மறைத்த காதல் - பாகம் 17!
- Sridhana
- May 22, 2020
- 2 min read
Updated: May 22, 2020
பாகம் - 17
“மாறா”, என்று மெல்ல அழைத்தாள் துளசி. “ம்ம்”, என்றான் மாறன். அவள் அழுகையை முழுங்கிவிட்டு, “தாடி தாத்தா வந்தாலும் வந்துவிடுவார்”, என்று அமைதியாய் கூறினாள் துளசி. இருக்கும் நெருக்கம் அப்பொழுது தான் விளங்கியது மாறனுக்கு. சட்டென்று துளசியைவிட்டு நகர்ந்தான் மாறன். பின்னே செல்லும் மாறனின் கைகளை மட்டும் முன்னே இழுத்துக்கொண்டு இருக்கமாக பிடித்துக்கொண்டாள் துளசி.
“உங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டாள் மிகவும் ஆறுதலாக உள்ளது”, என்றாள் துளசி. சத்தமில்லாத புன்னகை மாறனின் முகத்தில். துளசிக்கு தன்னை பிடித்துள்ளது என்று அறிந்து கர்வம் கொண்டான் மாறன். “துளசி, நீ தனிமைக்கு பயந்தவளா?”, என்று அடுத்த கேள்விக்கு தாவினான் மாறன். பயமென்று சொன்னால் கேலி செய்வானோ என்றெண்ணி, “பயமா? எனக்கா? இல்லவே இல்லை என்றாள்”, என்று எதார்த்தமாக பேசத்தொடங்கினாள் துளசி. “நான் அதிக நேரம் கடையில் தான் இருக்க நேரிடும், அதனால் தான் கேட்டேன்”, என்றான் மாறன். “ஓ அப்படியா, அப்போ பயப்படுவேன்...”, என்றாள் துளசி.
“ஹா ஹா, நீயும் என்னோடு கடைக்கு வரலாம். கிளம்புகையில் சேர்ந்து கிளம்பிவிடலாம். என்னோடே இருந்தவாறு இருக்கும் உனக்கு.”, என்றான் மாறன். துளசி இதுவரை எங்கும் தனியே கூட சென்றது இல்லை, எந்த பொறுப்பும் இல்லாமல் உல்லாசப் பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தவள் துளசி. புதுப்புது பொறுப்புகள் வரவிருப்பதை உணர்ந்து சிறிது பதட்டம் அடைந்தாள் துளசி. துளசியின் முகம் மாறுவதை உணர்ந்தான் மாறன். "நம்ம அழகான வாழ்க்கை வாழ போகிறோம், யாரும் நம்மை பின்னே இருந்து கண்காணிக்கப்போவது இல்லை. யாரும் நம்மை கேள்வி கேட்கப்போவதும் இல்லை. இந்த வாழ்க்கை நமக்கு என்ன கற்று தருகிறதோ அதில் நல்லதை மட்டும் மனதில் கொண்டு தினமும் புதுப்பாடம் கற்கலாம்." , என்று ஆறுதலாக மாறன் பேசினான்.
துளசி பெருமூச்சு விட்டு, "இரண்டு நிமிடம் அமைதியாக நான் இருப்பதற்குள் எவ்வளவு பேசுகிறீர்கள்?", என்று நக்கல் அடித்தாள். துளசியின் வெகுளிப்பேச்சு மாறனை அதிகமாகக்கவர்ந்தது. துளசியைப்பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தான் மாறன். "நான் விளையாட்டிற்குத்தான் சொன்னேன் நீங்க அதிகம் பேசுகிறீர்கள் என்று, கோவமா என் மேல்?", என்று பயந்தபடி கேட்டாள் துளசி.
