கருவறை உதை உணர்த்திய உண்மை!
- Sridhana
- Aug 13, 2020
- 4 min read
Updated: Aug 14, 2020
முதல் வாய் சாதம் வாயில் வைத்தவுடன் தலைக்கு ஏறியது அகிலனுக்கு, தலையைத் தட்டி தண்ணீர் கொடுக்க அம்மாவும் இல்லை அருகில், "பொறுமை, பொறுமை", என்று அன்பாகப் பேசும் அப்பாவும் இல்லை எதிரில் . "அதான் இருமல் வருதுல்ல தண்ணி எடுத்து குடிக்க வேண்டியது தானே", என்ற அதட்டல் மட்டும் வந்தது தன் மனைவி தேன்மொழியிடமிருந்து. தன் கண்களைத் துடைத்தவாறு தண்ணீரை எடுத்துக் குடித்தான். மனைவிக்கு தெரிந்தது என்னமோ அகிலனுக்கு இருமலினால் வந்த தண்ணீர் என்று. ஆனால், உண்மையில் தன் தாயின் அன்பை ஏக்கமாகத் தேடும் வளர்ந்த குழந்தையின் ஏக்கக்கண்ணீர் அது என்று அகிலனுக்கு மட்டுமே தெரிந்தது. பிடித்தும் பிடிக்காமலும், அரைவயிறை கஷ்டப்பட்டு நிரப்பி, கைக்கழுவ எழுந்துபோனான். "இந்தத் தட்ட யாரு எடுத்துவைப்பா?", என்றுக் கிண்டலாக நகைத்தாள் தேன்மொழி. சலித்துக்கொண்டு தட்டை எடுத்துவைத்து, அதனைக் கழுவி கவிழ்த்துவிட்டு மொட்டைமாடிக்குச் சென்றான் அகிலன்.
மொட்டை மாடியில் வீசிய குளிர்ந்த காற்றும், காற்றில் அசைந்த மரக்கிளைகளின் ஓசையும் அகிலனின் மனதைச் சுரண்டத் தொடங்கியது. மொட்டைமாடியில் தரையில் படுத்துக்கொண்டு தன் கடந்த கால வாழ்க்கையை போர்வையாகப் போர்த்திக் கண்களை மூடிக்கொண்டான் அகிலன்.
பகலவன் வருமுன் எழுவதும், மாலை மறைந்ததும் உறங்கச்செல்வதும் அகிலனின் பெற்றோரான மீரா, ரகுநாதனுக்கு வழக்கமாக இருந்தது. திருமணத்திற்கு முன் மேடைகளில் அரங்கேறிய மீராவின் பரதநாட்டியங்கள், திருமணத்திற்குப்பின் அவ்வப்போது சமையல் அறையில் தனிமையில் நடனமாடி, தனக்குத்தானே ரசித்துக்கொள்வாள் மீரா. அகிலன் வந்ததும் தன் நேரம் முழுதும் அகிலனுக்கென்று பட்டயம் செய்துவிட்டாள் மீரா. கற்பிக்கும் ஆசிரியர் வேலைதான் செய்யவேண்டும் என்றத் தவிப்பு ரகுநாதன் மனதில் இருந்தாலும் அதனைப்புதைத்துவிட்டு ஒரு சின்ன ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வாழ்க்கையை நகர்த்தினார்.
இருபதாயிரம் சம்பளம் வந்தாலும், வந்தது பத்தாயிரம் தான் என்று இருவரும் மனதில்பதித்துக்கொண்டு அந்த பத்தாயிரத்திற்குள் அந்த மாதச்செலவுகளைச் செய்வர். "சாப்பாடு சாப்பிடறப்ப தொணதொணன்னு வரவு செலவுகளைப்பற்றி பேசக்கூடாது", என்றுப் பலமுறை மறைந்த தன் மாமியார் கூறியதை நினைவில் கொள்வாள் மீரா. இரவு உணவு முடிந்ததும் ரகுநாதன் தன் நாள் எப்படி கடந்தது என்றதை பகிர்கையில் மீரா வீட்டுச்செலவைப்பற்றிக் கூறுவாள். இனிமையான நினைவுகளோ இல்லை வலிதரும் தருணங்களோ.. எதுவாயினும் மீராவும் ரகுநாதனும் எந்நாளும் குறிப்பேட்டில் எழுதிசேமிப்பது வழக்கம். இருவரும் பேசுவதைக் கூர்ந்துகவனித்துக்கொள்ளும் அகிலன் மற்றபிள்ளைகள் போல் இதுவேண்டும் அதுவேண்டும் என்று அடம்பிடிப்பதில்லை. சுவையான உணவோ, ஆடம்பர வசதியோ, நவீன ஆடையோ எதுவுமே அனுபவித்ததில்லை அகிலனின் பெற்றோர்கள். அனைத்தும் அகிலனுக்கு என்று மொத்த பாசத்தையும் கொட்டிக்கொட்டி வளர்த்தனர்.
