மறைத்த காதல் - பாகம் 18!
- Sridhana

- May 22, 2020
- 2 min read
பாகம் - 18!
"அடிப்பாவி, திருட்டு சுருட்டா ?", என்று வியந்தான் மாறன். "ம்ம் ம்ம்", என்றாள் துளசி. "இன்னும் இரண்டைச் சொல், கேப்போம்", என்று கேலியாக சிரித்துக்கொண்டான் மாறன். "நான் பருவமடைந்ததே தெரியாமல் இரண்டு நாள் சுற்றி உள்ளேன் பள்ளியிலும் வீட்டிலும், சொல்வதற்கு அம்மாவும் இல்லை, இதுபோன்ற விஷயத்தை கவனிக்க நெருங்கிய சொந்தமும் இல்லை. பள்ளியில் என் தோழி யாழினி தான் எனக்கும் என் தந்தைக்கும் கூறினாள். அப்பாவுக்கும் அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் அல்லாடினார். நான் அதிகமாக அம்மாவை தேடியது அப்பொழுதுதான். அம்மா என்னோடு இருந்திருக்கலாம் என்று அதிகம் அழுதுள்ளேன். அதுவரை வெறும் தோழியாக வலம்வந்த யாழினி எனக்கு பல நேரங்களில் அம்மாவாகவும் இருந்தாள்.", என்று கண்களில் நீரோடும் வார்த்தையில் வலியோடும் பேசினாள் துளசி. மாறனுக்கு எப்படி பதில் பேசவேண்டும் என்று தெரியவில்லை. துளசியின் கண்களை துடைத்துவிட்டு அவள் அருகில் நெருக்கமாக அமர்ந்தான். அவளை மறந்து மாறன் தோளில் சாய்ந்தாள் துளசி. அமைதி மட்டும் நிலவியது.
துளசி அவளுக்குள் கொஞ்சம் சமாதானம் ஆனபின், மாறனிடம் "மூன்றாவது விஷயத்தை சொல்லவா?", என்றாள் துளசி. "வேண்டாம் வேண்டாம், இதுவே போதும், உனக்கு எப்போ வீட்டுக்கு போகவேண்டும் என்று தோன்றுகிறதோ சொல். நாம் அப்பொழுது கிளம்பலாம்." என்றான் மாறன்.
"இப்போ போகலாம், நான் சரி ஆகிவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் உங்களிடம் ஏதேதோ சொல்லி உங்கள் மனதை வருந்தச்செய்து விட்டேன்." என்றாள் துளசி. "எனக்கு சந்தோஷம் தான் உண்மையில்.. என்மேல் இருக்கும் நம்பிக்கையில் தான் நீ அனைத்தையும் சொல்கிறாய். உன் நம்பிக்கை காணாமல் போகாதவாறு உன்னை என்னோடே வைத்து பார்த்துக்கொள்வேன். துளசி, நீ வெளியேதான் வாயாடி, உள்ளே அழக்கூட தெரியாத மழலை நீ", என்று துளசியை அணைத்தபடி கூறினான் மாறன்.
"என்ன எனக்கா அழுகத்தெரியவில்லை ?, திருமணத்திற்குப்பின் நான் அழுதே சாதிப்பேன் ", என்று மனதிற்குள்ளே முணுமுணுத்தாள் துளசி.
முதியவர் வருவதை அறிந்து இருவரும் எழுந்து கல்லறை அருகே சென்றனர் துளசியும் மாறனும். இருவரும் கல்லறைமுன் விழுந்து வணங்கினர். பின் முதியவரிடம் இருந்து விடைபெற்று வண்டியை நோக்கி நகர்ந்தனர். வண்டி சாவியை நீட்டினான் மாறன். "எனக்கு உங்கள் பின் அமர்ந்து வரவேண்டும் என்று ஆசையாக உள்ளது", என்றாள் துளசி. மெல்ல சிரித்தவாறே, "நல்ல வேலை நான் தப்பித்தேன்", என்றான் மாறன். மாறன் தோளில் செல்ல அடி அடித்தவாறே வண்டியில் பின்னிருப்பில் அமர்ந்தாள் துளசி.
