மறைத்த காதல் - பாகம் - 20 !
- Sridhana

- Jun 1, 2020
- 2 min read
Updated: Jun 1, 2020
பாகம் - 20 !
மாறனுக்கு விடியற்காலை நான்கு மணிக்கு துளசியிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. "நான் விரைவில் தூங்கிவிட்டேன், நீங்கள் பெங்களூர் போனவுடன் பத்து மணிக்குமேல் அழைக்கவும்", என்று இருந்ததை வாசித்த மாறன்," சோம்பல் அதிகமாகத்தான் இருக்குமோ துளசிக்கு" என்று முணுமுணுத்தான்.
பொதுவாக கடைக்குள் போனதும் கைபேசியை தனியே வைத்துவிடுவது வழக்கம். என்றும் இல்லாமல் இன்று கைபேசி தன் அருகிலேயே வைத்துக்கொண்டான் மாறன். துளசியிடம் இருந்து அழைப்பு வரவே இல்லை. என்னதான் செய்கிறாள் என்று கேட்ப்போம் துளசியிடம் என்று மாறனே அழைத்தான் துளசிக்கு. ஒரு வார்த்தைகூட துளசியை பேசவிடாமல், "நீதான் எனக்கு அழைப்பவளா? இவ்வளவு நேரம் என்ன செய்துகொண்டு இருந்தாய்?", என்று படபடவென பேசினான் மாறன். "மாப்பிள்ளை, துளசி குளித்துக் கொண்டிருக்கிறாள், துளசி வந்ததும் அழைக்கச்சொல்கிறேன்", என்று பவ்யமாக பேசினார் ராஜன். மூச்சுவிட்ட சத்தம் கூட கேட்கவில்லை சில நொடிகள், பின் "சரிங்க மாமா", என்ற வார்த்தை மட்டும் வந்தது. மாறனுக்கு கொஞ்சம் சங்கோஜமாகிவிட்டது.
துளசி அழைப்பாள் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தான் மாறன். இரவு நேரம் ஆகியும் அழைப்பு வரவில்லை. மாறனுக்கு உச்சிக்கு ஏறியது கோபம். மீண்டும் அழைக்க மனம்வரவில்லை. துளசியுடன் பேசவேண்டும் என்றும் மனம் துடித்தது மாறனுக்கு. பொதுவாக படுத்தவுடன் பெரிய குறட்டை சத்தம் வந்துவிடும் மாறனுக்கு. ஏனோ இன்று புரண்டு புரண்டு படுத்தும் உறங்கமுடியவில்லை. துளசி மாறனுக்கு மீண்டும் அழைக்காததால் ஆயிரம் சிந்தனைகள் ஓடியது மாறனுக்கு. "யாராவது எதாவது தன்னைப்பற்றி சொல்லி இருப்பார்களோ ? துளசிக்கு ஏதாவது தெரிந்து இருக்குமோ", என்று மனம் பதறிக்கொண்டே இருந்தது மாறனுக்கு. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது துளசியின் அழைப்பு. அதுவரை துளசியை திட்டித்தள்ளிவிட வேண்டுமென்று யோசித்து வைத்த வார்த்தைகள் எல்லாம் மறந்து, "துளசி, என்ன ஆச்சு ஏன் எனக்கு அழைக்கவே இல்லை. என்மேல் எதாவது கோபமா உனக்கு? ", என்று மிகுந்த வருத்தமான குரலில் வினவினான் மாறன். துளசி "மாறா", என்று சொல்லி முடிப்பதற்குள் "என்னைப்பற்றி யாராவது எதாவது சொன்னார்களா?", என்றும் வினவினான் மாறன்.
