top of page

மறைத்த காதல் - பாகம் - 23 !

  • Writer: Sridhana
    Sridhana
  • Jun 5, 2020
  • 2 min read

Updated: Jun 6, 2020

பாகம் - 23 !


பேசிக்கொண்டிருக்கையில் துளசி தன்னை அறியாமல் மயங்கி விழுந்தாள். "துளசி, துளசி", என்று பதறிக்கொண்டு மடியில் அவள் தலையை வைத்து, கையில் நீரோடும், கண்ணில் கண்ணீரோடும் முகத்தில் தெளித்தவாறு இருந்தான். "துளசி, நான் உன்னிடம் இனி ஏதும் சொல்லமாட்டேன், கோபம்கொள்ளவும் மாட்டேன். என்ன மன்னிச்சிரு", என்று புலம்பியவண்ணம் பயந்திருந்தான் மாறன். இரண்டு நிமிடத்திற்கு பின் துளசி எழுந்து, “பயந்துவிட்டீர்களா ?, நான் உங்களிடம் விளையாடினேன்.", என்று கூறி சத்தமாக சிரித்தாள் துளசி. சுர்ர்ர்ர்ரென்று ஏறியது கோபம் மாறனுக்கு. எங்கோ, யார்மேலயோ மிச்சம் இருந்த கோபத்தை வெளிக்காட்டித்தீர்த்தான் துளசியின் கன்னத்தில் அறைந்தவாறு.


துளசிக்கு வலி தாங்கமுடியாமல் கண்ணீர் கொட்டியது. எதிர்த்து ஏதும் பேசவில்லை. அமைதியாக அறைக்குள் சென்றுவிட்டாள். மாறனும் துளசியிடம் எதுவும் பேசாமல் வெளியே கிளம்பிச்சென்றான். ராகவனும், தன் தந்தையும் கூட இதுவரை தன்னை அடித்ததே இல்லை. பெண்களை அடிப்பது ஓர் ஆண் செய்யும் வேலையே இல்லை என்று திருமணத்திற்கு முன் மாறன் கூறியது நினைவிற்கு வந்தது. அழுதுகொண்டே இருந்த துளசி, தன் அம்மாவை நினைத்து அதிகம் அழத்தொடங்கினாள். உள்ளங்கைக்குள் வைத்து பொத்திப்பொத்தி பார்த்துக்கொண்ட காதல் எல்லாம் எங்கே போனது மாறனுக்கு என்று அறியாது அதிகம் குழம்பிப்போனாள் துளசி.


வெளியே சென்ற மாறன் இரவு பத்து மணியளவில் வீட்டிற்கு வந்தான். துளசி அழுது அழுது முகம் வாடி இருந்ததை உணர்ந்தான் மாறன். "துளசி, வழக்கம் போல் எல்லா ஆணும் நடந்துகொள்வது போல நானும் நடந்துவிட்டேன். நானே என் கையால் உன்னை அடித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று என் வாயால் சொன்னால் அது உன் வலியைப்போக்காது. பிடி, இதைக்கொண்டு என்னை உன் மனமாறும் வரை அடித்துவிடு", என்று கூறி ஒரு இரும்பு கம்பியை நீட்டினான் மாறன்.


பதில் ஏதும் கூறவில்லை துளசி. துளசி பேசாமல் மாறன் விடுவதாகவும் இல்லை. ஏதோ ஒரு கோபம், உன்னிடம் ஆக ட்டிவிட்டேன் என்னை மன்னித்துவிடு என்று மாறன் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருக்கையில் துளசி, "உன் பெற்றோர்கள் உனக்கு ஒரு பெண்ணை அடிக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கவில்லை, ஆனால் என் தந்தை எனக்கு சொல்லிச்சொல்லி வளர்த்துள்ளார் - உன் காதலுக்கு தகுதியானவர் உன் மீது அன்பை கொட்டி கொட்டி காதலிப்பவர், கோபத்தை உன்னிடம் எந்த வகையில் காட்டினாலும் கொஞ்சம் பொறுமையாக போ என்று. உன்னோடு பிறந்த பெண் பிள்ளை இருந்து, அவளை அவள் கணவன் அடித்திருந்தால் உனக்குள் துடித்திருக்கும். இப்பொழுது நீ சொல் என்னை அதிகம் நேசிப்பவர் நீ. நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என் காதலுக்கும் என் அன்பிற்கும் தகுதியானவரா நீ?", என்று அமைதியாக மாறனின் கண்களை நேருக்கு நேர் கண்டவாறு வினவினாள் துளசி.


