மறைத்த காதல் - பாகம் - 2
- Sridhana
- Apr 19, 2020
- 1 min read
Updated: May 23, 2020
பாகம் - 2
மோதிரத்தை பார்த்துக்கொண்டிருந்த
துளசி உடனே “ஷ்ஷ்ஷ் ... “ என்ற சத்தத்தோடு மாறன் விழிகளை நிமிர்ந்து பார்த்தாள்.
பிடித்திருக்கிறது என்ற வார்த்தையை துளசியிடமிருந்து எதிர்பார்த்த மாறனை பார்த்து அவள் தன் இரு கண் இமைகளை மட்டும் மெல்ல அசைத்து சிரித்தாள். துளசியின் இமையசைந்து முடிந்த அடுத்தநொடி அவள் கைவிரல்களோடு மாறனின் கைவிரல்கள் மெல்ல சேர்ந்தன. மாறனின் ஆனந்தத்தை கைவிரல் அரவணைப்பில் உணர்ந்தாள் துளசி.
சில விநாடிகள் தான் அந்த சுகம் நிலைத்தது. இடது புறம் திருப்பி மாறனை இழுத்து கட்டியணைத்தான் மாறனின் நண்பன் பாரதி. “வாழ்த்துக்கள் மாறா, சிக்கிக்கிட்ட மச்சான் திருமண பந்தத்துக்குள்ள, இனி உன் சுதந்திரம் எல்லாம் போச்சு” என்றான் பாரதி. துளசி சிறிதும் யோசிக்காமல் “உர்ர்ர்” என்று பாரதியை முறைத்தாள்.. பாரதியோ அதனை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
புகைப்படம் எடுத்த கையோடு அனைவரும் பந்திக்கு போகலாம் என்று அழைத்தனர் மாறனின் பெற்றோர்கள்.
மிகுந்த பசியோடு இருந்த துளசிக்கு “அப்பாடா இப்போதாவது அழைத்தார்களே“ என்றிருந்தது. இருந்தும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடியே சரி அத்தையென்றாள் துளசி.
பந்தி ஆரம்பித்தது. அவன் தன்இலையை கவனித்ததைவிட துளசியின் இலையைதான் அதிகம் கவனித்தான் மாறன். தனக்கு பிடித்த ஜாமுனை இலையில் கண்டவுடன், ஒரே வாயில் வைத்துவிட்டு யாரும் அவளைக் கவனித்தார்களா என்று நிமிர்ந்து பார்த்தாள் துளசி. உதட்டோரத்தில் சிந்திய சக்கரைப்பாகினை துடைக்கச்சொல்லி மெல்ல சைகைக்காட்டினான் மாறன். “அய்யய்யோ பார்த்துவிட்டாரே” என்று தனக்குள்ளேயே சின்னச்சிரிப்போடு முணுமுணுத்து கொண்டாள் துளசி.
மறுபக்கம் புகைப்படம் எடுப்பவர்கள் வந்தனர், சுற்றி நின்று “இருவரும் இனிப்பை பரிமாற்றிகொள்ளுங்கள், நாங்கள் புகைப்படம் எடுக்க வேண்டும்” என்றனர். தொண்டையில் இருந்த ஜாமுன் இதைக்கேட்டவுடன் சிறுகுடலுக்கே சென்றது போல் இருந்தது துளசிக்கு. இதை கவனித்த மாறன், அவன் இலையில் இருந்து பாதி ஜாமுனை எடுத்து மேசைக்கு கீழ் துளசியின் கைகளை மெல்லயிடுத்து அவள் கைகளில் தினித்தான். “தப்பிச்சேன்னடா சாமி” என்ற மன நிம்மதி அவள் முகத்திலும் பார்வையிலும் தெரிந்தது. சிறிது அருகில் நெருங்கி மாறன் தோள் அருகில் வந்து “நன்றி” என்றாள் துளசி. மெல்ல புன்னகையித்தவாரு அங்கிருந்த பணியாளர்களிடம் “இன்னும் இரண்டு ஜாமுன் கொண்டுவாருங்கள்” என்றான் மாறன்.
வாழ்த்த வந்தவர்கள் ஒவ்வொருவராக கிளம்பிச்சென்றனர். மாறனின் பெற்றோர்கள் மட்டும் மாறனோடு அமர்ந்திருந்தனர். மறுபுறம் தாயில்லா துளசி , தனது அண்ணன் ராகவனோடு பேசிக்கொண்டிருந்தாள். அவ்வப்போது மாறனைப்பார்த்துக்கொண்டாள், மாறனும் துளசியைப்பார்த்து சிரித்துக்கொண்டான்.
சமையல், மண்டபம் என அனைவரின் கணக்குகளை பார்த்து முடித்து வைப்பதில் துளசியின் தந்தை சற்று பரபரப்பாக இருந்தார். “ராகவா, இங்க கொஞ்சம் சீக்கிரம் வா” என்ற துளசியின் தந்தையின் குரல் ஆளில்லா மண்டபத்தில் எதிரொலித்தது. தன் தந்தையை நோக்கி விரைந்து சென்றான் ராகவன்.
-தொடரும்
Way to go Sri...