நொந்த மனம்!
- Sridhana
- Jul 28, 2020
- 4 min read
காய்ந்து கிடந்த விடலைக் கண்களுக்கு பலவண்ணப் பறவைகள் கூட்டம் கூட்டமாய் பறப்பது போல் இருந்தது முதல் நாள் கல்லூரியில் பல அரிவைகளைக் கண்டவுடன். பொழுதுபோக்க படிக்கச் வந்த கூட்டம் ஒருபுறம் உரும, படிப்பதற்காக மட்டும் வந்தக் கூட்டம் தன்னடக்கத்தோடு மெல்ல தலைகுனிந்தவாறே எந்த வம்பிலும் சிக்காமல் நகர்ந்தது. அவ்வாறு தலைகுனிந்து நகர்ந்த கண்மணியை உற்று நோக்கினான் நேசன். படிப்பில் சிறிதும் ஆர்வம் இல்லாத பணக்கார அறிவாளி நேசன்.
முதல் வகுப்பு தொடங்கியது, நேசன் வேறு பாடப்பிரிவு எடுத்திருந்தாலும் கண்மணி இருக்கும் வகுப்பில் வந்து அமர்ந்தான். வகுப்பிற்குள் நுழைந்த விரிவுரையாளர் இசக்கிமுத்து, "வணக்கம் மாணவ மாணவிகளே முதல் ஆண்டில் முதல் வகுப்பு இது!, தமிழ் பிரிவு மக்கள் மட்டும்தான இங்க இருக்கீங்க? வகுப்பு மாறிகீறி வந்துடீங்கன்னா அவங்க அவங்க வகுப்பத் தேடிக்கண்டுபிடிச்சு போய் உக்காருங்க பசங்களா!", என்றுக் கூறினார். பின்னொருமுறை சத்தமாகக்கூறினார். எதற்கும் அசரவில்லை நேசன். அவன் கண்கள் கண்மணியை மேயத்தொடங்கியது. கண்கள் சிமிட்டக்கூட மறந்தான் நேசன். அவ்வளவு அழகு கண்மணி. இசக்கிமுத்து நேசன் அருகில் வந்து வைத்த அடி கண்சிமிட்ட வைத்தது நேசனை. அவன்மேல் விழுந்திருக்க வேண்டும் அது, ஆனால் மேசைமேல் விழுந்தது. "என்ன அப்பா", என்றான் நேசன். "வகுப்பிற்குள் அய்யா இல்ல சார் ன்னு தான் சொல்லணும் என்னை. கணிதம் எடுத்த உனக்கு இங்க என்ன வேலை? நான் கேட்பதுகூட காதில் வாங்காம அங்க என்னப்பார்வை?", என்று அதட்டினார் இசக்கிமுத்து.
கூர்மையான மூலைகள் நொடிப்பொழுதில் பல்லாயிரம் பொய்கள் கக்கும். "உங்களைப்பார்க்கத்தான் அப்பா வந்தேன்", என்று அசடு வழிந்துகொண்டு பேசினான் நேசன். "என்ன ? கேட்கல ?", என்று முறைத்தார் இசக்கிமுத்து. "இல்லை, இல்லை, உங்களைப்பார்க்கத்தான் வந்தேன் சார்", என்றான் நேசன்.