தனக்கே தனக்கென்று ஒருவன் கிடைத்துவிட்டான் என்ற நிம்மதி துளசிக்குள் ஆழமாக பதியத்தொடங்கியது. மாறன் வண்டியை எடுத்ததும், துளசி, மாறனின் முதுகில் சாய்ந்துகொண்டாள். மாறனுக்கு தன் வண்டியை நகர்த்த மனமில்லாமல் மெதுவாக துளசியின் அரவணைப்பை ரசித்துக்கொண்டே மெல்ல மெல்ல வேகத்தை அதிகரித்தான். பேச்சு எதுவும் வரவில்லை துளசிக்கு. "துளசி, தூங்கிவிட்டாயா?, என்ன சத்தமே இல்லாமல் வருகிறாய் ?", என்று மாறன் துளசியை பேசத்தூண்டினான். இருந்தும் அதிகம் பேசாமல், "தூங்கவில்லை நான்", என்று மட்டும் கூறினாள் துளசி. எதோ சரியில்லை என்று உணர்ந்த மாறன் சிறிது தூரத்தில் வண்டியை ஓரமாக நிறுத்தினான்.
ஏன் நிறுத்திவிட்டீர்கள் என்று துளசி கேட்பதற்குள் மாறன் முந்திக்கொண்டான். "துளசி, இங்கு காப்பி நன்றாக இருக்கும், குடித்துவிட்டு செல்வோம்.", என்றான் மாறன்.
இன்னும் கொஞ்சம் நேரம் மாறனோடு இருக்கலாம் என்ற ஆசையில் துளசி இறங்கி கடகடவென கடைக்குள் நுழைந்தாள். இரண்டு காப்பி வாங்கிக்கொண்டு துளசி அருகில் சென்று அமர்ந்தான் மாறன். "என் அழகான ராட்சஷி ஏன் அசிங்கமா சோகத்தில் இருக்கு?", என்று செல்லமாய் பேசத்தொடங்கினான் மாறன். "நேற்று பிடிக்கும் என்று சொல்ல அவ்வளவு தயங்கினேன் இன்று உன்னை விட்டு பிரிய இவ்வளவு தயங்குகிறேன். கூடவே இருந்தால் நல்ல இருக்கும் என்று தோன்றுகிறது. இதுவரை யாரிடமும் தோன்றாது உன்னிடம் தோன்றுகிறது. எப்படி ஒரேநாளில் இதனை மாற்றம் என்னுள் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.", மாறனின் கண்களை பார்த்துக்கொண்டு படபடவென பேசினாள் துளசி.
துளசியின் வார்த்தைகள் ஒன்றொன்றும் மாறனின் இதயத்தில் சில்லென்ற ஐஸ்கட்டியை வைத்து தேய்ப்பது போல் இருந்தது. சாதிக்கமுடியாத செயலொன்றை செய்தது போல் மாறனுக்கு சந்தோஷம். இருப்பது கடையில் என்பதையும் மறந்து, துளசியின் உள்ளங்கைகளை எடுத்து மாறன் தன் கன்னத்தில் வைத்துக்கொண்டான். அனைவரும் பார்க்கிறார்கள் என்று தன் கைககளை உதறாமல், சிறிதும் பதறாமல், மாறனின் கன்னத்தை மெல்ல வருடிவிட்டு சுற்றி இருப்பவர்கள் யாரேனும் பார்த்தார்களா என்று பார்க்கத்தொடங்கினாள் துளசி. மாறனும் அதே போல் சுற்றிச்சுற்றி பார்த்து கீழேகுனிந்து காப்பி குடிக்கத்தொடங்கினான். "இந்த வார்த்தைகளை உன்னிடம் இருந்து கேட்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டுள்ளேன், அனால் அது இவ்வளவு விரைவில் நடக்கும் என்று நினைக்கவில்லை. இந்த சுகத்திலேயே மூன்று வாரம் நான் நகர்த்திவிடுவேன்.", என்று நெகிழ்ச்சியாய் பேசினான் மாறன். "மாறா, நான் சொல்லவேண்டிய மூன்றாவது விஷயத்தையும் கேட்டுவிடு", என்று சின்ன தயக்கத்தோடு பேசத்தொடங்கினாள் துளசி.

--தொடரும்...





😍😘Maran