மூன்றாம் பிறையின் முக்கோனப்பார்வை !
- Sridhana
- Jun 9, 2020
- 1 min read
மூன்றாம் பிறை
முழு நிலவாக இருந்த கதாநாயகியின் வாழ்க்கை எதிர்பாராத ஒரு விபத்தினால் சுயநினைவின்றி புதுநிலாப்போல் நிற்கிறாள். வாழ்வே இருண்ட நிலையில், சூரியன் ஒளிபோல் கதாநாயகனின் வருடும் அன்பும் மனதிற்கு இதமான அரவணைப்பும் கதாநாயகிக்கு கிடைக்கிறது. பகலவன் அன்பு பெருகுகையில் மெல்ல மெல்ல நகர்ந்து பகலவன் ஒளியோடு மீண்டும் ஒளிரத்தொடங்குகிறது அந்த நிலா, ஆம், நம் கதையின் கதாநாயகிக்கு கதாநாயகனிடம் இருந்து கிடைக்கும் அன்பு குழந்தைக்கு கிடைக்கும் அரவணைப்பாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது.
தனித்தே வாழ்ந்து வந்த கதாநாயகனுக்கு தன் தூயஅன்பை கொட்டித்தீர்க்க ஓர் இடம் கிடைத்தது, கொட்டித்தீர்த்த அன்பை மீண்டும் மீண்டும் தனக்குள் சுரந்து, கதாநாயகியை அன்பின் தாழியிலேயே மிதக்க செய்தான். அழகான மூன்றாம் பிறையாய் ஒளிர்ந்த கதாநாயகி, இயற்கையின் சதியோ? இல்லை அவள் விதியோ?. இழந்த நினைவை மீண்டும் பெறுகிறாள். ஒரே நொடியில் சுக்குநூறாய் உடைந்தது அந்த அன்புத்தாழி. நிகழ்ந்த விடயம் அனைத்தும் மறந்து மறைந்த காலமும் புதைந்து போனது. மீண்டும் மீண்டும் முயற்சித்தும் பலன்யேதுமில்லாத கானல் நீராய் எட்டாத தூரத்துக்கு போனது கதாநாயகியின் அன்பு. எட்டவும் எட்டாது என்றும்.
இது சொல்லமறந்த வார்த்தை அந்த கதையில். இதுவும் கடந்து போகும் என்று வாழத்தொடங்கினாலும், இதுவும் பழகிப்போயிருக்கும் அந்த கதையின் நாயகனுக்கு. தன் வாழ்நாள் முழுதும் நினைத்து நினைத்து நாயகியின் முகத்தை காண்பான் முப்பது நாளில் ஒருநாள் மட்டும் அழகாய்த்தோன்றும் அந்த மூன்றாம் பிறையைக்கண்டு. ஆனால் அன்பு காட்டத்தெரிந்தவன் என்றும் ஓங்கி உலகில் நிற்பான் பகலவன் போல்.
நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய விடயம் இது. பலரின் வாழ்வும் இதுபோல் தான். தனக்கு உதவுபவர்களை தான் நல்லநிலைமைக்கு வந்தபின், உதவுபவர்களை மறக்கின்றனர், கடந்து வந்த பாதையையும் மறக்கின்றனர். வலி உணர்ந்த உத்தமர்கள் அந்த வழியில், வலியில் யாரையும் பயணிக்கவிடமாட்டார்கள்.
-Sridhana
Nice.....Good..
ஒளிறும் Moonறாம் பிறை ,
காட்டுது மனிதனின் கறை...