"நீ பார்த்த லட்சணத்தைத்தான் பார்த்தேனே நான்", என்று சற்றுகோபமாகவே பேசினார் இசக்கிமுத்து. அங்கிருக்கும் மாணவர்களுக்கு புரிந்தது நேசன் இசக்கிமுத்துவின் மகன் என்பது. அனைத்து மாணவர்கள் முன்னிலையில் சற்று அவமானமாக இருந்தது நேசனுக்கு. அதனால் வெளியே நகர்ந்தான் நேசன். மதியஉணவு இடைவேளை வந்ததும், கண்மணி தன் டப்பாவைத்திறந்ததும் வாயைத்திறந்தவாறு நின்றான் நேசன் அவள் முன். அருகில் இருந்த மாணவிகள் கொஞ்சம் விசித்திரமாகத் தான் பார்த்தார்கள் நேசன் இப்படிவந்து நிற்பதைக்கண்டு. இருந்தும் அவனை எதிர்த்துப் பேசக்கொஞ்சம் பயம். கண்மணி அருகில் நின்று வாயைத்திறந்தபடி இருந்த நேசனின் வாயில் ஒரு கைமுழுதும் அள்ளி ஊட்டினாள் துணிச்சலாகா சக்தி, அவள்வீட்டில் இருந்து குடுத்துவிட்டு ஊறுகாயை. சக்தியும் கண்மணியும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள். ஊறுகாயின் காரம் தாங்கமுடியாமல் கீழேத்துப்பிவிட்டு கத்தினான் சக்தியைப்பார்த்து. "உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இப்படி வாயில ஊறுகாயை குடுப்பாங்களா?", என்றுக் கத்திக்கொண்டே வாயில் உள்ளிருக்கும் அனைத்தையும் கீழேதுப்பிமுடித்தான். "அட அறிவாளியே, உனக்கு ரொம்ப அறிவு கொற்றதாலதான் இப்படி வாயப்பொளந்துட்டு நிக்கிறியா? நல்லவேளை நான் ஊறுகாய்க் கொடுத்தேன், இல்ல அங்க நிக்குற நாய் ஏதாவது செய்திருக்கும். ", என்று கூறிச் சிரித்தாள். அருகில் இருந்த தன் தோழிகளும் சிரித்தனர். பெருத்த அவமானம் ஆனது நேசனுக்கு.
"டேய் மச்சான் என்னடா உன்னையே இப்படி பண்ணிட்டாளுங்க?, நீ திரும்ப எதாவது செய்தாதான் அவங்களுக்கு உன்மேல ஒரு பயம் வரும்.", என்று நேசனிடம் வெட்டிபந்தாத்தோழர்கள் வழக்கத்தைவிட அதிகமாகவே ஏத்திவிட்டனர். மாலை வந்தது, அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர். கண்மணி, சக்தி நடக்கையில் குறுக்கேவந்து திடீரென்று குதித்தான் நேசன். "ஹே பொண்ணு, உன் பெருக்கூட தெரியல, ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. நீயும் என்னை காதலிக்கனும்.", என்று கண்மணியின் கண்ணைப்பார்த்து பேசினான். சக்தி பேசத்தொடங்குவதற்குள், "உன் மூஞ்சு எனக்கு சுத்தமா பிடிக்கல, என் பேச்சு இந்த பொண்ணுகூட அதனால நீ ஓரம்போ", என்றான் நேசன். "என்னப்பா என் மூஞ்சும் பிடிக்கலையா?", என்றக்குரல். மூவரும் திரும்பியதும் நின்றது ஒரு காவல் அதிகாரி. சக்தியை அழைத்துச்செல்ல தன் தந்தைவருவது வழக்கம். திரு திருவென முழித்தபடி நின்றான் நேசன். "என் பிள்ளைங்க வம்புக்கு வந்த தோலைஉருச்சி வண்டி சீட்க்கு போற்றுவேன். ஒரு நாள்ல என்ன டா காதல்? உங்க அப்பாவை கூப்பிட்டு பேசணுமா நான்? போ போய் படிக்க வந்த படிக்குற வேலையைப்பாரு", என்று சரமாரியாக பேசிவிட்டு இருவரையும் அழைத்துச்சென்றார் சக்தியின் தந்தை.
பயந்தசுபாவம் கொண்ட கண்மணியின் கைகள் நடுங்கத்தொடங்கியது. நடுக்கத்தை வெளியேக்காட்டாமல் சக்தியின் கைகளை இறுக்கப்பிடித்துக்கொண்டாள் கண்மணி. முதல் நாளே இவ்வளவு கலவரமா?" என்றுத் தன் தலையில் அடித்துக்கொண்டு வண்டியில் ஏறிச்சென்றனர் மூவரும். சக்தியின் வீட்டின் வழியில் தன் கண்மணி வீடும் உள்ளது. அதனால் அதிகம் சக்தி அவள்வீட்டின் அருகில் இறக்கிவிட்டு செல்வதுதான் வழக்கம். "சக்தி, நீ கொஞ்சம் பொறுமையா அந்தப்பையனை கையாண்டுருக்கலாம். பாரு இப்போ அவன் முழுகோபத்துல இருப்பான் நம்ம மேல. அதுவும் உன்மேல.", எனக்கூறிக்கொண்டு இறங்கினாள். "என்ன நான் பாத்துக்கிறேன் நீ அவனுக்கு வக்காலத்து வாங்காம நாளைக்கு காலையில தயாரா இரு", என்று சொல்லிச்சிரித்தாள் சக்தி.
