மறைத்த காதல் - பாகம் 14!
- Sridhana

- May 9, 2020
- 2 min read
பாகம் - 14
“துளசி”, என்று மாறன் பேசத்தொடங்குவதற்குள் “அப்பா அழைக்கிறார், நான் பிறகு பேசுகிறேன்”, என்றாள் துளசி. “ஒரே ஒரு நிமிடம், நான் சொல்வதைக் கேட்டுவிட்டு செல்”, என்றான் மாறன். “சரி, சொல்லுங்க மாறன்”, என்று மென்மையாகப் பேசினாள் துளசி. “இன்று நீ ரொம்ப அழகா இருந்த, வீட்டில் சொல்லி சுத்தி போடச்சொல்லு துளசி!”, என்றான் மாறன். துளசி அதற்கு “ம்ம், கண்டிப்பாக! அப்பாகிட்ட நீங்க சொன்னீங்கன்னு சொல்லி சுத்திப்போட சொல்கிறேன்”, என்று விளையாட்டுத்தனமாய் கூறினாள். “அய்யோ, வேண்டாம் வேண்டாம் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். நான் தான் சொன்னேன் என்று தைரியமாகச் சொல் துளசி. இல்லை மாமாவிடம் கொடு நானே சொல்கிறேன்” என்று சிரித்தபடியே துளசியிடம் கூறினான் மாறன். சில நொடிகள் அமைதிக்கு பின், “சொல்லுங்க மாப்பிள்ளை” என்ற கேள்வி ராஜனிடம் இருந்து வந்தது. ஒரு பேச்சுக்கு சொன்னால் இப்படி சொன்ன மாதிரியே செய்துவிட்டாளே என்று மனதிற்குள் பேசிக்கொண்டே, “மாமா, முக்கியமான விஷயம் எதுவுமில்லை மாமா. நாளை இரவு நான் பெங்களூர் செல்கிறேன். அதற்கு முன் துளசியை வெளியே அழைத்து செல்ல ஆசைப்படுகிறேன் மாமா. தவறாக நினைக்க வேண்டாம், துளசியும் நானும் சிறிது புரிந்து கொள்ள இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.” என்று எதையும் யோசிக்காமல் கேட்டான் மாறன். “துளசி கொஞ்சம் பயப்படுவாள் மாப்பிள்ளை”, என்று ராஜன் கூறி முடிப்பதற்கு, “எனக்கா? எனக்கென்ன பயம் இதில். நான் இப்பொழுதே தயாராகத்தான் உள்ளேன். அப்பா உங்களை ஏமாற்ற ஏதோ சொல்கிறார்” என்று பின்னால் இருந்து கத்தினாள் துளசி.
இப்படி மாறனுடன் தனியே செல்ல, அதுவும் திருமணத்திற்கு முன் தனியே செல்ல தயாராக உள்ளேன் என்கிறாளே துளசி என்று ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார் ராஜன். மறுபுறம்,
ஏன் அப்பா கண்திருஷ்டிக்கு சுத்தி போடுவதற்கு நான் பயப்படுவேன் என்று மாறனின் இடம் சொல்கிறார் என்று புரியாமல் முழித்தாள் துளசி.
இதற்கு மேல் என்ன கூற முடியும் மாறனிடம் என்றெண்ணி, “சரி மாப்பிள்ளை, எனக்கு சம்மதம். இதோ துளசியிடம் தருகிறேன்”, என்றார் ராஜன். மாறனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. “துளசி, மாமா சரியென்று சொல்லிவிட்டார், நாளை காலை 10 மணிக்கு உன்னை அழைக்க வருகிறேன். தயாராக இரு!”, என்று மகிழ்ச்சியோடு கூறினான் மாறன். “என்ன நாளைக்கு? எங்கே போவதற்கு? யார் போவதற்கு ?”, என்று குழப்பத்தில் வினவினாள் துளசி.
சிரித்துகொண்டே, “நாம் இருவரும் வெளியே தனியாகச்செல்ல, மாமா சொல்லும்பொழுது கூட நீ தான் பயமே இல்லை , தயாராக உள்ளேன் என்றாயே..! “, என்று எதுவும் தெரியாதது போல் பேசினான் மாறன். அனைத்தும் இப்பொழுது தான் புரிந்தது துளசிக்கு. “அடப்பாவி! அப்போ அப்பாவிடம் சுத்தி போடச்சொல்லவில்லையா? நாளை வெளியில் செல்லதான் அனுமதி கேட்டீர்களா? அய்யோ அப்பா என்னை என்ன நினைத்திருப்பார்?”, என்று செல்லச்சிணுங்கல் சிணிங்கினாள் துளசி.
“சரி சரி, அப்போ நாளை சந்திக்கலாம் நேரில்.. அதிகநேரம் பேசலாம் ...அருகில் அமர்ந்தபடி, உன் கைகளைக் கோர்த்தபடி... நீ பேசுகையில் உன் விழிகள் சிரிப்பதை நான் ரசித்தபடி”, என்று அமிர்தம் போல் தித்திப்பாக பேசினான் மாறன்.
அதுவரை அப்பா என்ன நினைப்பார் என்று யோசித்த துளசி, மாறன் கூறிய வார்த்தைகளை கற்பனையில் காணத்தொடங்கினாள். வேண்டாம் என்றுச்சொல்ல மனமில்லாமல், “சரி, காலை 9.30ற்கு என்னை எழுப்பிவிடுங்கள், நான் 10 க்கு தயாராக இருப்பேன். நாளை பேசலாம்”, என்று சிறிது தயக்கத்தோடே கூறி அழைப்பை துண்டித்தாள் துளசி. சின்ன சத்தம் துளசியின் பின்னே. நிமிர்ந்து பின்னே திரும்பி பார்த்தாள் துளசி.
-தொடரும்







maranin samarthiyam 👌😘😍