங்க கூடவே தான் இருக்கோமே?", என்றாள் கங்கா. "இளமையில் வரும் தனிமையைக்கூட, 'நான் தனிமையில் இல்லை' என்றுக் காற்றுப்போர்வைகொண்டு என்னை நானே ஏமாற்றிவிடலாம், ஆனால் முதுமையில் உணரும் தனிமை, அய்யோ, தவிப்பின் மிச்சம் ஏக்கத்தின் உச்சம் எல்லாம் கலந்து, இந்த வாழ்க்கைக்கு இறப்பே மேல் என்ற அளவிற்குத் தள்ளிவிடும். என் மூளையில் இருக்கும் அழகானப் பதிவுகளும் நினைவுகளும் உன் மூளைக்கு மாற்றினால் மட்டும் உன்னால் உணர முடியும் அந்தக் கொடுமையான வலி. தனக்கே தனக்கென்று ஓர் உறவு இல்லையென்றால் எவரும் தனிமையில் தான் இருக்கிறார். நானும் கூட !", என்றார் சந்தானம். இவ்வளவு வெறுப்பு சந்தானத்திற்குள் இருப்பதை தன் பிள்ளைகள் எவரும் என்றும் உணர்ந்ததே இல்லை.
பேசிக்கொண்டிருக்கையில் உள்ளே வந்த மருத்துவர், கண் கலங்கி இருக்கும் சந்தானத்தைப் பார்த்து, "என்ன சந்தானம் , என்ன நடக்குது இங்க?, அதிகம் பேசவேக்கூடாதுன்னு சொல்லிருக்கேன் நீங்க ஒரு பாட்டில் குளுக்கோஸ் அளவிற்குக் கண்ணீரை நிரப்பி வச்சிருக்கீங்க? கங்கா, சோழன், கொஞ்சம் தனியா விடுங்க சந்தானத்தை", என்று அதட்டினார் குடும்ப மருத்துவர்.
கங்கா சூரியாவை அழைக்க சூரியாவீட்டிற்கு கிளம்பினாள். வீட்டுவாசலிலேயே நின்றுகொண்டிருந்த சூரியாவைப் பிரம்மிப்பாகப்பார்த்தாள் கங்கா. வண்டியில் ஏறி அமர்ந்ததும், "சந்தானம் நல்லாயிருக்கான்ல?", என்றுக் கேட்டாள் சூரியா. ஒரு படபடப்பு சூரியாவின் கண்களில் தெரிந்தது. "நல்லா இருக்காங்க", என்றுக்கூறி சின்னச்சிரிப்பு சிரித்தாள். மருத்துவமனை நோக்கி பயணிக்கத் தொடங்கினர். "ஆண்ட்டி, நீங்க மட்டும் தான் இருக்கீங்களா? உங்க கணவர், பிள்ளைங்க எல்லாரும் எங்க இருகாங்க?", என்றாள் கங்கா. "கல்யாணம் பண்ணினாத்தானே கணவர் பிள்ளைங்க எல்லாம். நான் தான் கல்யாணமே செய்யலேயே", என்றுக்கூறி சிரித்தாள் சூரியா. "ஏன்னு தான கேட்கப்போற? என்னை யாரும் சரியா புரிஞ்சுப்பாங்கன்னு தோணல. அதனால எனக்கு கல்யாணம் பண்ணனும்ன்னு தோணல.", என்றாள் சூரியா. "யாரும் புரிஞ்சுப்பாங்கன்னு தோணலயா இல்லை, சந்தானம் அய்யாமாதிரி புரிஞ்சுப்பாங்கன்னு தோணலயா?", என்று போட்டு உடைத்தாள் மனதில் முந்தியக் கேள்வியை. பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், "அப்படியும் சொல்லலாம்", என்று மட்டும் கூறினாள் சூரியா. பலதரப்பட்ட கேள்விகள் கங்காவின் மனதில். பலநிமிட அமைதியை நிறுத்தியது காரின் பிரேக். "அறை எண் என்ன கண்ணம்மா?", என்றாள் சூரியா. கங்கா பதில் கூறுவதற்குள், "பார்வையாளர்கள் கையெழுத்து இடவேண்டும், கொஞ்சம் நீங்க எழுதுறீங்களா?", என்றார் அங்கிருந்த செவிலியர். சூரியா தன்பெயரின் ஒவ்வொரு எழுத்துக்கள் எழுத எழுத கண்களின் நீர்த்தேங்கியது கங்காவிற்கு. "சூரியகங்கா", என்று எழுதிமுடித்து பேனாவை அங்குவைத்து நகர்ந்தாள் சூரியா. "அப்பா, ஏன் இவங்க பேரை எனக்கு வைக்கணும்?", என்றக்கேள்வி கீழிமையில் தேங்கியக்கண்ணீரை உதைத்து வெளியேத் தள்ளியது.
கண்ணைத்துடைத்தவாறு, "மேலே, அறை எண் 7 ", என்றாள் கங்கா. வழியில் நிற்போர் யாரும் சூரியாவின் கண்களுக்குத்தெரியவில்லை. இன்னும் சற்று வேகமாகத்தள்ளி இருந்தால் கதவு உடைந்திருக்கும். அவ்வளவு வேகம் !
"டேய், சந்தானம் , என்னடா பெட் ரெஸ்டா? நிஜமா உடம்பு சரியில்லையா இல்லை சிஸ்டர்ஸ் நல்லா இருக்காங்கன்னு இங்க வந்து கெடக்குரிய?", என்றுக் குரலில் எந்த ஒரு நடுக்கமும் இன்றி ஆனால் கண்ணில் நீரோடு பேசினாள் சூரியகங்கா. "கங்கா, நீ ஏன் கல்யாணம் செய்யல? அதைக்கேட்டு தான் என் இதயம் துடிக்க மறந்துருச்சு சில நொடிகள். கண்ணமுழிச்சு பாத்தா நான் இங்க இருக்கேன். நீ என்கிட்டே சொன்னமாதிரி நான் என் பசங்களுக்கு நம்ம நாட்டு மன்னர்கள் பெயர் தான் வச்சுருக்கேன்!", என்றுக் கண்ணில் நீர்வழியப் பேசத்தொடங்கினார் சந்தானம்.
சற்றேன்று உள்ளே நுழைந்த கங்கா, "அப்பா, எதுக்கு எனக்கு கங்கான்னு பெயர் வைச்சீங்க? சூரியா ஆண்ட்டி ஏன் இன்னும் திருமணம் செய்யல?", என்றாள். "ஏ கண்ணம்மா நீ சந்தானம் பொண்ணா? உன் பெயர் கங்காவா?", என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் சூரியகங்கா. புன்சிரிப்பு மட்டும் சந்தானத்திடம் இருந்து வந்தது. அருகில் வந்த கங்கா, "அப்பா, நீங்க இந்த ஆண்ட்டிய காதலிச்சீங்களா? அதான் எனக்கு இவங்க பெயரா? ஆண்ட்டி நீங்களும் ? அதான் நீங்க வேற யாரையும்?", என்று மென்னு மென்னு முழுங்கத்தொடங்கினாள் கேள்விகளை, சந்தானத்தின் கைகளுக்குள் சூரியகங்காவின் கைகளைக்கண்டவுடன். இதற்குமேல் சொல்வது அறியாது திகைத்து அறையின் வாசலைநோக்கி வெளியே நகர்ந்தாள் கங்கா. "ஏ கண்ணம்மா, காதலுக்கு அன்பு என்ற அர்த்தமும் இருக்கு", என்றாள் சூரியகங்கா.
-ஸ்ரீதனா

Comments