மறைத்த காதல் - பாகம் 12
- Sridhana

- May 5, 2020
- 2 min read
பாகம் - 12
மாறன் பதில் பேசுவதற்குள், “அப்புறம் மாறன், நான் கன்னித் தன்மையோடு தான் இருக்கிறேன். நீங்கள் இதை நினைத்து குழம்பவேண்டாம்”, என்று கூறி கர்வமாய்ச் சிரித்தாள் துளசி. இதயம் வெளியே தரையில்விழுந்து துடிப்பது போல் இருந்தது மாறனுக்கு. “மாறன், வேறு எதாவது சந்தேகம் இருந்தால் இந்த நிமிடமே தெளிவுபடுத்திக்கொள்ளலாம். சந்தேகத்தோடு நம் வாழ்வில் ஒரு நிமிடம் கூட பொய்யாக நகரக்கூடாது.”, என்று மிகத்தெளிவாக நிதானமாகப் பேசினாள் துளசி. “துளசி, நான் பேசியதை முழுதும் கேட்டாயா நீ ?, என்னை மன்னித்துவிடு துளசி. என் மனதில் பட்டதை கேட்டுவிட்டேன், அதுவும் நாம் பேசத் தொடங்கிய முதல் நாளான இன்றே கேட்டுவிட்டேன். தவறாக என்னை நினைக்க வேண்டாம் இதற்காக.”, என்றான் மாறன்.
மாறனின் பேச்சில் ஸ்வரம் குறைந்து குற்ற உணர்ச்சி அதிகம் தெரிந்தது துளசிக்கு. “இல்லை இல்லை, உங்கள் மனதில் தோன்றியதை கேட்டீர்கள். உங்கள் தந்தை உங்கள் அம்மாவை பார்த்து இதே கேள்வி தான் கேட்டாரா என்ன?. ஏனென்றால், என் தந்தையிடம் மாமா எங்கள் வீட்டிற்கு வந்தபோது ‘என் மகன் என்னைப்போல்’ என்று பெருமையாகப் பேசியதை நான் கேட்டுள்ளேன். அதனால் நானும் உங்களிடம் நீங்கள் உங்கள் தந்தை மாதிரியா என்று கேட்டுவிட்டேன். நீங்கள் என்னையும் தவறாக எண்ணவேண்டாம்.” என்று மாறன் செய்த தவறை சுட்டிக்காட்டினாள் துளசி. மாறனுக்கு வாழைப்பழத்தில் கோணித் தைக்கும் ஊசியை இறக்கியது போல் இருந்தது.
இருவருக்கும் இடையே அமைதி மட்டும் அமைதியாக நகர்ந்தது - மாறனின் கோபம் கலந்த குற்ற உணர்ச்சியின் உச்சக்கட்டம்! அதையும் அழகாய் கலைத்தது துளசியின் வார்த்தைகள்.
“மாறன், இந்த பேச்சைவிட்டுவிடுவோம். இப்படி நீங்கள் அமைதியாக இருந்தே மிச்ச நேரத்தை முடிக்கப்போகிறீர்களா? இல்லை, நம்ம துளசிதான சொன்னாள் என்று எதார்த்தமாக எடுத்துக்கொண்டு இன்றில் மீதம் இருக்கும் நேரத்தை அழகானதாக மாற்றப்போகிறோமா?”, என்று செல்லமாக அதட்டினாள் துளசி. “நம்ம துளசியில்லை என் துளசி நீ”, என்று கூறி மாறன் நடந்ததை மறந்து பேச ஆரம்பித்தான். “நீங்கள் கவிதை எழுதுவீங்களோ?”, என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் துளசி. “தமிழ் மீது அதிகம் பற்றுள்ளது, ஆனால் இதுவரைக்கும் கவிதை எழுதியதில்லை. உன்னைக்கண்டதும் காதல் வந்தது, கவிதைக்கூட வரலாம் இனி, அவ்வளவு அழகு நீ !”, என்று சொல்லி மெல்லச்சிரித்தான் மாறன். “அழகா? நானா?, நீங்கள் நல்ல சிவப்பு, நான் கொஞ்சம் புது நிறம்தான். என்னையா அழகு என்கிறீர்கள்?”, என்று கொஞ்சம் தயங்கித்தயங்கி பேசினாள் துளசி.
துளசியின் தோற்றத்தினால் அவளுக்கு இருந்த தாழ்வுமனப்பான்மை மாறனுக்கு புரிந்தது. “தோற்றத்தில் இல்லை அழகு, அது ஆண்டவன் படைப்பு! உன் குணத்தில் உள்ளது அழகு, உன் தந்தை உன்னை செதுக்கியது.”, என்றான் மாறன். மாறனின் வார்த்தைகள் சற்று இதமாக இருந்தது துளசிக்கு. அதுவும் தன் தந்தையைப்பற்றி பெருமையாகப் பேசியதும் உச்சி குளிர்ந்தது துளசிக்கு.
“ஒரே நாளில் எப்படி என் குணத்தை பற்றி முழுதாகத் தெரிந்து கொண்டீர்கள்?” என்றாள் துளசி. “ஒரே நாளில் முழுதாகப் புரிந்துகொள்ள முடியாது, இனி வரும் ஒவ்வொரு நாளும் உன்னைத் தெரிந்துகொள்வேன். இப்போ பார்த்தவரைக்கும் என் துளசி அழகுதான், இனிமேலும் அழகான துளசியைத்தான் நான் உணர்வேன்”, என்று துளசியைப் போற்றித்தள்ளினான் மாறன். எதற்கும் அசராமல், “திருமணத்திற்கு இன்னும் மூன்று வாரம் தான் உள்ளது, இவ்வுலகில் யாரும் பார்த்திடாத துளசியை நீங்கள் காணப்போகிறீர்கள்”, என்று கொஞ்சம் நக்கலாகப் பேசினாள் துளசி.
-தொடரும்...







😘👌