மாதங்கள் நகர்ந்தது, கண்மணி அனைத்திலும் சிறந்த மாணவியாக விளங்கினாள். கண்மணியால் கல்லூரிக்கே அதிக பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. கண்மணியோடு நண்பனாய் மாற முடிவு செய்தான் நேசன். சக்தி உடன் இல்லாத நேரத்தில், கண்மணி அருகில் வந்தான் நேசன்.
நேசனைக்கண்டதும் பயந்து ஓடிஏ முயற்சித்தாள் கண்மணி. எப்பொழும் பேசும் முரட்டுக்குரல் இல்லாமல் மென்மையாய் பேசினான் நேசன். "கண்மணி, ஒரே ஒரு நிமிடம் நான் பேசுவதை கேட்டுவிட்டு நீ போ. ஒரே ஒரு சந்தர்ப்பம் தா எனக்கு.", என்றான் நேசன். நேசன் முகத்தை பார்க்காமல் நின்றாள் கண்மணி. "எப்படியோ இவனோடு உள்ள பிரச்சனை முடிந்தால் சரி", என்று நினைத்து சற்று நித்தமானாள் கண்மணி.
"முதல் கோணல் எல்லாமே கோணலாகும் னு சொல்லுவாங்க, ஆனா நான் இதை இப்போவே சரிசெய்யனும்ன்னு நினைக்குறேன். நீ மட்டும் மனசு வச்ச எல்லாம் சரி ஆகிவிடும்", என்றான் நேசன். "அய்யயோ இவன் என்ன சொல்லப்போகிறானோ? இந்த சக்திவேற எங்கப்போனான்னு தெரியலையே?", என்றுத் தனக்குள் புலம்பிக்கொண்டு சுற்றிச்சுற்றி பார்த்தாள் கண்மணி. "என்ன சக்தியை தேடுறியா? ம்ம் .. அவ வரதுக்குள்ள நான் சொல்லவேண்டியதை சொல்லிவிடுகிறேன். எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும், நான் கொஞ்சம் முரடன் தான் ஆனா கெட்டவன் இல்லை. உன்னால எனக்கு இந்த கல்லூரில ரொம்ப அசிங்கம் ஏற்பட்டது. அத நீதான் சரி செய்யணும். நான் உன்ன காதலிக்கிறேன். நீயும் என்னை காதலிக்கவேண்டும்.", என்றான் நேசன். கண்மணி நேசனின் முகத்தை பார்த்து, "எனக்கென்று லட்சியமுண்டு, கடமை உண்டு, காதல் செய்யும் சூழ்நிலையில் இல்லை நான். தயவுசெய்து என்னைவிட்டு விடு", என்றாள். "ஓ அப்படியா?, நீ எப்பனாலும் என்ன காதலிச்சுக்கோ, வா என்னோடு ஒரு புகைப்படம் மட்டும் சேர்ந்து எடுத்துக்கோ. அதை வச்சே நான் என் நண்பர்களிடம் கதை கட்டிக்கொள்வேன். வா?", என்றான் நேசன் ஒருவிதமான அசட்டு சிரிப்போடு.
"உன்ன திருத்தவே முடியாது", என்று சற்று கோபமாக பேசி அங்கிருந்து நகர முயற்சித்தாள். கண்மணியின் கைகளை இறுக்கப்பிடித்துக்கொண்டான் நேசன். ஓங்கிவிட்ட அறையில் தான் அவன் கைகள் கண்மணியின் கைகளைவிட்டது. நிமிர்ந்துபார்த்தபின் தான் தெரிந்தது அறைந்தது தன் தந்தை என்று. "என்ன பார்வை? வீட்டுக்கு வா உனக்கு இருக்கு", என்றார் இசக்கிமுத்து. "நீ இதை பெரிசா ஆக்காத மா, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்", என்றுக்கூறி கையெடுத்து கும்பிட்டார் இசக்கிமுத்து. தலையை மட்டும் அசைத்தவாறு நகர்ந்தாள் கண்மணி.