துளசியின் இந்த பதிலுக்கும், மீண்டும் அவனிடம் கேட்ட கேள்விக்கும் பதில்கூற முடியாதபடி திகைத்துப்போய் நின்றான் மாறன். தான் செய்த தவறை உணர்ந்து வெட்கப்பட்டு நின்றான் மாறன். இரண்டு நாட்கள் இருவரும் சரிவர பேசிக்கொள்ளவில்லை. என்றும் இல்லாமல் மாறன் கடைக்கு கூட போகாமல் துளசியை சமாதானம் செய்யும் வேலையைமட்டும் செய்துகொண்டிருந்தான்.

மாறன் அடித்த வலி சற்று குறைந்தது துளசிக்கு, இருந்தும் மனதில் இருந்த வலி ஆறவில்லை.


பின் இருந்து துளசியின் தோளை அரவணைப்பாக தொட்டது ஒரு கை. பின் இருந்தவர் முன் வந்துநின்றார் துளசி திரும்பாததால். நிமிர்ந்து பார்த்த துளசி, தன் கண்ணை தன்னால் நம்பமுடியவில்லை. ராஜனின் "எப்படி மா இருக்க?", என்ற ஒரே ஒரு கேள்வி துளசியை கதறி அழச்செய்தது. "என்ன மா என்ன ஆச்சு, அப்பா இருக்கேன் ல", என்று கூறி துளசியை வாரியணைத்தார் ராஜன். "ஆமா ஆமா, அண்ணன்கூட இருக்கேன்ல வாயாடி, ஏன் அழுகுற?. எங்களை பார்த்த சந்தோசத்துல ஆனந்த கண்ணீர் கொட்டுறியா?", என்று துளசியை நக்கலடித்து வம்புக்கு இழுத்தான் ராகவன். அதுதான் முதல் முறை ராஜனும் ராகவனும் பெங்களூர் வருவது.


இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக வந்தவர்களிடம் எதையும் சொல்லி அவர்கள் மனதை புண்படுத்த விரும்பவில்லை துளசி. அதுவரை ஒருவார்த்தைக் கூட பேசாத துளசி மாறனிடம் நெருங்கி நின்று பேசத்தொடங்கினாள். தனது வீட்டில் இளவரசியாக இருந்த துளசியை மாறன் வீட்டின் மகாராணியாக பார்க்கையில் ராஜன் மனம் குளிர்ந்தது. "மாப்பிள்ளைதான் மா ரொம்ப அடம்பிடித்து எங்களை இங்கு வரவைத்தார்.", என்று கூறி மாறன் கைகளை பிடித்தார் ராஜன்.


"ஓ, இவருக்கு இப்படி இன்பப்பரிசு கொடுப்பது ரொம்ப பிடிக்கும். கடந்து மூன்று நாட்களாக ஒரே பரிசு மழை தான் இவரிடமிருந்து", என்று மாறனை பார்த்தவாறு நக்கலாய் சிரித்தாள் துளசி. பெருமையோடு சிரித்தவாறே ராஜன், "நீ நல்லாயிருந்தா அதுவே எங்களுக்கு போதும்மா", என்றார். இவர்களின் பேச்சை கேட்டவாறே குற்றஉணர்ச்சியில் குனிந்தபடி உள்ளே நகர்ந்தான் மாறன். மாறன் நகர்ந்தவுடன் துளசியின் முகத்தை பார்த்தவாறு, "ரொம்ப வலிக்குதாம்மா, மாப்பிள்ளை அடித்தது?" என்றார் ராஜன்.

-தொடரும்


ree

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page