மறைத்த காதல் - பாகம் 31 !
- Sridhana
- Jul 3, 2020
- 2 min read
Updated: Jul 3, 2020
பாகம் 31 !
பலகைமேல் இருந்த துளசியின் மாற்று செருப்பில் இருந்து கீழே விழுந்தது, ஒரு சின்ன துணிப்பை. மாறன் வியப்போடு என்னவென்று துணிப்பையை துறந்தான். இரண்டு குங்குமப்பூ பெட்டி உள்ளே இருந்தது, அதனோடு ஒரு காகிதம் மடித்திருந்தது. விரைவாக அதனைதுறந்தான் மாறன். "நான்கு ஆண்டு தவத்தின் வரத்திற்கு என் சின்ன பரிசு", என்று இருந்தது. மாறனுக்கு சுர்ர்ர்ர்ர் என்று ஏறியது மண்டைக்கு. "துளசி, துளசி" என்று வெறிபிடித்த மிருகம் போல் கத்தினான் மாறன்.
துளசிக்கு ஒன்றும் புரியாமல், "ஏன் இப்படி கத்துகிறீர்கள்? என்ன நடந்தது அப்படி ?", என்று சற்றுபதற்றமாக பேசினாள். "என்ன இது?, யார் அனுப்பியது இது? ஏன் இங்கு செருப்புக்கு அடியில் இதை ஒளித்துவைக்கவேண்டும்?, இதுதான் உங்க அப்பா உன்ன வளர்த்த அழகா?", என்று கோபமாக நீட்டினான் கடிதத்தை. துளசி அதனை வாங்கி சத்தமாக படித்தாள், ஆனால் மனதிற்குள் "எவ்வளவு சொல்லியும் மீண்டும் இப்படி செய்துள்ளார்களே?", என்று யோசித்தாள். சற்றும் தாமதிக்காமல், "மாறா, இதற்குதான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா? நசீமாவிடம் நான் கூறி இருந்தேன், நசீமா தான் வைத்துஇருக்க வேண்டும்? வேறு யாரு இங்க வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்குறீர்கள்?", என்று கோபம் கலந்த நக்கலாய் பேசினாள் துளசி.
மாறனின் மனம் ஆறுதலடையவில்லை. "எங்கே நசீமாவை இப்பொழுதே அழைத்து உறுதி செய் என்முன்", என்றான் மாறன். "இரவு மணி இரண்டாகிவிட்டது. நாளை காலை இருவரும் கேட்கலாம். நானே அவங்க கைபேசியில் அழைத்து உங்கள் முன்கேட்கிறேன். ஆனால் அவர்தான் வைத்துள்ளார் என்று தெரியவந்தபின் நான் ஒரு நொடிகூட இந்த வீட்டில் இருக்கமாட்டேன். என் அப்பாவின் வீட்டிற்கும் போகமாட்டேன். இதற்கு சரியென்றால் சொல்லுங்கள், நாளை அவங்க கைபேசியில் அழைத்து பேசுகிறேன். சந்தேகம் ஒரு புகைபிடிக்கும் பழக்கத்தை விட கொடுமையானது. தன்னையும் கெடுத்து சுற்றி இருப்பவரையும் கொள்ளாமல் கொள்ளும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். நம் பிள்ளை வளரத்தொடங்கிற்று, இந்நிலையில் இந்த சந்தேகம் உங்களுக்குள் தொடரக்கூடாது. இது அனைத்தையும் விட என் அப்பாவின் வளர்ப்பு சரிதான் என்று நான் நிரூபிக்கவேண்டியுள்ளது உங்களிடம்.", என்று மிக நிதானமாக பேசினாள் துளசி.
"இவ்வளவு உறுதியாக பேசுகிறாளே, இப்பொழுதும் நான் தான் துளசியை சந்தேகப்பட்டு தவறு செய்துவிட்டேனோ?", என்று தனக்குள்ளேயே புலம்பத்தொடங்கினான் மாறன். மாறனின் கோபம் தணிந்து பொறுமையாக யோசிக்கத்தொடங்கினான். "துளசி, அதெல்லாம் வேண்டாம். நான் உன்னை நம்புகிறேன்.", என்று மெதுவாக கூறினான். இதழ்கள் மட்டும் தான் அந்த வார்த்தைகளை வீசியது, மாறனின் மனதளவில் இதை கொடுத்தது ஒரு பெண் தானா? என்று உறுதிசெய்யவேண்டும் என்ற எண்ணம் வெறிபிடித்து ஓடியது.
