top of page

மறைத்த காதல் - பாகம் 11

  • Writer: Sridhana
    Sridhana
  • May 3, 2020
  • 2 min read

Updated: May 3, 2020

பாகம் - 11


“துளசி, இதை கேட்பதற்கு என்னை தவறாக எண்ணவேண்டாம். நான் கன்னித்தன்மையோடு இருக்கிறேன். நீயும் அப்படித்தானே?, என்று பட்டென்று போட்டு உடைத்தான் தன் மனதில் ஓடிய கேள்வியை. துளசியிடம் இருந்து பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் மாறன். ஆனால் அமைதிமட்டுமே உளவியது. “துளசி, என்னை தவறாக எண்ணவேண்டாம். எதையும் திருமணத்திற்கு முன்பு பேசுவது நல்லது, அதனால் தான் நான் முதல் நாளிலேயே உன்னிடம் கேட்டுவிட்டேன். இதற்கு பதில் கூறவேண்டாம் நீ, நான் உன்னை நம்புகிறேன். என்னை மன்னித்துவிடு”, என்று தவறு செய்துவிட்டோம் என்ற குற்றயுணர்ச்சியோடு புலம்பினான். இருந்தும் பதில் வரவில்லை துளசியிடமிருந்து. மாறனின் கைப்பேசியை எடுத்து பார்த்தான், துளசியின் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றான் மாறன்.


சில நிமிடங்களில் துளசியின் தந்தையின் கைப்பேசியில் இருந்து அழைப்பு வந்தது. தூக்கி வாரிப்போட்டது மாறனுக்கு. பதட்டத்தை வெளியில் காட்டாமல் கைப்பேசியை எடுத்து “மாமா, சொல்லுங்க”, என்றான் மாறன். “மாமா வா? நான் துளசி பேசுகிறேன். பேட்டரி சார்ஜ் காலி போல் இருக்கிறது. நீங்கள் பேசும்போதே கட் ஆகிருச்சு. என்ன சொல்ல வந்தீங்க?”, என்று எதார்த்தமாக பேசினாள் துளசி. மாறனுக்கு வேகமாக துடித்த இதயம் சற்று இயல்பாக துடிக்க ஆரம்பித்தது, இருந்தும் எதுவரை மாறன் பேசியதை துளசி கேட்டாள் என்று தெரிந்துகொள்ள துடித்தான் மாறன். “ஓ அப்படியா துளசி, நான் பேசியது எதுவரை கேட்டாய் நீ?”, என்றான் மாறன். “துளசி, இதை கேட்பதற்கு என்னை தவறாக எண்ணவேண்டாம் என்று எதோ சொல்ல வந்தீங்க நீங்க, உடனே கட் ஆகிருச்சு. அப்படி என்ன கேள்வி அது?”, என்று மாறனின் கேள்விக்கு பதில் கூறிவிட்டு மீண்டும் மாறனுக்கு ஒரு கேள்வி கேட்டு முடித்தாள் துளசி.


பெருமூச்சுவிட்ட மாறன், “இல்ல உங்க அம்மாவை பற்றி கேட்க நினைத்தேன்.” என்றான். “ஓ ! நான் தான் ஏற்கனவே சொன்னேனே.. என் ஏழு வயதில் என் அன்னை உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்கள், நான் அம்மா அன்பிற்காக அதிகமாக ஏங்கியுள்ளேன். ராகவன் என்னை பல நேரம் சிரிக்க வைப்பான். இருந்தும் அம்மா போல் வராது அல்லவா?”, என்று கூறி வருந்தினாள் துளசி. “நீ சிரிக்குற சிரிப்பில் தான் உங்க அம்மா வாழ்கிறார்கள். அந்த சிரிப்பு மாறாமல் பார்த்துக்கொள்வேன் உன்னே. என்னை மன்னித்துவிடு துளசி!”, என்று வருந்தினான் மாறன். “அய்யோ இதற்கு எதற்கு மன்னிப்பு கேட்கிறீர்கள்.? முதல் நாளே மன்னிப்பா”, என்று வெகுளியாக பேசினாள் துளசி. தன் தவறை உணர்ந்த மாறன் இனி தன் வாழ்நாளில் இந்த கேள்வியை கேட்டகூடாது என்று முடிவெடுத்தான்.


“மாறன்”, என்ற துளசியின் குரல் வருத்தத்தில் இருந்த மாறனை மெல்ல வருடியது. “சொல் துளசி”, என்றான் மாறன்.

“திருமணத்திற்கு பின் நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். சின்ன சின்ன மாற்றங்கள் நான் மாற்றிக்கொள்வேன் ஆனால் என் அடையாளம் இழக்கும் எந்த காரியமும் உங்கள் உந்துதலில் செய்யமாட்டேன்... ஏழு ஜென்மங்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, இருப்பது ஒரே ஒரு ஜென்மம் அதுவும் இந்த ஜென்மம் மட்டுமே என்றெண்ணி இதுவரை ஒவ்வொரு நொடியும் ரசித்து ரசித்து வாழ்ந்து வந்தேன். என் மூச்சுக்காற்று நான்தான் விடவேண்டும், என் வாழ்க்கையின் சில முடிவுகள் நான் தான் எடுக்கவேண்டும். நீங்கள் என்னிடம் இருந்து அந்த உரிமையை பறிக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.”, என்றாள் துளசி. “புரிகிறது எனக்கு... உன் உரிமை எதுவும் காற்றில் கரையாதவாறு நான் பார்த்துக்கொள்கிறேன். நீயும் நானும் வேறில்லை இனி, நாம் என்று பேசிப்பழகுவோம்.“, என்றான் மாறன்.


“அப்பா அழைக்கிறார், நான் பிறகு பேசுகிறேன்”, என்று சிரித்தபடியே கூறினாள் துளசி. மாறன் பதில் பேசுவதற்குள், “அப்புறம் மாறன், நான் கன்னித் தன்மையோடு தான் இருக்கிறேன். நீங்கள் இதை நினைத்து குழம்பவேண்டாம்”, என்று கூறி கர்வமாய்ச் சிரித்தாள் துளசி.





-தொடரும்...

1 Comment


kani mozhi
kani mozhi
May 02, 2020

Semaya irukku da...😘😘

Like

Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page