என் உதிரத்தில் பச்சைகுத்திய உறவுகள்...!
- Sridhana
- Jul 3, 2020
- 2 min read
முகத்தில் சிரிப்பு முந்துகிறது எழுத கைகள் தொடங்குவதற்குள். மனதில் ஓடும் மலரும் நினைவுகள் அப்படி. ஆறு மணிக்கே எழுந்து என் நான்கு அத்தைகளையும் அத்தையுடன் உறங்கும் என் மச்சான்கள் அண்ணிகளையும் பார்த்து, “நீங்க தூங்குறீங்களா?, விடிஞ்சுருச்சு, இன்னுமா தூங்குறீங்க..’’ என்று, அவர்களின் காது பக்கத்தில் உட்கார்ந்து பேசிப் பேசி எழுப்புவதில் தனி சுகம். அவர்கள் எழுந்து என்னை அடிக்க வருவதற்குள் ஓர் ஓட்டம் பிடித்து ஓடிவிடுவேன்.
அய்யாமா, அய்யாப்பா, அத்தைகள் மாமாக்கள், பெரிய அண்ணி, சின்ன அண்ணி, நான்கு மச்சான்கள் அத்தை மகள்கள், இவர்களோடு எங்கள் அம்மா அப்பா தம்பிகள் என்று எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து கதைப்பேசி டிபன், காப்பி குடித்துமுடிப்பதற்குள் மதியம் வந்துவிடும்.
குழம்பு கொதிக்கும் வாசனை சமையல் அறைக்குள் எங்களை இழுக்கும். கண்ணைப்பறிக்கும் வண்ணத்தில், மேலே எண்ணெய் மிதக்கும் பாத்திரத்தில். இறந்ததை மறந்து குழம்பிற்குள் துள்ளும் மீன்கள்... ஒரு வகை, இரண்டு வகையில்லை, ஒவ்வொருவருக்கும் பிடித்த வகை அனைத்தும் தயாராகும்.
மிதப்பது, பறப்பது என அனைத்தும் எங்களுக்குக்காகத் தயாராகிக்கொண்டிருக்கும். பெரியவர்கள் கேபிள் டிவியில் போடும் புதுபடத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில் சின்னவாண்டுகள் நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரூபாய் வாடகை சைக்கிள் எடுத்து அருகில் இருக்கும் தெரு அனைத்திலும் சுத்தி வந்து ஆட்டம் போடுவோம்.
வீட்டின் அருகில் உள்ள கடையில் கோலி சோடா, சுர்ர்ரென்று ஏறும் சூடமிட்டாய், கடலைமிட்டாய், கடித்தவுடன் தேன் சொட்டும் தேன் மிட்டாய், அச்சு வெல்லம், விரல்களில் மாட்டிக்கொண்டு நொறுக்கும் கலர் அப்பளம், எலந்தவடை என அவ்வப்போது வாங்கிக் கொறித்துக்கொள்வோம்.
பசி வயிற்றைக் கில்லுகையில்தான் வீட்டிற்குள் செல்வோம். வெயிலில் ஆடிய வியர்வை எல்லாம் தொட்டியில் குதித்துக் குளித்துவிட்டு, அறை குறை துணியோடு வீட்டின் நடுவில் தாளம் போடுவோம்.
அய்யாமா ஊட்ட நாங்கள் சாப்பாட்டின் அளவு தெரியாமல் வயிறு வெளியே தள்ளும் அளவிற்குச் சாப்பிடுவோம். இரவு வரை மதிய உணவின் ருசி நிற்கும். சீட்டுக்கட்டு ஆட்டம், பல்லாங்குழி என அனைத்தும் இருந்தும் மொட்டை மாடியில் நொண்டி அடித்து தொட்டுத் தொட்டு அவுட் ஆக்குவதில் ஆர்வம் அதிகம்.
கிரிக்கெட் எப்பொழுது விளையாடினாலும் நடுவர் நான்தான். மூத்த மச்சான் என்ன சொன்னாலும் அதுதான் நடுவரான என் தீர்ப்பும். அவ்வளவு மரியாதை இல்லை; அவ்வளவு பயம், அவங்க மிதிக்கு. அவுட் ஆனாலும் இல்லை என்பேன், சிக்சர் அடித்தாலும் அவுட் என்பேன். கட்டையால் அடிவாங்காமல் ஓடி ஒதுங்கிக்கொள்வேன் சமையல் அறையில் அம்மாவின் சேலைக்குள்.
மொட்டை மாடி நிலாச்சோறு, நிலவு பார்க்க ஆழமான தூக்கம். இப்படித்தான் தினமும் நகரும் எங்கள் அழகான கூட்டுக் குடும்ப வாழ்க்கை. அன்பான கண்டிப்பு, அழகான அரவணைப்பு, நினைத்து நினைத்து ஏங்கும் பாசம்... அந்த ஆட்டம்... அந்தப் பாட்டம்... சொர்க்கத்தைப் பார்த்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று அனைவரும் வெவ்வேறு இடங்களில் செட்டில் ஆகிவிட்டோம். எங்கள் விருதுநகர் வீடு மட்டும் நினைவுகளைச் சுமந்துகொண்டு எங்களின் வருகைக்காகக் காத்திருக்கிறது!
-ஸ்ரீ காமாட்சி பாலமுருகன்
அழகான பதிவு!
உறவுகள் - அதன் மதிப்பு அவர்களோடு வாழ்ந்தால் தான் புரியும்...