நடந்ததைக்கண்ட தோழிகள் சக்தியிடம் சொல்ல, சக்தி தன் தந்தையிடம் சொல்ல, நேசனை சக்தியின் தந்தை அழைத்துச்சென்று சாத்து சாத்தென்று சாத்தியெடுத்தார். இசக்கிமுத்துவிற்கும் நேசனுக்கும் அசிங்கப்போர்வை போர்த்தப்பட்டது. அன்றோடு இசக்கிமுத்து நேசனோடு பேசுவதை நிறுத்திவிட்டார். இது முழுக்க முழுக்க இருவரின் வேலைதான் என்று முடிவுக்கு வந்தான் நேசன். தன் தந்தைக்கு பயந்து சில மாதங்கள் அமைதியாக இருக்க முடிவெடுத்தான்.
ஆண்டு இரண்டு முடிந்தது. இப்படியே எதிரும் புதிருமாய்ப் போனது நேசனுக்கும் சக்திக்கும். அவள் வம்புக்கு போகாமல் நேசன் இருந்தாலும், சக்தியை முறைத்தபடியே இருப்பான். கண்மணியைக்கூட அவ்வளவு முறைக்க மாட்டான். இருவருக்கும் வலிக்கவேண்டும் ஆயுள்முழுதும் வலிக்கவேண்டும் என்று யோசித்தான். இருவரும் தனிமையில் சிக்குவதற்காக கழுகைப்போல் காத்துக்கொண்டிருந்தான். தன் வெட்டிநண்பர்களும் இதற்கு உடந்தை. அவன் எண்ணம் போல் இருவரும் தனிமையில் சிக்க நேசன் தன் நண்பர்களோடு சூழ்ந்தான். தப்பிக்க வலி ஏதுமில்லை, கத்தினால்கூட யாருக்கும் கேட்க முடியாத இடத்திற்கு வழிதவறி ஓடி வந்துவிட்டனர். ஆளில்லா இடத்தில், முட்டுச்சந்தில் முட்டி, செவரோடு பல்லியாய் ஒட்டி நின்றனர் கண்மணியும் சக்தியும். கண்மணியின் இடது கையை சக்தி தன் வலது கையால் இறுக்கப்பிடித்துக்கொண்டாள். ஒரே ஒரு அடி இடைவெளி தான், இருவருக்கும் நேசனுக்கும். நேசனையை ஒட்டியவாறே சூழ்ந்து நின்றனர் அவன் நண்பர்கள் நால்வர். நொடிப்பொழுதில் பின்னிருந்து இருக்கைகளையும் எடுத்துவீசினான் நேசன். வெந்தது முகம், கண்கள் இரண்டும் கூட அவிந்தது. அலறிய குரல் அங்கிருந்த பறவைகள் எல்லாம் பறந்தன. உருண்டு புரண்டு கூச்சல் போட்டும் எவரும் வரவில்லை. உடன் இருந்த நண்பர்கள் பயந்து விட்டுஓடினர். இரண்டு பாட்டில் நிறைய இருந்த அமிலம் முழுதும் ஊற்றப்பட்டது. துடிதுடிப்பதை பார்த்து பாவப்பட்டு இவ்விருமே நேசனை மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சேர்ந்தவுடன் நேசனின் தாய் அங்குவிரைந்து வந்து நடந்து என்னவென்று விசாரித்தார். "எங்கள் இருவர் மேல் ஊற்றவேண்டிய அமிலம் அது, ஒரேயொரு நொடி பொழுதில் கண்மணி என் கையைக்கீழே இழுத்ததால் தப்பித்தோம் இருவரும். நாங்கள் குனிந்ததால், இருகைகளால் வெறியோடு வேகமாக ஊற்றிய இரண்டு பாட்டில் அமிலமும் சுவற்றில் பட்டு நேசன் முகத்தை வேகவைத்துவிட்டது.", என்று சக்தி நேசனின் அம்மாவிடம் கூறினாள். வெட்கத்தில் கூனிக்குறுகிய நேசனின் அம்மாவை பார்த்து, "சதையில் சிவப்பு சாயம் பூசிய வசீகர பொம்மை இல்லை பெண். உடலால் பெண்கள் வலுவில்லை எனினும் மனதால் மிகவலிமை. ஆண்பிள்ளையை பெற்றால் மட்டும் போதாது, பெண் இனத்தை மதிக்கவும் கற்றுக்கொடுக்கவேண்டும், அது உங்களிடமிருந்து தொடங்கவேண்டும்.", என்று கூறி விலகினாள்.
தன்வெந்த முகத்தைப்பார்த்து பார்த்து நொந்தது மனம் !
-ஶ்ரீதனா
edhirpaaradha mudivu!
Nalla mudivu..