"அதெல்லாம் ஒன்றுமில்லை இப்படி ஒரு பெண்ணை நான் இதுவரை பார்த்ததே இல்லை", என்று கூறி ஆச்சரியப்பட்டான் மாறன். "ஓ ... அப்போ எப்படிப்பட்ட பெண்ணைப் பார்த்துள்ளீர்கள் இதுவரை?", என்று பட்டென்று கேட்டாள் துளசி. மாறன் சற்று சுதாரித்தான். "இல்லை, இல்லை.. நான் எந்தப்பெண்ணையும் பார்த்ததும் இல்லை, நான் எந்த பெண்ணிடமும் உன்னிடம் பேசியது போல் பேசியது இல்லை. என் வாழ்க்கை முழுதும் நீ மட்டும் தான் என்றும்", என்று துளசியின் கண்களைப்பார்த்து பதிலளித்தான் மாறன். "ம்ம்... வேறு பெண்ணைப்பார்த்து தான் பாருங்களேன் , அப்போ தெரியும் உங்களுக்கு என்ன நடக்கும்", என்று மிரட்டினால் துளசி. துளசியின் மிரட்டலில் தன்னுடைமை என மாறனை நினைப்பது மாறனுக்கு தெரியவந்தது. துளசியின் முகத்தை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்த மாறன், துளசியின் கைகளில் அழகிய காப்பு ஒன்றையிட்டு அழகுபார்த்தான். "இதெல்லாம் எதற்கு இப்பொழுது, அப்பா ஏசுவார் என்னை", என்றாள் துளசி.
"உனக்காக நான் பார்த்து பார்த்து வாங்கியது. மாமா கேட்டால் நான் தான் தந்தேன் என்றுசொல், அதற்குமேல் உன்னை ஏதாவது சொன்னால் என்னிடம் பேசச்சொல் மாமாவை, நான் பேசிக்கொள்கிறேன்", என்றான் மாறன். துளசி இலையின் வடிவில் மாறன் என்று எழுதியிருந்ததை கவனித்தாள் துளசி. "மிக அழகாக உள்ளது, துளசி இலையின் மேல் மாறன் என்ற எழுத்துக்கள் ", என்று காப்பை ரசித்த படி பேசினாள் துளசி. "துளசி இலையின் மேல் மாறன் இல்லை, துளசியின் மேல் மாறன். நான் அதற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்", என்றான் மாறன். துளசியைக்கொஞ்சம் சிலிர்க்க வைத்தது மாறனின் இந்த பேச்சு. வெட்கத்தில் குறுகிப்போனாள் துளசி. அவள் கைகளை மாறனின் கைகளில் இருந்து பிரித்தெடுத்தாள் துளசி. "நான் தவறாக சொல்லிவிட்டேனா?", என்று வினவினான் மாறன். "இல்லை இல்லை", என்று சொல்லியபடி மாறனின் கைகளை மீண்டும் பிடித்தாள் துளசி.
"நான் இன்று இரவு கிளம்புகிறேன், திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு தான் நான் வருவேன். நான் கடையில் இருந்து வந்தவுடன் தினமும் இரவில் பேசலாம். நமது வீட்டில் நமக்காக இன்னும் அழகாக மாற்ற வேண்டியதுள்ளது. உனக்கு கண்டிப்பா பிடிக்கும் வகையில் நம் வீடு இருக்கும்.", என்றான் மாறன். மாறனின் பேச்சைக்கேட்டு கிளம்பப்போறோமோ என்று எண்ணத்தொடங்கினாள் துளசி. அவள் நினைத்தது சரியாகவே இருந்தது. "துளசி நேரமாகிவிட்டது, நாம் கிளம்பலாமா?", என்றான் மாறன். "இன்னும் கொஞ்சம் பேசிவிட்டு செல்வோமா?, இல்ல இங்கு காற்று நன்றாக இருப்பதனால் சொல்கிறேன்", என்று தயங்கித்தயங்கி கூறினாள் துளசி.
துளசிக்கு பிரிய மனமில்லாததை உணர்ந்த மாறன் சிரித்துக்கொண்டே "இன்னும் சிறிது நேரம் இருக்கலாம், ஆனால் நீ யாரிடமும் சொல்லாத விஷயம் மூன்றை என்னிடம் நீ சொல்லவேண்டும்", என்றான் மாறன். துளசியும் ஒப்புக்கொண்டாள். "ம்ம் ... ஒருமுறை ராகவன் சாமிக்கு வாய்த்த திருட்டு சுருட்டை எடுத்து புகைபிடித்துள்ளான், அவனோடு நானும் ஒருமுறை மாடியில் புகைபிடித்துள்ளேன். மாடிக்கு அப்பா வந்ததும் இருவரும் திருதிருவென முழித்தோம். அவர் நாங்கள் விளையாடிக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்து நகர்ந்துவிட்டார்.", என்றாள் துளசி. "அடிப்பாவி, திருட்டு சுருட்டா ?", என்று வியந்தான் மாறன்.
-தொடரும்...
Nalla irukku da.😍😎😘👌