(ஏ)மாற்றம்
- Sridhana
- Jul 26, 2020
- 4 min read
அழகான மனைவி, நுனிநாவினால் அனைவரையும் கவரும் ஆங்கிலம் மட்டும் பேசும் பிள்ளைகள் இரண்டு, மூன்றுமாடி கட்டிடவீடு, சொந்தமான வியாபாரம் என அனைத்திலும் ஆடம்பரம். ஒரே பகலவன் ஒரே சந்திரன் ஒரே பூமி, இருந்தும் பிறந்த மண்ணைவிட்டு உடனிருக்கும் சொந்தங்களைவிட்டு உயிரில்லா காகிதத்திற்காக வெளிநாட்டுக்கு சென்ற முகிலன், என்றும் போல் அன்றும் விடிந்தும் விடியாததுமாய் எழுந்து தன் உடலில் உள்ள கனலி அளவைக்கட்டுப்படுத்த ஓடாமல் ஒரே இடத்தில் நிற்கும் மிதிவண்டியை மிதித்துக் கொண்டிருந்தான். ஒருபுறம் காதில் பாடல் ஒலிக்க, மறுபுறம் மனதில் அவன் செய்த சிறுவயது சேட்டைகளும், தன் தந்தையுடன் விளையாடிய விளையாட்டுகளும் ஓடியது. எப்போதாவது தான் இந்த நினைவுகள் ஓடும் ஆனால் அன்று அதுமட்டும் தான் ஓடிக்கொண்டேயிருந்தது.
அதற்கேற்றவாறு தன் தந்தையைக் கவனிக்க வைத்திருந்த வேலையாள் வெற்றியிடம் இருந்து அழைப்பு வந்தது. "அய்யா, பெரிய அய்யாவுக்கு ரொம்ப உடல் நலம் சரி இல்லை, எப்பொழுதும் கவனிக்கிற மருத்துவமனைக்கு அழைச்சுட்டு வந்துருக்கேன், மருத்துவர் உங்களிடம் பேசணும்னு சொல்ராங்க அய்யா.", என்று அழுதுகொண்டே பேசினான் வெற்றி.
சற்று பதற்றம் குறைவாகவே தெரிந்தது முகிலனுக்கு, ஏனெனில் பல முறை இதுபோல் உடல் நலம் குறைந்ததுண்டு, மீண்டும் எழுந்ததும் உண்டு. ஆனால் முகிலனின் வாழ்வில் பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது என்று அப்போது அவனுக்குத் தெரியவில்லை. தொலைபேசியை மருத்துவர் தன் கையினில் வாங்கி, “முகிலன், உங்க அப்பாவின் உடல்நிலை மோசமாகத்தான் உள்ளது. நீங்கள் இப்பொழுதே கிழம்பினால் அவரை உயிருடன் பார்க்கும் வாய்ப்புள்ளது”, என்று மட்டும் கூறி மருத்துவர் நகர்ந்தார். "அய்யா, நீங்க வாங்க அய்யா எனக்கு பயமா இருக்கு.", என்று வெற்றி விடாமல் பதறிக்கொண்டு அழத்தொடங்கினான். மருத்துவர் கூறியது முகிலனின் இதயத்தை ஆட்டியது. "உடனே கிளம்புறேன், நான் வரும் வரை பார்த்துக்கொள் அப்பாவை", என்றான் முகிலன்.
