மறைத்த காதல் - பாகம் - 22 !
- Sridhana

- Jun 3, 2020
- 2 min read
Updated: Jun 3, 2020
பாகம் - 22 !
வழக்கம் போல் அன்றும் மாறன் கடைக்கு வீட்டிலிருந்து கிளம்பினான். ஆனால் ஏதோ தவறாக நடக்க போகிறது என்று மட்டும் தோன்றியது மாறனுக்கு. மாறனின் கார் ஐ சட்டென்று மோதியது இரு சக்கர வாகனம் ஒன்று. மாறன் மீது தவறொன்றும் இல்லை இருந்தும் மாறன் மோதியவர் மீது கோபம்கொள்ளாமல், ஒரே ஒரு பார்வை மட்டும் பார்த்தவாறு அங்கிருந்து நகர்ந்தான். கடைக்குள் நுழைந்ததும் துளசிக்கு கைபேசியில் அழைத்தான். துளசி பதில் அளிக்கவில்லை. அங்கும் இங்கும் சிறிது நேரம் நடந்துவிட்டு மீண்டும் அழைத்தான். துளசியின் எண் சுவிட்ச் ஆப் செய்துள்ளதாக வந்தது, சற்று குழப்பத்தோடு கடைக்குள்ளேயே உலவினான் மாறன்.
பகலவன் பரந்த வானில் உச்சிக்கு வந்ததும், வீட்டிற்கு அதிகப்பசியில் கிளம்பினான் மாறன். காலையில் காரில் மோதிய கோபத்தை, மதியம் வரை உறங்கிக்கொண்டே இருந்த துளசியிடம் கொட்டித்தீர்த்தான் மாறன். "ஒருநாள் கூட உனக்கு சமைக்க முடியாதா? இப்படி தூங்குற? கொஞ்சமாவது உனக்கு பொண்ணுன்னு நியாபகம் இருக்கா? உனக்கு எல்லாம் அதிக இடம் குடுத்தது என் தவறு தான். எங்க அம்மா இங்க இருந்திருந்தா எனக்கு விதவிதமா சமைச்சு வைச்சுருப்பாங்க. உனக்கு எங்க தெரிய போகுது அம்மாவோட அருமை. கொஞ்சம் கூட பசியில் வருவேன் னு அக்கறை இல்லை. உனக்கு நான் தினமும் வேலைக்காரன் போல் வேலை செய்தே சாகவேண்டும் என்று நீ திட்டம் போட்டுருக்கியோ?". என்று படபடவென வெடுத்து தள்ளினான் மாறன். துளசி பதிலுக்கு எதுவும் பேசவில்லை. இருந்தும் வார்த்தைகள் நெஞ்சில் குத்திய வலியில் கண்கள் மட்டும் வெளிக்காட்டி விட்டது கண்ணீர் வழியே.
ஓர் ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்தபின் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் கணவனால் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ளபட வேண்டும், அப்படி அவள் அழுவதென்றால் அந்த ஆண் இந்த உலகைவிட்டு பிரியும்பொழுது மட்டும் தான் அழவேண்டும் என்று அடிக்கடி சொல்லும் மாறனே இன்று இவ்வாறு நடந்துகொண்டது துளசிக்கு அதிர்ச்சியாக இருந்தது. "சாப்பிடலாம் வாங்க", என்று மட்டும் கூறி எழுந்து சென்றாள் துளசி. மாறனுக்கு ஒன்றும் புரியவில்லை. சமையலறை பார்க்காமல் நேராக வந்து கத்திவிட்டோமோ என்று மாறனுக்கு மெல்ல உறுத்த ஆரம்பித்தது. கோபத்தில் என்ன பேசினான் என்று அவனுக்கே தெரியவில்லை.
மாறன் சாப்பிட அமர்ந்தான். சுடசுட சாதம், சாம்பார், காரக்குழம்பு, பொரியல், கூட்டு, அப்பளம், பருப்பு பாயாசம் என் அனைத்தும் மாறனுக்கு பிடித்த உணவுகளை மாறனுக்கு பிடித்தவாறு சமைத்து வைத்திருந்தாள் துளசி. இத்தனை ஆண்டுகளில் அதுதான் முதல்முறை துளசி சமைத்தாள். மாறன் வயிறார சாப்பிடவேண்டும் என்றதனால் துளசி எந்த வார்த்தையும் மாறனிடம் பேசாமல், முகச்சுளிப்பும் இல்லாமல், பொறுமையாக ஒன்றொன்றாக பரிமாறினாள். முதல் வாய் சாதம் வாயில் வைப்பதற்குள் , "என்னை மன்னிச்சுரு துளசி. நான் ஏதோ ஒரு கோபத்தை இங்க வந்து காமிச்சுட்டேன். நான் பேசிய வார்த்தைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாத மா", என்று விக்கி விக்கி பேசினான் மாறன். பதில் ஏதும் சொல்லாமல், "ம்ம்.. " என்று மட்டும் கூறினாள் துளசி. முதல் வாய் சாதத்தை துளசிக்கு ஊட்டினான் மாறன். மறுக்காமல் வாங்கிக்கொண்டாள் துளசி. பின் மாறன் அனைத்தையும் ரசித்து ருசித்து சாப்பிட்டான். "துளசி, எங்க அம்மா சமைச்சமாதிரியே இருக்கு. உனக்கு இவ்ளோ நல்லா சமைக்கத்தெரியுமா?", என்று துளசியிடம் பேச்சுகுடுக்க ஆரம்பித்தான் மாறன். சின்ன சிரிப்பு மட்டும் துளசிக்கு. அது துளசியின் பொய்சிரிப்பென்று நன்கு உணர்ந்தான் மாறன்.
சாப்பிட்டு முடித்தவுடன், துளசி அவள் அறைக்குள் சென்றுவிட்டாள். சமாதானம் செய்ய மாறனும் பின்னேசென்றான். "துளசி, என்ன மன்னிச்சுருனு சொன்னேன்ல இன்னும் என் மேல் கோபம் போகவில்லையா ?", என்று பின்னிருந்து துளசியை அணைத்தவாறு பேசினான் மாறன். "இத்தனைநாள் கோபத்தை ஒரே நாளில் கொட்டிதீர்த்துவிட்டீர்கள் நீங்கள். மொத்தமா இப்படி என்மேல் கொட்டுவதற்கு அவ்வப்போது என்னை திட்டியிருந்திருக்கலாம்", என்றுமட்டும் கூறினாள்.
"ஐயோ துளசி, என் மனதில் எந்த கோபமும் இல்லை இத்தனை நாட்களில், இன்று கூட என் நினைவு முழுதும் காலையில் நடந்த விபத்தில் இருந்தது. அந்த நினைவிலேயே நான் ஏதோ உன்னிடம் பேசிவிட்டேன்.", என்று மாறன் நடந்ததை கூற ஆரம்பித்தான். "விபத்தா? என்ன ஆச்சு? அடி ஏதும் இல்லையே? ஒன்னும் பயப்படுறமாதிரி இல்லையே?", என்று பதறிக்கொண்டு ஏங்கி ஏங்கி அழுகத்தொடங்கினாள் துளசி.
"நீ அழுவதை முதலில் நிறுத்து துளசி. எனக்கு ஒன்றும் இல்லை, முழுதாகத்தானே உன் முன் நிற்கிறேன்", என்று மீண்டும் தன் சத்தத்தை ஏற்றி பேசினான் மாறன். பேசிக்கொண்டிருக்கையில் துளசி தன்னை அறியாமல் மயங்கி விழுந்தாள்.

-தொடரும்




Nice.. ஊடலும் காதலும்...😍😍