வயது அதிகமாகுவதுபோல், வாழ்க்கையின் தரமும் உயர்ந்தது. அதில் பெரும்பங்கு அகிலனுக்கு இருந்தாலும், அது தன் தந்தை ரகுநாதனால்தான் வந்தது எனப் பெருமை பேசுவது அகிலனின் வழக்கம்.. பெற்றோர் மனதைக் குளிரச்செய்வதில் ஒரு சந்தோசம் அகிலனுக்கு. தான் ஆரோக்கியமாகவும் அற உணர்வோடும் வளர தன் பெற்றோரின் உழைப்பே அடித்தளம் என்று அவன் உறுதியாக நம்பினான்.
முன்பைவிட இன்று நல்லநிலைக்கு வந்தபிறகு அவர்கள் அருகில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற வலி, மூடிக் கொண்டிருந்த கண்ணைப் பிளந்து உப்புநீரை உதிரச் செய்தது அகிலனுக்கு. "ஏங்க என்ன, மேலேயே தூங்குறதா உத்தேசமா?", என்றக்குரல் தன் கற்பனையில் கூட தன் பெற்றோரைப் பார்க்கவிடாமல் தடுத்தது அகிலனை. எவ்வளவு வெறுப்புவலி இருந்தாலும், "வரேன் மா", என்றுக்கூறிக்கொண்டு முகத்தைக் கழுவிட்டு கீழே சென்றான் அகிலன்.
"காலைல 6 மணி முகூர்த்தம் , எங்க வீட்ல எல்லாரும் எனக்காக காத்திருப்பாங்க. சீக்கிரம் தூங்குங்க.", என்றுக் கூறி விளக்கோடு சேர்த்து அகிலனையும் அணைத்துக்கொண்டாள்.
"என்னம்மா இவ்ளோ நேரம்.", என்று அளப்பறையானக்குரல் ஒன்று கட்டியணைத்தது தேன்மொழியை. "உங்க மாப்பிள்ளை அவங்க அம்மா அப்பாவை நெனச்சு தூங்கவேண்டிய நேரத்துல தூங்காம, விடியவும் தான் தூங்க ஆரம்பிச்சாங்க அம்மா", என்றுக்கூறி சலித்துக்கொண்டாள் தேன்மொழி. "போனவங்கள பத்தி எத்தனை நாள் யோசிச்சுக்கிட்டே இருப்பாங்க. ஆகவேண்டிய வேலையப் பாக்கச்சொல்லு உன் வீட்டுக்காரரை", என்றுக் கூறியபடி தேன்மொழியைத் தனியே அழைத்துச்சென்றாள் தேன்மொழியின் சகுனித்தாய். "உன் மாமியார் இல்லாம இப்போ நிம்மதியா இருக்கா? இதுக்குத்தான் நான் இவ்ளோ நாளா கஷ்டப்பட்டேன். நீயும் மாப்பிள்ளையும் இப்போ ஒரு குழந்தை பெத்துக்கோங்க. அப்பறம் பாரு, அவரு உன் காலையும், பிள்ளைங்க வாலையும் பிடிச்சுக்கிட்டுச் சுத்திசுத்தி வருவாரு.", என்றுக் குசுகுசுவென பேசிக்கொண்டனர் தாயும் மகளும்.
கருநாக்குத்தாயின் வாக்குப் பலித்தது, நீச்சல் தெரியாமல் நீந்தத்தொடங்கியது தேன்மொழியின் கருவறையில், அகிலன் தேன்மொழியின் குழந்தை. முன்பு உண்டமயக்கம் மட்டும் கண்ட தேன்மொழி, இன்று தன் கால் தரையில் ஊன்றி முன்னே நடக்க முயற்சித்துப் பின்னே நடக்கிறாள். பின்னே தள்ளிச்செல்லும் பாதங்களை அன்போடு அரவணைத்து தன் தோளோடு சாய்த்துக்கொள்வான் அகிலன். ஒரு மடக்கு பால் குடிப்பதற்குள் ஒரு குட வாந்தி முந்திக்கொட்டும் தேன்மொழிக்கு. மசக்கையே ஆகாமல் அருகில் நிற்கும் எவர்க்கும் வாந்தி வரவைக்கும் அந்த வாடை, இருந்தும் முகம் சுளிக்காமல் தேன்மொழியைப் படுக்கையில் அமர்த்திவிட்டு, அவள் உடைகளை மாற்றிவிட்டு, அனைத்தையும் சுத்தம்செய்து அருகில் வந்து அமர்ந்து தேன்மொழியின் முதுகை தடவிக்கொண்டிருந்தான் அகிலன். "ஒன்னுமில்ல இதெல்லாம்... சரியாகிடும், குட்டிக்கு நீ சாப்பிட்டது ஏதோ பிடிக்கலன்னு, பல்ட்டி அடிச்சு குட்டி உதை உதைச்சிருச்சு நீ சாப்பிட்டதை... அதான் இந்த வாந்தி.. குடிக்க ஏதாவது வேணுமா?," என்று ஆசையாய் ஆறுதல் கூறி வெகுளியாய்ச் சிரித்தான். "நான் உங்கள எவ்வளவு திட்டியும், இவ்வளவு ஆசையா என்னை எப்படிப் பாத்துக்க முடியுது உங்களால?", என்று வாந்தியெடுத்து ஓய்ந்தக் குரலில் அகிலனின் கண்களைப்பார்த்துப் பேசினாள். "என் அம்மாவின் வளர்ப்பு அப்படி. எங்க அப்பா இப்படித்தான் எங்க அம்மாவை கவனிப்பாங்க!", என்றுக்கூறி சின்னச்சிரிப்போடு நகர்ந்தான்.