தன் மனைவி பிள்ளைகள் என அனைவரும் உடனே கிளம்பினர். 16 மணி நேரப்பயணம், இரண்டு இடத்தில் மாறவேண்டும் அங்கு ஒரு 5 மணிநேரம், இந்தியா வந்தவுடன் தன் சொந்தஊருக்குச் செல்ல 3 மணி நேரம். மொத்தம் 24 மணி நேரம் கழித்துதான் தன் தந்தையைக் காணமுடியும் என்ற ஏக்கம் கொஞ்சம் தலைதூக்கியது முகிலனுக்குள். சூழ்நிலையறியாது இரு குழந்தைகளுக்கும் தீடீர்ப்பயணத்தின் உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
"அப்பா, நீங்க எங்க இரண்டுபேருக்கும் எப்பவும் நன்மையை மட்டும் தான் செய்றீங்க, எங்க இரண்டு பேரையும் ரொம்ப சுகமா வளக்குறீங்க, நீங்க அதிகமா கஷ்டப்படுறீங்க எங்களை சந்தோசமா வைத்துக்கொள்வதற்கு. இப்பகூட எங்களை உற்சாகிக்கும் வகையில் இன்ப அதிர்ச்சியாய் வெளிநாட்டு பயணம். எப்படி உங்களால் இப்படி ஒரு சிறந்த அப்பாவாக இருக்க முடிகிறது?", என்றார்கள் இருக்குழந்தைகளும். “நான் சிறந்த அப்பாவாக இருப்பதற்கு ஒரே காரணம் எங்க அப்பா மிகச்சிறந்த அப்பா என்பதலால்”, என்று தமிழிலேயே பேசினான் முகிலன். "அப்பா, நீங்க பேசுவது எதுவும் புரியவில்லை", என்று ஆங்கிலத்தில் கூறிச் சிரித்தனர் குழந்தைகள். முகிலனின் தோள்மேல் கையைவைத்து ஆறுதலாய் தடவினாள் முகிலனின் மனைவி மித்ரா. எத்தனையோ முறை பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத்தர முயற்சித்த மித்ராவை அதிக கேலி செய்தது முகிலன் தான். இன்று தன் மனதில் ஆழமாய் இருக்கும் வலியை அவனின் தாய் மொழிதான் சரியாக வெளிப்படுத்துகிறது. ஆனால், அதனைப்புரிந்துகொள்ள அந்த பிள்ளைகளுக்குத் தெரியவில்லை. வெட்கத்தில் குனிந்துகொண்டான் முகிலன். மித்ரா தன் பிள்ளைகளிடம் தமிழ் பேசினால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் செயலியை எடுத்துத்தந்தாள்.
தன் தவறை எண்ணி வருந்திக்கொண்டு தமிழில் மீண்டும் பேசத்தொடங்கினான் முகிலன். "ஊர் சுத்திப் பார்க்க போகவில்லை நாம், உலகத்தைச் சுற்றும் அளவிற்கு என்னை உருவாக்கியவரை பார்க்கச் செல்கிறோம். என்னுடைய இரண்டு வயதில் என் அம்மா இறைவனிடம் சென்றுவிட்டார்கள். கைப்பிள்ளையாக இருந்த என்னைத்தாலாட்டி, சீராட்டி, நடைவண்டி போல் அப்பாதான் என்னுடனே நடந்து விரல்பிடித்து நடக்க சொல்லிக்கொடுத்தார். கீழேவிழும்போதெல்லாம் பதறிக்கொண்டு ஓடிவந்து என்னைத் தூக்கிக்கொண்டு என் வலிக்கு அவர் அழுவார். புதுப்புது முயற்சிக்கு உந்துதலாய் இருப்பார். அதிக மதிப்பெண் எடுக்கவில்லையென்றால் பரவாயில்லை, பாடம் புரிஞ்சா சரின்னு சொல்லுவார். விளையாட்டுதான் நல்ல ஆரோக்கியம் தரும், பெரியவன் ஆனாலும் எப்பொழுதும் நீ விளையாடிக்கொண்டே இருக்கனும்ன்னு சொல்லுவார். வேலையாள் இருந்தும் சமையல் எனக்கு அப்பா தான் சமைக்க கத்துக்கொண்டு சமைப்பார். சாப்பிட விதிவிதமாய் நான் கேட்ப்பேன் அப்பாவிடம், ரகரகமாய் அப்பா செய்து தர நான் சாப்பிடுவேன். அப்பா ஒருமுறை உப்மா சமைக்கையில் நான் உப்பிற்கு பதில் ஒரு டப்பா சக்கரையைக் கொட்டிவிட்டேன், அப்பா என்னை அதற்கு அதட்டாமல், "அடடே கேசரி நல்லா இருக்கே!" என்று பாராட்டினார். என் அருகில் மட்டுமே எப்பொழுதும் இருக்குறமாதிரி இருக்கும், இருந்தும் தொழிலில் அப்பா தான் முதல் இடத்தில் இருப்பார். ஒரு நாள் கூட என்னை எந்த சொந்தங்களிடம் விடமாட்டார்.
