மறைத்த காதல் - பாகம் - 21 !
- Sridhana
- Jun 2, 2020
- 2 min read
Updated: Jun 2, 2020
பாகம் - 21 !
"துளசி, என்னிடம் இருந்து ஏதாவது மறைக்கிறாயா?", என்றான் மாறன். "அதெல்லாம் ஒன்றுமில்லையே, ஏன் என்ன ஆச்சு, ஏன் இப்படி கேட்குறீர்கள்", என்று சற்று பதட்டமடைந்தாள் துளசி. சரி சரி, நான் பின் பேசுகிறேன் என்றான் மாறன்.
துளசி அழைக்கையில் மாறனுக்கு வேலை இருக்கும். மாறன் அழைக்கும்பொழுது துளசி தூங்கிக்கொண்டு இருப்பாள். அடுத்து இருந்த மூன்று வாரமும் இப்படியே சென்றது. பேசி சிக்குவதற்கு பேசாமலே இருந்துவிடலாம் என்று இருவரும் அமைதியாய் பேசாமலே ஆழமாய் ஒருவரை ஒருவர் விரும்பினர். மறுபுறம் திருமண வேலை தடபுடலாக நடந்துகொண்டிருந்தது. திருமணத்திற்கு இரு நாட்கள் முன் பெங்களூரில் இருந்து கிளம்பினான் மாறன்.
அனைவரின் ஆசியுடன் இருமனம் இணைந்தது, அன்றிரவு இருவரும் இணைந்தனர். தேம்பித்தேம்பி அழுதவாறு துளசி தன் தந்தையிடமும் அண்ணனிடமும் விடைபெற்றாள். திருமணக்களைப்பில் மாறனின் அம்மாவிற்கு உடல் நலம் பாதித்தது. மாறனும் துளசியும் மட்டும் பெங்களூர் செல்லவேண்டிய சூழ்நிலையானது.
மாறனுக்கு ஒருபுறம் யாரும் இல்லாமல் செல்கிறோமே இருவர் மட்டும் என்று கவலை இருந்தாலும், மறுபுறம் இருவர் மட்டும் பயணம் செய்வதை நினைத்து மனதிற்குள் வெளிக்காட்டமுடியாத ஒருவிதமான சந்தோசம் மாறனுக்குள். துளசி மட்டும் அழுதபடியே மாறனின் மார்பில் சாய்ந்துகொண்டாள். "துளசி, நான் இருக்கிறேன் உனக்காக. நான் பார்த்துக்கொள்வேன் உன்னை. எனக்கு கூட அழுகைவருது நீ அழுதுகொண்டு வருவதை பார்த்தால். ப்ளீஸ் துளசி, அழாதே, என் செல்ல குட்டில, என் பட்டு குட்டில", என்று கொஞ்சி கொஞ்சி துளசியின் அழுகைக்கு முற்றுப்புள்ளி வைத்தான். மாறன் தன் கைவிரல் அழுத்தம் கொண்டே துளசியை அவ்வப்போது ஆறுதல் அடையச்செய்தான். இருவர் மட்டும் பயணம் செய்யும் அழகை துளசியும் ரசிக்கத்தொடங்கினாள்.
பகல் பயணம், மாறனுடைய புது கார், இருவர் மட்டும். மாறனுக்கு பிடித்த பாடல்கள் அனைத்தும் ஒன்றொன்றாக ஓடியது. ஒரு பாடல் கூட விடாமல் அனைத்து பாடல்களையும் ரசித்தபடி வந்தாள் துளசி. இருவருக்கும் பிடித்த பாடல்கள் போல் வாழ்க்கையிலும் பெரும்பாலும் இருவருக்கும் ஒரே ரசனையாகவே இருந்தது. துளசிக்கு இது பெரிய அதிர்ச்சியாவே இருக்கும்.
