மறைத்த காதல் - பாகம் 13!
- Sridhana

- May 8, 2020
- 2 min read
Updated: May 23, 2020
பாகம் - 13
எதற்கும் அசராமல், “திருமணத்திற்கு இன்னும் மூன்று வாரம் தான் உள்ளது, இவ்வுலகில் யாரும் பார்த்திடாத துளசியை நீங்கள் காணப்போகிறீர்கள்”, என்று கொஞ்சம் நக்கலாகப் பேசினாள் துளசி. துளசி என்ன சொல்ல வருகிறாள் என்பதை அறியாமல் ஒரு குழப்பத்தில் இருந்தான் மாறன்.
“துளசி, உன் வாழ்வில் என்ன சாதிக்க வேண்டும் என்று உனக்கு ஆசை?“, என்று துளசியின் வாயில் இருந்து வார்த்தைகளை வரவைக்க முயற்சித்தான் மாறன். “எனக்கா? அதை திருமணத்திற்கு பின் சொல்கிறேன்”, என்று பட்டென்று முடித்தாள் துளசியின் பதிலை.
மீண்டும் துளசியை வற்புறுத்தாமல், “சரி, உனக்கு வெளியூர் பயணங்கள் பிடிக்குமா? எனக்கு ரொம்ப பிடிக்கும். இதுவரை நான் தனியாக பல மலைப்பிரதேசம் என் பைக்கில் சென்றுள்ளேன். தனியாக பயனம் செல்கையில் எனக்கென பிறந்தவளோடு இதே போல் வெகு தூரம் பைக்கில் செல்லவேண்டும் என்று ஆசை. அதுவும் குளிர் தேசங்கள் செல்வது மிகவும் பிடிக்கும்.”, என்று ஆசையாக பேசினான் மாறன். இதற்கும் திருமணத்திற்கு பின் சொல்கிறேன் என்று சொல்லப்போகிறாள் என்று யோசித்த மாறனிடம் துளசி, “நான் கூட நன்றாக கியர் பைக் ஓட்டுவேன், எனக்கும் நீண்ட தூரப்பயணம் பைக்கில் போக வேண்டும் என்று ஆசை. ஆனால் எங்க அண்ணா தடியன் என்னை எங்க வீட்டைத் தாண்டி விடமாட்டான்.காட்டுக்குள், மலைப்பகுதியில் ஓட்டும்பொழுது ஒரே விருவிருப்பாக இருக்கும். பறவைகள் கத்தும் ஒலி, புத்துணர்ச்சியான காற்று, அந்தக் குளிர்ந்த பனி நம்ம முகத்தில் படும்பொழுது இயற்கை அன்னை நம்மை வருடுவதுபோல் இருக்கும்.” என்று கூறி பெருமூச்சு விட்டாள். “ஓ, இதற்கு முன் எங்த குளிர் பிரதேசம் சென்றாய்?”, என்று ஆச்சரியத்துடன் வினவினான் மாறன். “எங்கு இப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது, அங்கு நிஜத்தில் எப்படி இருக்கும் என்றும் தெரியாது, இது என் கற்பனை கனவில் கண்டது”, எனச் சொல்லி சிரித்தாள். “நேரில் கண்டது போல் எப்படி உன்னால் இப்படி வருணிக்க முடிகிறது? ம்ம், நாம் போகலாம்”, என்று துளசியின் ஆசையை மேலும் அதிகரித்தான் மாறன்.
நான் உன்னை அழைத்துசெல்கிறேன் என்று சொல்லாமல் நாம் போகலாம் என்று மாறன் கூறியது துளசிக்கு சற்று இதமாக இருந்தது. இருந்தும் எதுவும் பேசாமல் மௌனமாய் சிரித்தபடி “ம்ம்ம்”, என்று அமைதியாக கூறினாள் துளசி. பதில் வருவதற்குள் அடுத்த என்ன கேட்பது என்று மாறனின் மனம் திண்டாடியது.
“துளசி, உனக்கு பாடல்கள் கேட்க பிடிக்குமா?”, என்றான் மாறன். “எனக்கு படங்கள் பார்க்க பிடிக்கும், அதுவும் முதல் நாளில் முதல் காட்சி தியேட்டரில் படத்தின் டிக்கெட்டை கிழித்து பறக்கவிட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்து பார்க்க பிடிக்கும்”, என்று மிக உற்சாகமாகக் கூறினாள் துளசி. ஓரளவிற்கு துளசியைப் புரிந்து கொண்ட கர்வத்தோடு “இதுவும் உன் கற்பனையில் தானே?”, என்று வினவினான் மாறன். “ம்ம்”, என்ற மௌனம். “சொல்லு துளசி”, என்று மீண்டும் கேட்டான் மாறன். “அப்பா அண்ணாவிற்கு தெரியாமல் பலமுறை இப்படித்தான் பார்த்துள்ளேன். அப்பாவிடம் சொல்லிவிடாதீர்கள்”, என்று தயங்கித் தயங்கி கூறினாள் துளசி.
துளசியின் கெஞ்சல்களின் அழகை ரசித்தான் மாறன். சில நேரம் மௌனம், பல நேரம் வெகுளிப்பேச்சென மாறி மாறி பிரிதிபளித்தது துளசியின் குணம்.
“துளசி”, என்று மாறன் பேசத்தொடங்குவதற்குள் “அப்பா அழைக்கிறார், நான் பிறகு பேசுகிறேன்”, என்றாள் துளசி. “ஒரே ஒரு நிமிடம், நான் சொல்வதைக் கேட்டுவிட்டு செல்”, என்றான் மாறன்.
-தொடரும்







😍😍😘🤩