எல்லா நாளும் ஒரே மாதிரி நாளாகச் செல்லவில்லை எனக்கும் அப்பாவிற்கும். நீச்சல் கத்துக்கொடுக்கையில் ஒருமுறை நான் நீரில் மூழ்கி விட்டேன், அப்பா அப்பொழுது பதறி அலறிக்கொண்டு அழுதது இன்றும் என் நினைவில் உள்ளது. எனக்கு முதல் மீசைவளர்வதைக்கண்டு அதனை முறுக்கிவிட்டு முதலில் பூரிப்படைந்தது அப்பாதான். சிகரெட் பிடிக்கையில் சிக்கிக்கொண்டபோது, "அழகான வாழ்க்கை உனக்காக காத்திருக்கிறது, ஏன் இந்த பொய்ப்புகைக்குள் கரைகிறாய்? நீ உள்ளிழுக்கையில் உன் உடல் கெடுகிறது, வெளியிடுகையில் இயற்கையும் உன் அருகில் இருப்பவரும் பாதிப்படைகிறார்கள். ", என்று நாசுக்காக அறிவுரைக்கூறினார். அப்பாவின் உலகம் நான் மட்டும் தான் என்றானது. நான் விரும்பிய வணிகக் கல்வி, நான் விரும்பிய கல்லூரியிலேயே சேர்த்தார். உடன் இருந்த நண்பர்கள் "அப்பாவிடம் இருப்பது போதும், எங்களுடன் விடுதியில் வந்துவிடு, புது உலகத்தை காட்டுகிறோம்", என்றதும் அப்பா எதுவும் சொல்லாமல் என்னை அங்கு சேர்த்துவிட்டார். அங்குத்தொடங்கியது முதல் பிரிவு, இன்று வரை சேர முடியவில்லை.", என்று கூறிப் பெருமூச்சுவிட்டான் முகிலன்.
பேசியபடியே இந்தியா வந்துச்சேர்ந்தனர். ஒருவார்த்தைகூட தவறவிடாமல் கல்வெட்டுகளில் செதுக்குவது போல் கூர்ந்து கவனித்த குழந்தைகள், "ஏன் நீங்க இப்படி ஒரு அப்பாவை விட்டுட்டு நீங்க இங்க வந்து வாழுறீங்க?", என்றனர். கல்லூரியில் பிரிந்த நான், மீண்டும் வேலை கிடைத்ததற்காகவும் பிரிந்தேன். பிரிந்து இருப்பது எனக்குப் பழகிவிட்டது. ஏன் என்றால் எனக்கு அதிகம் நண்பர்கள் கிடைத்தனர். என்னைச்சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் இருக்கும். உன் அம்மாவைக்கூட அப்படிதான் நான் வேலை செய்யும் இடத்தில் கண்டு பழகினோம்.", என்றான் முகிலன். "அப்போ, உங்களுக்கு இருக்குற மாதிரி உங்க அப்பாவுக்கும் நிறைய நண்பர்கள் இருந்தார்களா? இல்லை தெரிந்தவர்கள் இருந்தார்களா?", என்று தன் குழந்தை வினவ முகிலன் தர்மசங்கடமான நிலையில் தள்ளப்பட்டான்.
வெற்றியின் அழைப்பு சற்று முகிலனை படபடக்கச்செய்தது. "சின்னய்யா, சீக்கிரம் வாங்க கொஞ்சம்." என்று கூறினான் வெற்றி. வெற்றி ஏதாவது கெட்ட செய்தி சொல்லிவிடுவானோ என்ற பயத்தில், தன் தந்தையின் உடல்நிலையைக்கூட கேட்க்காமல், "இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவோம்.", என்று பதில் அளித்தான் முகிலன். முகிலனின் அமைதியை உடைக்குமாறு, "அப்பா, நீங்க ஏன் உங்க அப்பாவை விட்டுட்டு தெற்கு ஆப்பிரிக்கா வந்தீர்கள்?", என்றனர் முகிலனின் குழந்தைகள். "உங்க அப்பான்னு சொல்லக்கூடாது, தாத்தா என்றுதான் அழைக்கணும்", என்றுக் குழந்தைகளைக் கண்டித்தாள் மித்ரா.
"நல்ல வேலைகிடைத்தது, வழக்கம் போல் நான் அதில் இன்னும் அதிக கவனம் செலுத்தினேன். சில ஆண்டுகள் ஓடியது, வருடத்திற்கு ஒருமுறை இரண்டு நாள் நான் அப்பாவிடம் செல்வேன். பின்பொருநாள் உங்க அம்மாவை பற்றிக்கூறினேன். "உனக்கு எது பிடிக்குதோ அதைச் செய்", என்ற ஒரு வரிதான். வெளிநாட்டில் வேலை நீங்களும் வாங்க என்றேன், "இல்லப்பா, அம்மா நினைப்பில் இப்போதான் என்னால இருக்கமுடியுது, இதை நான் அனுபவிக்க விரும்புகிறேன்", என்றார் அப்பா. அதனால் நானும் உங்க அம்மாவும் மட்டும் இங்கு வந்துவிட்டோம். அப்பாவை திரும்பிப்பார்க்கவிடாமல் என் கழுத்தை இருக்க பிடித்துக்கொண்டது வேலை, காசு, பணம், சொத்து, சொகுசு வாழ்க்கை என அனைத்தும்.