அதுவரை அமைதியாக இருந்த துளசி, "யார் சொல்லுவார்கள், என்ன சொல்லுவார்கள் ?", என்று சந்தேகத்துடன் கேட்கத்தொடங்கினாள் துளசி. "நானே என் வாயால் கெட்டுவிடுவேன் போலிருக்கிறதே?", என்று தனக்குள்ளேயே பேசினான் மாறன். "இல்லை துளசி நீ பேசவில்லை என்னோடு, அதான் யாரும் என்னோடு திருமணம் வரை உன்வீட்டில் பேசவேண்டாம் என்று சொல்லி இருப்பார்களோ என்று நினைத்து உன்னிடம் அப்படி பேசிவிட்டேன். வேறு எதுவும் இல்லை துளசி", என்றான் மாறன். "எதாவது என்னிடம் மறைக்கிறீர்களா ?", என்று துளசி மாறனிடம் வினவினாள். சற்று யோசித்துவிட்டு துளசியிடம் மாறன், "இல்லை துளசி எதுவும் மறைக்கவில்லை என்றான்".
"சரி துளசி, நீ ஏன் எனக்கு அழைக்கவில்லை, இப்போதாவது சொல்", என்றான் மாறன். "இன்று அம்மா நினைவு தினம், நாங்கள் அனைவரும் மதியம் பன்னிரண்டு மணி முதல் இரவு வரை நினைவுமண்டபத்தில் இருந்தோம். அங்கே அனைத்து ஏழை மக்களுக்கும் இலவச உணவு வழங்கினோம். மன்னித்துவிடுங்கள் உங்களிடம் ஒரு வார்த்தை கூறியிருக்கவேண்டும். அனைவரும் அவசரப்படுத்தியதில் கைபேசியை வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டேன். சரியான கூட்டம் வேறு. வீட்டிற்குள் வந்தவுடன் உங்களுக்கு தான் அழைக்கிறேன்.", என்றாள் துளசி. "சரி சரி, களைப்பாக இருக்கும், நீ உறங்கு நாளை பேசலாம்", என்றான் மாறன். "ம்.ம்... சரி", என்றாள் துளசி. "மாறா, உன்னிடம் பேசவில்லை என்றாலும் உன்னை நினைத்துக்கொண்டே தான் இருந்தேன். நேற்று நீ என்னிடம் பேசிய வார்த்தைகளும், அணைத்த விதமும் இன்னும் என்மேல் உலவுகிறது என்னால் உன் பிடிப்பின் அழுத்தத்தை உணரமுடிகிறது", என்றாள் துளசி. இமய உச்சியில் இருந்த கோபம் ஒரே நொடியில் உருகி அடிவாரம் வந்தது போல் இருந்தது மாறனுக்கு. மெல்ல சிரித்தான் மாறன். "சரி சரி, நீ உறங்கு நாளை காலை பேசலாம்", என்றான் மாறன். நல்லவேளை நான் சொல்லவேண்டிய மூன்றாவது விஷயம் பற்றி எதுவும் கேட்காமல் வைத்துவிட்டார் என்று துளசிக்கு பெரும்நிம்மதி.
"இனிய இரவு வணக்கம் என் செல்லமே. நாளை எழுந்தவுடன் நீ சொல்ல வேண்டிய மூன்றாவது ரகசியத்தை சொல்லவேண்டும்", என்ற குறுஞ்செய்தி மாறனிடம் இருந்து வந்தது. அந்த குறுஞ்செய்தியைக்கூட வாசிக்காமல் அசதியில் உறங்கினாள் துளசி.
வழக்கம்போல் காலை கடைக்குச்சென்றான் மாறன். துளசி பத்து மணிக்கு எழுந்து மாறனின் குறுஞ்செய்தியைக்கண்டாள். திருதிருவென முழித்தபடி, "நான் சொல்லவந்த போது நீங்கள் கேட்கவில்லை. அன்றே நான் கூறினேன் நானே ஒரு நாள் சொல்லுவேன், அன்று தான் நீங்கள் கேட்டுக்கொள்ளவேண்டும்", என்று பேசிசமாளித்தாள் துளசி. மாறனுக்கு கடையில் இருந்து விரிவாக பேசமுடியவில்லை. அதனால் சரி சரி என்று கூறியபடி அந்த பேச்சைமுடித்தான். "துளசி, என்னிடம் இருந்து ஏதாவது மறைக்கிறாயா?", என்றான் மாறன். "அதெல்லாம் ஒன்றுமில்லையே, ஏன் என்ன ஆச்சு, ஏன் இப்படி கேட்குறீர்கள்", என்று சற்று பதட்டமடைந்தால் துளசி.

-தொடரும்...





Comments