top of page

மறைத்த காதல் - பாகம் 19!

  • Writer: Sridhana
    Sridhana
  • May 24, 2020
  • 2 min read

Updated: May 24, 2020

பாகம் 19!


"மாறா, நான் சொல்லவேண்டிய மூன்றாவது விஷயத்தையும் கேட்டுவிடு", என்று சின்ன தயக்கத்தோடு பேசத்தொடங்கினாள் துளசி. துளசியுடன் இருக்கும் இந்த நெருக்கத்தை கலைக்க விரும்பவில்லை மாறன். "வேண்டாம் துளசி, நான் இதை பிறகு கேட்டுக்கொள்கிறேன். நீ இப்போ சரியாகிவிட்டாயா? மாமா உன் முகத்தை பார்த்து வருந்தப்போகிறார்.", என்று கவலையோடு பேசினான் மாறன். "அதுதான் உங்கள் கவலையா?, என்று கோவமாக கேட்டாள் துளசி.


மாறனின் செல்லக்குரலில் துளசி அருகில்சென்று காதோரத்தில், "என் செல்ல கோபக்காரியே, அதுவும் ஒரு கவலை. அதனோடு உன்னைப்பிரிந்து நான் கிளம்பவேண்டும் என்பதும் என்னுடைய மற்றொரு கவலை.", என்று கூறினான் மாறன். மாறனின் மூச்சுக்காற்றின் சூட்டை மட்டும் உணர்ந்த துளசிக்கு அவன் சொன்னவார்த்தைகள் புரியவில்லை. வெட்கத்தில் மெல்ல சிரித்தாள் துளசி. இவ்வளவுதான உன் கோபம் என்றவாறு துளசியை பார்த்து சிரித்தான் மாறன். இருவரும் கடையிலிருந்து கிளம்பி வண்டியில் மெதுவாக நகர்ந்தனர் துளசியின் வீட்டை நோக்கி சென்றனர்.


மாறனின் மார்போடு சேர்த்து அணைத்திருந்த துளசியின் கைகளை அவ்வப்போது மெதுவாக வருடியவாறு துளசியின் வீட்டின் அருகில் வரை வண்டியை ஓட்டினான் மாறன். மாறன் துளசி இருவரும் வண்டியில் நெருக்கமாக வருவதை அவர் வீட்டுமாடியில் நின்றவாறே கவனித்தார் ராஜன். திருமணத்திற்கு மூன்று வாரமே இருக்கும் இந்த நேரத்தில், இவர்களுக்குள் சிறிது அன்யோன்யம் தேவைதான் என்றே அவர் மனதிற்குள் ஓடியது. வீட்டிற்குள் போனவுடன் மாறனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் ராஜன் பின்னே சென்று நின்றுகொண்டாள் துளசி. "வாங்க மாப்பிள்ளை, ரொம்ப இனிதான நேரமாக இருந்ததுபோல் இருக்கிறதே?", என்று கேட்டார் ராஜன். தாடித்தாத்தா ஏதும் சொல்லி இருப்பாரோ என்று துளசி மனதில் ஓடியது. வண்டியில் நெருக்கமாக வருவதை யாரேனும் சொல்லியிருப்பார்களோ என்று மாறன் மனதில் ஓடியது. இருவரும் திருதிருவென முழிக்கமட்டும் செய்தனர். "இல்லை, இருவர் முகத்திலும் பூரிப்பு அள்ளுதே, அதனால் தான் கேட்டேன்.", என்றார் ராஜன். பொதுவாக அதிகம் பேசாத ராஜன், எப்படி இவ்வளவு கலகலப்பாக பேசுகிறார், என்ன நடக்கிறது இங்கே என்று ராகவனின் மனதில் உதைத்தது நடக்கும் சம்பவங்கள். வழக்கம் போல் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை ராகவன்.


"மாமா, இன்று இரவு நான் பெங்களூர் கிளம்புகிறேன். இன்னும் துணிகள் எதுவும் எடுத்துவைக்கவில்லை. நான் கிளம்புகிறேன். திருமணத்தன்று பார்ப்போம் இனி", என்றான் மாறன். துளசியை பார்த்து தலையை அசைத்துவிட்டு கண்களாலே விடைபெற்றான் துளசியிடம். "சரிங்க மாப்பிள்ளை, பாத்து பத்திரம்.", என்று வாசல் வரை சென்று வழியனுப்பினார் ராஜன். துளசியும் ராகவனும் வீட்டினுள்ளே இருந்துகொண்டதை அறிந்த ராஜன் மாறனின் கையைப்பிடித்துக்கொண்டு, "துளசி ரொம்ப நல்ல பொண்ணு, தாய் பாசத்துக்கு அதிகம் ஏங்கியபொண்ணு. அவள் தெரியாமல் கோபம்கொண்டால்கூட நீங்க கொஞ்சம் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். சின்னச்சின்ன சண்டைகள் வந்தாலும் அன்றே மனம்விட்டு பேசி சரி செய்துவிடுங்கள். மூன்றாவது மனிதர் எவரும் உங்கள் இருவருக்குள் வராதவாறு பார்த்து கொள்ளுங்கள். இதைநான் துளசியின் தந்தையாக மட்டும் சொல்லவில்லை. என் மனைவியைப்பிரிந்து ஒவ்வொரு நொடியும் கனவில் அவளோடு வாழும் கணவனாகவும் சொல்கிறேன்.", உருக்கமாக கூறினார் ராஜன். "நீங்கள் தந்தையாய் பார்த்துக்கொண்டீர்கள், நான் உங்கள் அனைவருமாக துளசியை பார்த்துகொள்கிறேன்.", என்று உறுதியாய்க்கூறினான் மாறன். மாறனை கட்டிஅணைத்தார் ராஜன். சிரித்தவாறே அங்கிருந்து கிளம்பினான் மாறன்.


மாறனின் வீட்டிற்குள் நுழைந்தவுடன், "என்னடா என்ன சொல்கிறாள் நம்ம வீட்டு மஹாராணி?", என்று கிண்டலாய் வரவேற்தார் மாறனின் தந்தை. நடந்ததை முழுதும் விளக்கமாய்க் கூறாமல், சுருக்கமாக சொல்லிவிட்டு பெங்களூர் செல்ல தயாராகினான் மாறன். இரவு வண்டிக்குள் ஏறி அமர்ந்ததும் துளசியின் கைபேசிக்கு அழைத்தான் மாறன். மாறன் "துளசி, நான் கிளம்பிவிட்டேன்.", என்றதும் "சரி நானும் தூங்கிவிட்டேன்", என்றாள் துளசி. "துளசி, அதற்குள் தூக்கமா?, நீ சொல்ல வேண்டிய மூன்றாவது ரகசியத்தை சொல்?", என்றான் மாறன். அழைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் அழைத்தபோது துளசி பதில் அழிக்கவில்லை. கொஞ்சம் கூட என்னுடன் பேசவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் எப்படி இப்படி உறங்கமுடிகிறது இவளுக்கு என்ற குழப்பத்தோடு பயணம் செய்தான் மாறன். மாறனுக்கு விடியற்காலை நான்கு மணிக்கு வந்தது ஒரு குறுஞ்செய்தி துளசியிடம் இருந்து.



ree

-தொடரும்...

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page