மறைத்த காதல் - பாகம் 16!
- Sridhana

- May 18, 2020
- 3 min read
Updated: May 18, 2020
பாகம் - 16
நீண்ட வளர்ந்த முடியை தன் உச்சித்தலையில் முடிந்தவாரு இவர்கள் முன் தீடீரென்று வந்து நின்றார் ஒரு முதியவர். “வாங்கம்மா, வாங்க, உங்க ராஜாவோட வந்தீகளோ?”, என்றார் அந்த முதியவர். துளசிக்கும் பெரியவருக்கும் முன்பே அறிமுகம் இருப்பதை உணர்ந்தான் மாறன். “தாடி தாத்தா, மிகச்சரியாக சொன்னீர்கள், இவர் பெயர் மாறன். என்னவன் ஆக இருப்பவர்”, என்று சின்ன வெட்கத்தோடு கூறினாள்.
மாறனைப்பார்த்து துளசி, “இவர் தான் என் அம்மாவுக்கு காவல்”, என்று அந்த முதியவரை மாறனுக்கு அறிமுகம் செய்தாள். மாறனுக்கு ஒன்றும் புரியவில்லை. கேள்விகள் பல இருந்தும் எதையும் கேட்காமல், துளசியிடம் அடுத்த வார்த்தையை எதிர்பார்த்து அமைதியாய் புதிருக்கு விடை தெரியாதவன் போல் முழித்தான் மாறன்.
“இது என் அம்மாவின் கல்லறை தோட்டம், அதிக சந்தோஷத்திலும் துக்கத்திலும் நான் இங்குதான் வருவேன். அம்மாவிடம் பேசுவேன். பதில் எதுவும் அம்மாவிடம் இருந்து வராது. நான் அழுதால் மட்டும் இதமான காற்றில் அவள் கலந்து என் கண்ணத்தில் வடிந்த கண்ணீரை உலரச்செய்து என் கவலைகளைத் துடைப்பாள்”, என்று கூறி பெருமூச்சுவிட்டாள் துளசி. துளசி பேசியதை கேட்டு, மாறன் கண்கள் கலங்கின. மாறனுக்கு கூற வார்த்தைகள் எதுவும் இல்லாமல் அவன் தோளோடு துளசியை சேர்த்தனைத்தான்.
இருவரையும் தனிமையில் விட்டு நாகரிகமாக அங்கிருந்த அவரின் அறைக்குள் சென்றார் அந்த பெரியவர். இருநிமிட அமைதிக்குபின் உணர்ந்தனர் இருவரும் நெருக்கமாக இருப்பதை. மெல்ல சிரித்தபடி இருவரும் விலகி நின்றனர். நீண்ட வளர்ந்து கிடந்த தென்னை மரத்தின் அடியில் இருவர் மட்டும் அமரும் ஊஞ்சல் இருந்ததைக் கண்டான் மாறன். “துளசி, அழகாக உள்ளது அந்த ஊஞ்சல்”, என்று ஊஞ்சலை நோக்கி சென்றான் மாறன். “எனக்காக அப்பா செய்த வேலை இது”, என்று துளசி மீண்டும் உற்சாகமாக பேசத்தொடங்கினாள்.
“நீங்க என்ன நம்பி வண்டில வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை. பாவம் ராகவன் தான் அதிகம் பயந்து போனான்”, என்று கூறி சிரித்தாள் துளசி. “எனக்கும் இருந்தது மரணபயம் துளசி, ஆனால் வெளியில் காட்டவில்லை. இங்கு வந்து கீழே இறங்கியபின் தான் நான் நிம்மதியாக மூச்சுவிட்டேன்.”, என்றான் மாறன். உர்ர்ர்ர் ... என்று முறைத்தாள் துளசி. “சரி சரி, உன்னை பற்றி கொஞ்சம் சொல் நான் தெரிந்துகொள்கிறேன்?”, என்று பேசத்தோடங்கினான் மாறன்.
“நன்றாக சாப்பிடுவேன் ஆனால் சமைக்கத்தெரியாது. வீடு முழுவதும் என் பொருட்கள் தான் அங்கங்கு கிடக்கும், ஆனால் சுத்தம் செய்ய மாட்டேன். ஒரு நாளுக்கு பல துணிகள் மாற்றுவேன் ஆனால் ஒரு முறைக்கூட துவைத்தது இல்லை. யாரும் என்னைச் செய்யச் சொன்னதும் இல்லை இதுவரைக்கும்”, என்று வெகுளியாய்ப் பேசினாள் துளசி. “குளிக்கும் பழக்கமாவது உண்டா?”, என்று நக்கலாகக் கேட்டான் மாறன். “ம்ம், அது உண்டு வாரத்திற்கு இரு முறை”, என்று பதிலத்தாள் துளசி.