அழகான தனி வீடு, வீட்டு வேலைக்கு ஆட்கள். எழுந்து மாறனுடன் அன்பாய் பேசினால் மட்டும் போதும் மாறனுக்கு. வேறு எந்த பொறுப்பையும் துளசிக்கு தரவில்லை மாறன். வாரத்தில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை இருக்கும், கடுமையான உழைப்பாளி மாறன் என்பதைக் கண்டு எப்பொழுதும் பூரிப்படைவாள் துளசி. மாறன் சொன்னதுபோல் மாதம் ஒருமுறை தன் சொந்த ஊருக்கு வந்துபோயி இருந்தனர். ஒரு நாள் விடுமுறையை கூட பார்க்காத இடங்களை இருவரும் சேர்ந்து ரசித்து பார்த்து, பேசாத கதைகள் எல்லாம் பேசி, மாறனின் சிறு வயது முதல் திருமணம் வரை நடந்த அனைத்து விஷயத்தையும் துளசியிடம் வெகுளியாய்க் கூறினான் மாறன். துளசியின் கதைகளை மாறன் சற்று தூண்டிதூண்டித்தான் கேட்கவேண்டியது இருக்கும். நாளடைவில் அதுவும் பழகிவிட்டது மாறனுக்கு.
சாகசங்கள் பல இருவரும் செய்தனர், வெளிநாட்டுப்பயணம் கூட ஓரிருமுறை சென்றனர். அடர்ந்த காட்டிற்குள் இருவர் மட்டும் கூடாரம் போட்டு மிருகங்கள் பயத்தில் இருக்கக்கட்டி பிடித்து தூங்கிய நாட்களும் உண்டு. மலைப்பிரதேசங்களை விடியற்காலையில் மாறனோடு ஒட்டிக்கொண்டு பகலவன் எட்டி பார்ப்பதை ரசித்தனர். துளசிக்கு பிடித்த அனைத்தும் செய்துகொண்டே இருந்தான் மாறன். தினம் தினம் புது காதல் கதையாய் துளசியின் சந்தோசத்திற்காவே வாழத்தொடங்கினான் மாறன். சந்தோசத்தின் உச்சியில் இருந்து ஒரு நூல் அளவுகூட துளசியை கீழே இறங்கவிடவில்லை. இல்லையென்று சொல்லாமல் எவர் என்ன உதவி கேட்டாலும் உதவ தொடங்கினான் மாறன். தான் இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைத்து வைத்திருந்த அனைத்தையும் துளசியை வாழச்செய்தான். துளசியைப்போல் தானும் சுவாசிக்க ஆரம்பித்தான் மாறன். காதலை விட மிக அழகானது இல்லை என்று துளசியை உணரச்செய்தான்.
ஆண்டுகள் நான்கு ஆனது, இருந்தும் குழந்தையைப்பற்றி இப்பொழுது யோசிக்கவேண்டாம் என்று இருந்தனர். குழந்தையைப்பற்றி யார் பேசினாலும் மாறனின் காதுகளைத்தாண்டி துளசிக்கு எட்டாதவாறு பார்த்துக்கொள்வான் மாறன்.
பணியாள் வரவில்லை அன்று. திருமணத்திற்கு முன் துளசி தன்னிடம் கூறுவதாக சொன்ன மூன்றாவது ரகசியத்தை இன்று கேட்கவேண்டும் என்று எண்ணியவாறு துளசிக்கும் சேர்த்து காலை உணவை மாறன் சமைத்தான், ஆசையாக அருகில் வந்து துளசி நெற்றியில் முத்தமிட்டு மதியஉணவிற்கு வீட்டிற்கு வருகிறேன், உன்னால் முடிந்ததை சமைத்து வை என்று கூறி கடைக்கு கிளம்பினான் மாறன். தூக்கத்திலேயே ம்ம் ம்ம் என்று மட்டும் கூறி மீண்டும் தூங்கச்சென்றாள் துளசி. வழக்கம் போல் அன்றும் மாறன் கடைக்கு சென்றான். ஆனால் ஏதோ தவறாக நடக்க போகிறது என்று மட்டும் தோன்றியது மாறனுக்கு.
-தொடரும் ...

நல்லா இருக்கு.. இதேவேகத்துல போகலாம்.😍😍😘