பானையொன்று தேன்மொழியின் வயிற்றில் ஒட்டியது போலானது மாதம் கூடியதும். குழந்தையின் உதையில் தேன்மொழியின் உள்ப்பாவாடைகூட சிலநேரம் நனைந்தது சிறுநீரால், அதையும் தாய்மை உணர்வோடு மாற்றிவிட்டான் அகிலன். பேச்சொன்றும் இல்லை தேன்மொழிக்கு கண்கள்மட்டும் கலங்கியது. தேன்மொழிக்கு அகிலனின் அன்பைநினைத்து ஆனந்தக்கண்ணீராக ஒருக்கண்ணில் வடிய, தேன்மொழியின் அம்மாகூட வெளிநாட்டில் உள்ள தன் அண்ணன் குழந்தைக்கு முக்கியத்துவம் குடுத்துச்சென்றுவிட்டாள் என்ற நினைவு மறுக்கண்ணில் கண்ணீராகக் கரைந்து ஓடியது. வலியில் உடன் நிற்க எந்தச் சொந்தமும் எட்டிக்கூட பார்க்கவில்லை. பிரசவ வலியில் துடித்தாள், கத்தினாள், கதறினாள். "நீயெல்லாம் ஒரு டாக்டரா, நான் வலிக்குதுன்னு எப்படி கத்துறேன் காதில கேக்கலையை?", என்றுக்கூச்சலிட்டாள் தேன்மொழி. சிலநொடிகள் தேன்மொழியின் சத்தமே இல்லை, பயந்த அகிலன் அறையினுள்ளே வர அருகில் இருந்த செவிலியர் அலறினாள், செவிலியரின் கையை இழுத்துப்பிடித்து தேன்மொழி கடித்துக்கொண்டிருந்ததாள். தேன்மொழியைச் சமாதானம் செய்து அருகிலே நின்றான் அகிலன். பின் ஒரு வழியாக, தலைவரும் வழியில் வழுக்கிக்கொண்டு வெளியில் வந்து வலியில் இருந்து விடுவித்தது அவர்களின் வருங்காலக்கனவு - ஆண்பிள்ளை வடிவில்.
"நம்ம வாழ்க்கை இனிமேல் நம்ம பிள்ளைக்காகத்தான் வாழனும், இவன் தான் நமக்கு எல்லாம்", என்றுக்கண்ணில் நீர்வடிய அகிலனின் கைகளைப்பிடித்துக்கொண்டு தொட்டிலில் உறங்கும் பிள்ளையைப்பார்த்தவாறு கூறினாள் தேன்மொழி. சின்னச்சிரிப்பு மீண்டும். "ஏன் ஏதும் பேசமாட்டேங்கிறீங்க?", என்றாள் தேன்மொழி. "இப்படித்தானே எங்க அம்மா என்னைப் பெத்துருப்பாங்க, எங்க அப்பாவும் என்னமாதிரிதான துடிச்சுருப்பாங்க?", என்றான் அகிலன். என்றும் வெறுப்பை வீசும் தேன்மொழியின் இதழ்கள், "உண்மைதான்!", என்றுமட்டும் கூறியது.