சட்டென்று துளசி, "உங்கள் பேச்சில் ஒரு துளி நம்பிக்கைகூட இல்லை மாறா!", என்றாள்.
மாறன் துளசியின் அருகே வந்து துளசியை தொடமுற்பட்டான். துளசி மாறனின் கைகளைதட்டிவிட்டு விலகி நின்றாள். ஒருநாளும் துளசி இதுபோல் நடந்துகொண்டது இல்லை. "துளசி, நான் சொல்வதை கொஞ்சம் என் நிலையில் இருந்து புரிந்துகொள். திடீரென்று குறுஞ்செய்தி வருகிறது, திடீரென்று பரிசு வருகிறது, அதுவும் சந்தேகப்படும்படி வார்த்தைகளோடு? நான் என்ன நினைப்பது.? இதுவரை உன்னிடம் நான் எதாவது கோபமாக பேசியிருப்பேனா? இல்லை உன்னை திட்டியிருப்பேனா? நீயே என் நிலையில் இருந்து யோசி", என்று எடுத்துரைக்க ஆரம்பித்தான் மாறன். "தவறான கோணத்தில் பார்த்தால் தவறாகத்தான் தெரியும் அனைத்தும். முன்பே சொல்லியுள்ளேன், தாரத்தை சந்தேகப்படுவது தாயை சந்தேகப்படுவதற்கு சமம். நீங்கள் செய்யும் அனைத்தையும் பொறுத்துக்கொள்வதற்கு காரணம் நீங்கள் என்மேல் வைத்துள்ள காதலுக்காகவும், நான் உங்கள்மேல் வைத்துள்ள அன்பிற்காகவும் தான்.", என்று கூறி தபல வயிற்றில் கைவைத்து அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
"துளசி, என்ன ஆச்சு வலிக்குதா? என்ன செய்கிறது?", என்று பதறினான் மாறன்"எப்படி உங்களால் இப்படி மாறி மாறி பேசமுடிகிறது - ஒரு நேரம் சந்தேகம், ஒரு நேரம் பாசம், ஒரு நேரம் கோபம். என்னதான் உள்ளது உங்கள் மனதில்?", என்று கூறி எழுந்து சென்றாள் துளசி. மாறனுக்கே ஒன்றும் புரியவில்லை ஏன் இப்படி எல்லாம் அவனுக்கு தோன்றுகிறது என்று. அவன் மனதில் ஓடிய பெரிய கேள்வி, "தன்னால் எப்படி அப்பாவாக முடிந்தது தான். இதனை துளசியிடம் கேட்டால் ஏன் திருமணத்திற்கு முன்பே இந்தக்குறையை சொல்லவில்லை என்று கோபம் கொள்வாள். கேட்காமல் இருக்க இருக்க பார்ப்பது அனைத்தும் தவறாகவே தெரிகிறது", என்று சரமாரியாக ஓடிக்கொண்டே இருந்தது. இறுதியில் மறுநாள் துளசிக்கு தெரியாமல் தன்னால் குழந்தைபெற்றுக்கொள்ள முடியுமா என்று மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான் மாறன். “நாளை ஒருமுடிவுகட்ட வேண்டும் இதற்கு”, என்று மாறன் யோசித்தவாறே உறங்கினான். “வயிற்றில் கையை வைத்து தப்பிவிட்டேன் இன்று. ஆனால் நாளை மாறன் நிகழ்ந்ததை மறந்துவிட வேண்டும். ”, என்று வேண்டிக்கொண்டு உறங்க முயற்சித்தாள் துளசி.
-தொடரும்...

Kannamoochi aatam.. Neeya naana yar unmaiya first solranganu parkalam.. 😊😍