சொல்லிமுடிக்கையில் ஓட்டுநர் நிறுத்தினார் மருத்துவமனை வாசலில். வாசலில் இறங்கியதும், வெற்றி ஓடிவந்து முகிலனின் கால்களைப்பிடித்து அழத்தொடங்கினான். "சின்ன அய்யா, இப்படி ஆகிருச்சே பெரிய அய்யாவுக்கு. இனி நான் என்ன செய்வேன் அய்யா. எல்லாம் போச்சே, எல்லாம் போச்சே.", என்று அழுதுபுலம்பினான். முகிலனுக்குப் புரிந்தது தன் தந்தையின் உயிர்ப் பிரிந்தது என்று.
"அப்பா, அப்பா", என்று அலறிக்கொண்டு ஓடத்தொடங்கினான். உள்ளே அனுமதி இல்லை என்று அங்கிருக்கும் செவிலியர் சொல்ல, வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்தவாறுக் கதறி அழத்தொடங்கினான். "ஐய்யோ அப்பா, உங்கள விட்டுட்டேனே? உங்க அருமை தெரியாமல் நான் உங்கள விட்டுட்டேனே?, அம்மா இறந்த வலியைக்கூட மறந்து என்கூட இருந்தீங்க உங்கள நான் தனியா விட்டுட்டேனே? என் நண்பர்கள், என் வாழ்க்கை, என் பிள்ளைகள்ன்னு சுயநலவாதியாக இருந்த நான் என் அப்பான்னு ஒரு நிமிஷம் கூட நினைக்காமல் விட்டுட்டேனே அப்பா? கஷ்டப்பட்டு என்னை வளர்த்த உங்களுக்கு என் கடமையை திரும்பச்செய்யாமல் தவறவிட்டுட்டேனே? நான் தான் உலகம்ன்னு வாழ்ந்தீர்கள் ஆனா இப்போ இந்த உலகத்தை விட்டும் போயிட்டிங்க என்ன விட்டும் போயிட்டிங்களே அப்பா", என்றுக் கூறி கதறிக்கதறி அழுது உருண்டுபுரண்டான். அழுகைக்கு மொழி தேவையில்லை, ஏன் முகிலன் அழுகிறான் என்று முகிலனின் குழந்தைகளுக்குப் புரிந்தது.
முகிலன் கதறி அழுதுக்கொண்டிருந்ததை பார்த்த மருத்துவர் அருகில் வந்து, " முகிலன் என்ன ஆச்சு, உங்க அப்பா நல்லா தானே இருக்கிறார். நான் கூட "He is alright" தான வெற்றியிடம் சொன்னேன்.”, என்றுக் கூறி மெல்ல சிரித்தபடி நகர்ந்தார். "என்ன அப்பா உயிரோடு இருக்கிறாரா?", என்றுக் கூறி அழுதுகொண்டே சிரிக்கத்தொடங்கினான். வெற்றியைப் பார்த்து முகிலன் முறைக்கையில், "அய்யா, மருத்துவர் சொன்னது புரியல அய்யா, நான் ஏதோ ஆள் அவுட் (ALL OUT) ன்னு சொன்னாரு மருத்துவர் நினைத்துவிட்டேன்", என்றுக் கூறி தலையைச்சொரிந்தான் வெற்றி.
"அய்யா, ஒன்னு சொல்றேன், எல்லாருக்கும் எல்லாம் கிடைச்சுறாது, இந்த பிறவியில் மட்டும் தான் நீங்க மகன் பெரிய அய்யா அப்பா. விட்டுட்டேனே விட்டுட்டேனே ன்னு இவ்ளோ நேரம் நீங்க புலம்புனத எல்லாம் செய்றதுக்கு உங்களுக்கு கிடைச்சுருக்க இரண்டாவது வாய்ப்பு, இதையும் விட்டுராதீங்க.", என்றான் வெற்றி.
ஏமாற்றம் => மாற்றம் ! -ஸ்ரீதனா

Comments