துளசியைப்பார்த்து சிரித்தபடி மீண்டும் பேசத்தொடங்கினான் மாறன். “துளசி, நம்ம பெங்களூர் வீட்டில் எல்லா வசதியும் இருக்கும். நீ இங்கு இருப்பது போல் அங்கும் இருக்கலாம் நம் வீட்டு மகாராணியாக!”, என்றான் மாறன். சின்ன சிரிப்பு மட்டும் சிரித்தாள், மாறனின் கைகள் துளசியின் கைகளை மெல்லப்பிடித்தை உணர்ந்த துளசி. “உன்னைப் பார்க்கும் வரை எந்த ஒரு பெரிய ஆசைகளும் இல்லாமல் தான் நிச்சயத்திற்கு வந்தேன். ஆனால் உன்னைப் பார்த்தபின், உன் அப்பா அண்ணன் உன்னை கவனித்துக்கொள்வதை பார்த்தபின் அவர்களைவிட அதிகமாக உன்னை அன்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது எனக்கு.”, என்றான் மாறன்.
மாறன் பேசியதை பொறுதையாகக் கேட்ட துளசி, “அப்பா அண்ணன் போல் அன்பு காட்ட அவர்கள் இருக்கிறார்கள். அம்மா போல் சிலநேரமும் என் தோழனாய் மீதி நேரமும் என்னோடு எப்பொழுதும் இருந்திடு நீ. எனக்கு அது போதும். என்னை மீறி நான் கோபம் கொள்கையில் மட்டும் என்னைப் பொறுத்துக்கொள், நானே உன்னைத்தேடி உன் தோளில் சாய வந்துவிடுவேன். “, என்று பாசத்திற்கு ஏங்கிய குழந்தைபோல் பேசினாள்.
“துளசி, நான் முன்பே சொன்னது தான், இருப்பது ஓர் அழகான வாழ்க்கை உன்னோடு அதை இருவரும
அழகான ஊடல்களோடும் அன்பான கூடல்களோடும் வாழ்ந்திடுவோம்”, என்று எதார்த்தமாக ஆறுதல் கூறினான் மாறன். துளசி சட்டென்று நிமிர்ந்து, “இப்போ எதோ ஒரு காதல் மோகத்தில் என்னுடன் இப்படி பேசிவிட்டு, எதிர்பார்ப்புகளை என் முன் வரிசையாக அடுக்கிவிட்டு, திருமணத்திற்கு பின் அனைத்தையும் கனவில் நடந்தது போல் மறந்துவிடாதே மாறா! ”, என்றாள் மாறனின் கண்களைப் பார்த்தபடி துளசி. “அய்யோ துளசி, என்ன இப்போவே என்னை மிரட்டிகிறாய் நீ?”, என்று செல்லசிரிப்பு சிரித்தபடி துளசியின் கண்ணத்தை லேசாகக் கிள்ளினான் மாறன். கிள்ளிய மாறனின் வலதுகையினைத் தன் மார்போடு இழத்து பிடித்துக்கொண்டாள் துளசி. மாறனின் இடதுகை அனைத்தது தன் மார்போடு துளசியை.
“எல்லாம் இருந்தும் நீ பாசத்திற்காக ஏங்கியுள்ளது எனக்கு புரிகிறது துளசி. உனக்கு மட்டுமே நான் சொந்தம், உன்னை ஒவ்வொரு நொடியும் மீண்டும் மீண்டும் இந்த நொடிபோல் காதலித்துக்கொண்டே இருப்பேன்”, என்று கூறி துளசியின் நெற்றிப்பொட்டில் இதழ்பதித்தான் மாறன். பதித்த இதழின் ஈரத்தோடு மாறனின் காதலையும் உணர்ந்தாள் துளசி. துளசியின் கண்ணகளில் வடிந்தது கண்ணீர்த் துளிகள். “காற்றாக அம்மா வரவேண்டாம் உன் கண்ணீரை உலரவைக்க, நான் இருக்கிறேன் உன்னோடு உன் கண்ணீரைத் துடைத்துவிட”, என்று கூறி துளசியின் கண்களைத் துடைத்துவிட்டான் மாறன்.
துடைத்த கைகளைப்பிடித்து மாறனின் கண்களைப் பார்த்தாள் துளசி. பேச்சொன்றும் இல்லை துளசிக்கு, அவள் உள்ளங்கைகளுக்குள் மாறனின் முகம் வைத்து துளசியின் நெற்றியில் மாறனின் நெற்றியைச் சேர்த்துக்கொண்டாள் துளசி. “மாறா”, என்று ஒரு மெல்ல அழைத்தாள் துளசி.
-தொடரும்...







Cute LOVE 😍😍😘😘