தேன்மொழி எவ்வளவு முயற்சித்தும் அழுகை நிறுத்தவில்லை குழந்தை. குழந்தையின் வயிற்றில் எண்ணெய் கொஞ்சம் தேய்த்து மென்மையாய் தடவினான். வலியில் அழுதக் குழந்தை, அகிலன் தனக்கு கிச்சுகிச்சு காட்டுகிறார் என்று நினைத்து வழிமறந்து சிரிக்கத்தொடங்கியது. விழிபிதுங்கி நின்ற தேன்மொழி, "உங்க கைல ஏதோ வித்தை இருக்குங்க", என்றுக்கூறி அயர்ந்து அருகில் படுத்தாள். தேன்மொழியின் பாதங்களை மெதுவாக பிடித்துவிட்டவாறு,"நான் இப்படித்தான் அழுவேன், அம்மா சொல்லிருக்காங்க", என்றான் அகிலன். அகிலன் இப்படிக்கூறியதும், ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை தேன்மொழி. இரவு நகர்ந்து பகலைத் தொட்டது. குழந்தை அழுதுகொண்டே இருந்த சத்தம் கேட்டு அதிர்ந்து எழுந்தான் அகிலன். "தேனு, தேனு, பிள்ளையை விட்டுட்டு எங்கேப் போன?", என்றுக் கத்திக்கொண்டே குழந்தையை தூக்கிக்கொண்டு வீடுமுழுதும் அலைந்தான் அகிலன். எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. குழந்தையை முதலில் சமாதானம் செய்ய முயற்சிதான் அகிலன். "என்கிட்டே குடு என் தங்கத்தை", என்றக்குரல் உலுக்கியது அகிலன். இரண்டு குழந்தைகள் கதறிக்கொண்டு போட்டியிட்டு அழுதது. "அம்மா", என்று கதறிகதறி அழுதபடியே தன் தாயின் பாதத்திற்கு பிள்ளையோடு குனிந்தான். வாரியணைத்துக்கொண்டாள் அகிலனின் அம்மா மீரா. அகிலனின் தோளைத்தொட்டு தூக்கிவிட்டார் அகிலனின் அப்பா ரகுநாதன்.
ஒன்றும் புரியாமல் நின்றான் அகிலன். ஒருவழியாக சிறிய குழந்தையின் அழுகையை நிறுத்தி உறங்கவைத்துவிட்டாள் மீரா. "விடியற்காலைலேயே தேன்மொழி எங்களைப்பார்க்க முதியோர் இல்லம் வந்தாள். நீயும் அவளும் சேர்ந்துவாழணும்னா, நீங்க குழந்தை பெத்துக்கணும்னா நாங்க உன்னைவிட்டு தனியாத்தான் இருக்குணும்ன்னு அவ எங்ககிட்ட வாங்கின சத்தியத்தைத் திரும்ப வாங்கிக்கொள்வதாகவும், இனி நம்ம எல்லாம் சேர்ந்து வாழலாம்னு சொல்லி எங்களைக் கையோடு கூட்டியாந்துட்டா. நான் சொன்னேன்ல உன்கிட்ட என்மருமக தங்கம், கொஞ்சம் புரிதல் தான் வேணும், அதுக்கு கொஞ்சம் நேரம் நம்ம தரணும்ன்னு, புதுசா வந்தப்புள்ள நம்மள புரிஞ்சுக்குறவரைக்கும் நம்மதான் பொறுமையா போகணும். நான் சொன்னது உண்மையாகிருச்சா? நாங்க மட்டும் உன்னைப்பிரிஞ்சு கஷ்டப்படல, நீயும் தான் நாங்க சொன்ன வார்த்தைக்காக எங்களை விட்டுட்டு இருந்து கஷ்டப்பட்டுட்ட ரொம்ப. அதற்கு பரிசுதான் இனிமேல் நம்ம எல்லாரும் சேர்ந்து வாழப்போற சந்தோஷமான வாழ்க்கை", என்றுத் தேம்பித்தேம்பி அழுதுகொண்டு மடியில் கிடக்கும் அகிலனின் தலையைக்கோதிக்கொண்டு பேசினாள் மீரா. மீண்டும் குழந்தை அழுக, மீரா அகிலனைத்தள்ளிவிட்டு குழந்தையை நோக்கிவிரைந்தாள். "தேன்மொழி எங்கப்பா?", என்று அகிலன் வினவ வெளியில் இருந்து "இங்கதான் இருக்கேன்", என்று மெல்லப்பேசினாள் தேன்மொழி.
தேன்மொழியின் கைகளைப்பிடித்துக்கொண்டு, "ஏன் இந்த திடீர் மாற்றம்?", என்றான் அகிலன். "நம்ம பிள்ளையைப் பெற்றெடுத்த வலி உணர்த்தியது, அத்தை, மாமாவின் வலியும் உங்க வலியும். வலியோடு பெற்றெடுத்த பெற்றோர்கள் இறந்தபிறகு நம்மபிரிவது இயற்கை, ஆனால் இருக்கும்போதே முதியோர் இல்லத்தில் விடுவது பெத்தபிள்ளைகளே பெத்தவங்களை வன்மையாய்க் கொல்றதுக்குச் சமம்.", என்றுக்கூறி முடித்ததும் தேன்மொழியைக் கட்டிஅணைத்தான் அகிலன்.
-ஶ்ரீதனா

Comments