மறைத்த காதல் - பாகம் 15 !
- Sridhana
- May 13, 2020
- 2 min read
Updated: May 13, 2020
பாகம் - 15
சின்ன சத்தம் துளசியின் பின்னே. நிமிர்ந்து பின்னே திரும்பி பார்த்தாள் துளசி. துளசியின் தந்தை பின்னே நின்று முறைத்துக்கொண்டிருந்தார். “கவனமாகவும், உன் கோட்டிற்குள்ளும் இருந்துகொள்”, என்று கூறி நகர்ந்தார் அங்கிருந்து. திறுதிறுவென முளித்தபடி நின்றாள் துளசி.
இரவும் இதமான கனவுகளோடு கடந்தது, பகலவன் முந்தினான் இன்றும் துளசிக்குமுன். கைப்பேசி அழைப்பை ஏற்காததால், பத்து மணியளவில் நேரிலே வந்தான் மாறன். “மாப்பிள்ளை கீழே தயாராகி நிற்கிறார், நீ எருமை குளத்தில் கிடப்பதுபோல் தூங்குகிறாய்?”, என்று ராகவன் மிதித்தமிதியில் எழுந்தாள் துளசி. “என்ன, அதுக்குள்ள பத்து மணியாகியதா?, என்று படபடத்தாள் துளசி. ராகவனை தள்ளிவிட்டு, “அவரோடு பேசிக்கொண்டிரு நான் தயாராகிவிட்டு வருகிறேன்”, என்று கூறி குளியலறைக்குள் ஓடினாள் துளசி
வீட்டில் ராஜன் இல்லாததால், ராகவனிடம் அனுமதி பெற்று துளசியை அழைத்துச்சென்றான் மாறன். வீட்டின் வெளியே நின்றது அழகான யமாகா ஸ்போர்ட்ஸ் பைக். வண்டியின் சாவியை துளசியிடம் கொடுத்து “ம்ம், வண்டியை எடு நான் பின்னால் ஏறுகிறேன்”, என்று சிரித்தபடி சொன்னான் மாறன். “அய்யோ மாப்பிள்ளை வேண்டாம், துளசிய நம்பியா ஏறப்போறீர்கள்?, முதல் நாளே ஏன் இந்த வம்பு”, என்று படப்படப்பாக பேசிக்கொண்டே இருந்தான் ராகவன். “இருங்க ராகவன், துளசி, நீ வண்டி ஓட்டுவதான?”, என்று வினவினான் மாறன். துளசி தைரியமாக “ராகவனைவிட நல்லா ஓட்டுவேன்”, என்று கூறினாள். ஒரே ஒரு பார்வை ராகவனைப்பார்த்து, “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான் மாறன்.
துளசிக்கு மாறனோடு செல்கிறோம் என்கிற ஆர்வத்தைவிட, வண்டி ஓட்டப்போகிறோம் அதுவும் மாறனை பின்னே வைத்துக்கொண்டு ஓட்டப்போகிறோம் என்ற ஆராவாரம் அதிகமாக இருந்தது. வண்டியின் சாவியை வாங்கி, அதில் ஏறி அமர்ந்தாள். வண்டியை ஆட்டோஸ்டார்ட் செய்யவும் பின்னே ஏறினான் மாறன். துளசியின் கால் முதல் கியர் போட்டது, அவளது கை க்லெட்ச்சை மெல்லவிட்டது. அய்யோ, அம்மா என்ற சத்தம் வண்டி விழுந்த சத்தத்தை விட அதிகமாக கேட்கப்போகிறது என்று பயந்து நின்றான் ராகவன். ஆனால், மெதுவான வேகத்தில் அலுங்காமல் குலுங்காமல் மெல்ல நகர்ந்தது வண்டி. மாறனுக்கு கொஞ்சம் பயமிருந்தாலும் வெளிக்காட்டவில்லை. நிதானமாக ஓட்டிய துளசியைப் பார்த்ததும் இதயமும் நிதானமாக துடிக்க தொடங்கியது மாறனுக்கு.
சிறிது தூரம் சென்ற பின், “துளசி, எங்கே போகலாம்? உன் கூட அமைதியான இடத்தில் உட்கார்ந்து இரண்டு மணி நேரமாவது பேசவேண்டும்”, என்று மாறனின் மூச்சுக்காற்று துளசியின் நுனிமுடியில் படுமாறு பின் இருந்து கூறினான் மாறன். சின்ன நெழிவுகளோடு வண்டியை ஓட்டினாள் துளசி. பெரிதாக ஆட்கள் நடமாட்டம் இல்லை, இருந்தும் துளசி மெதுவாகவே ஓட்டினாள்.
பெரிய நுழைவாயிலுக்குள் புகுந்தாள் துளசி. வண்டியில் இருந்து இறங்கி இருவரும் மெல்ல நடக்கத்தொடங்கினர். இருபுறமும் அழகான பூந்தோட்டம். மூலிகை வாசம் கலந்த குளிர்ந்த காற்று, ஆட்கள் ஒருவரைக்கூட காணவில்லை. மாறனுக்கு அழகை ரசிப்பதா ? இல்லை இது என்ன இடம், ஏன் யாரையுமே காணவில்லை என்று யோசிப்பதா? எனப் புரியாமல் குழம்பி இருந்தான்.
மெல்ல நடந்தபடியே துளசி, மாறனின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். அவள் கைப்பிடித்த அழுத்தத்தில் அவன் மீதிருந்த நம்பிக்கையை உணர்ந்தான் மாறன். இருவரும் கைக்கோர்த்து சிறிது தூரம் நடந்தனர். அந்த அழகான தருணத்தை கலைக்க மனமில்லாமல் மாறன் எதுவும் துளசியிடம் வினவவில்லை. நீண்டு வளர்ந்த முடியை தன் உச்சித்தலையில் முடிந்தவாரு, இவர்கள் முன் திடீரென்று வந்து நின்றார் ஒரு முதியவர்.
Comments