மறைத்த காதல் - பாகம் 24!
- Sridhana
- Jun 9, 2020
- 2 min read
Updated: Jun 14, 2020
பாகம் -24!
மாறன் நகர்ந்தவுடன் துளசியின் முகத்தை பார்த்தவாறு, "ரொம்ப வலிக்குதாம்மா, மாப்பிள்ளை அடித்தது?" என்றார் ராஜன். மளமளவெனக் கொட்டியது கண்ணீர் துளசிக்கு. ராஜனை ஓடிவந்து அணைத்துக்கொண்டாள் துளசி. “அப்போ ரொம்ப வலித்தது, இப்ப இல்லை அப்பா.” என்று கூறி ஏங்கி ஏங்கி அழத்தொடங்கினாள் துளசி. ராஜனுக்கும் தன்னையறியாது கண்ணீர் கொட்டியது.
"ரொம்ப உங்க நியாபகமா இருந்தேன், அதான் அம்மா உங்கள என்கிட்ட அனுப்பிவச்சுருக்காங்க", என்று வெகுளியாய் பேசினாள் துளசி. துளசியைப்பார்த்து ராஜன் "ம்ம்.. மாப்பிள்ளை எனக்கு ரெண்டு நாள் முன்பு அழைத்தார். மாமா உங்க பொண்ண நான் கைநீட்டி அடிச்சுட்டேன் என்ன மன்னிச்சுருங்க னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார். அதுமட்டும் இல்லாமல் என்னை காலையில் பார்த்தவுடன் என் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டார். நீங்ககூட அடிச்சிருக்கமாட்டிங்க இதுவரைக்கும், ஆனால் நான் என் கோபத்தை கையாளத்தெரியாமல் துளசியிடம் கைநீட்டிவிட்டேன் என்றார்", என்று கூறினார். "நீங்க என்ன அப்பா சொன்னீங்க?", என்று துளசி ராஜனிடம் மெல்ல வினவினாள். "என்னத்த சொல்ல, என் பொண்ணு வலிதாங்கமாட்டா மாப்பிள்ளை, எதுவாக இருந்தாலும் அடுத்த நாள் பேசுங்க. உங்கள் கோபமும் குறையும், பெரியவிஷயமும் சின்ன விஷயமாத்தெரியும் னு மாப்பிள்ளையிடம் சொன்னேன் மா", என்றார் ராஜன்.
துளசிக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. தந்தையை பார்ததாலா இல்லை மாறன் மன்னிப்புகேட்டதாலா என்று தெரியவில்லை. ஆனால் துளசி கோபமில்லாமல் வருத்தமில்லாமல் கொஞ்சம் நிதானமாக மூச்சுவிட தொடங்கினாள். ராஜனும் துளசியும் பேசிக்கொண்டிருக்கையில், "என்னை மன்னிச்சுரு துளசி, இனிமேல் இதுபோல் ஒரு தவறு என்றும் நடக்காது", என்று மெல்ல கூறி துளசி அருகில் வந்து அமர்ந்தான் மாறன். மாறன், "துளசி, உன் காலில் கூட விழுகிறேன்", என்றதும் துளசிக்கு லேசாக சிரிப்பு வரத்தொடங்கியது. இறுக்கமாக கையை மூடிக்கொண்டு மாறனின் தலையில் ஒரு கொட்டு கொட்டினாள் துளசி. மாறன் அம்மா என்று கத்தியது மொத்த பெங்களூர்க்கே கேட்டிருக்கும். துளசி முகத்தில் சிரிப்பை பார்த்ததும் தான் ராஜனுக்கும் ராகவனுக்கும் உயிரே வந்தது. அதுவரை பெரும் கவலையில் இருந்தனர்.
"மாமா, இங்க ஒரு வாரம் இருந்துவிட்டுதான் போகவேண்டும்", என்றான் மாறன். "இல்லை மாப்பிள்ளை, இரண்டு நாளில் அறுவடை உள்ளது. நான் அங்க இருக்கனும் கண்டிப்பா. நீங்க சொன்னீங்க னு தான் இவ்ளோதூரம் வந்தோம். இல்லேன்னா நான் அந்த ஊரை விட்டுட்டு வெளியூர் எங்கும் போவதே இல்லை.", என்றார் ராஜன். முந்திக்கொண்டு ராகவனும் "ஆமா ஆமா, எனக்கும் முக்கியமான வேலை இருக்கு, இன்று இரவே கிளம்பவேண்டும்." என்று பேசத்தொடங்கினான். நால்வரும் சிறிதுநேரம் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தனர், பின் ராஜனும் ராகவனும் ஊருக்கு கிளம்பினார்கள்.
வழியனுப்பி வைத்துவிட்டு வீடுதிரும்பினான் மாறன். துளசிக்கு கோபம் எதுவுமில்லை. இருந்தும் மாறன் வந்து பேசவேண்டும் என்று அமைதியாய் தான் வீட்டு பால்கணியில் நின்றுகொண்டிருந்தாள். துளசியை பின்னிருந்து இறுக்கியணைத்து "என்னை மன்னித்துவிடு துளசி. இனி ஒருநாளும் இந்த தவறு நடக்காது. நீ எப்பொழுதும் போல் என்னிடம் விளையாடிக்கொண்டே இரு", என்றான் மாறன். மாறனின் மூச்சுக்காற்றில் சற்று மயங்கினாலும், கொஞ்சம் கெஞ்சத்தான்விட்டாள் துளசி. மாறனின் பிடியில் இருந்து நழுவிக்கொண்டு மாறனைத் தழுவியவாறே மெல்ல நகர்ந்தாள் துளசி.
விலகிய துளசியை இழுத்துப்பிடித்து கட்டியணைத்தபடி, "துளசி, சத்தியம். இனி நான் இந்த தவறை செய்யமாட்டேன்", என்றான் மாறன். "என்னை கட்டிப்பிடிக்கும் தவறை செய்யமாட்டீர்களா?", என்று நக்கலாக பேசத்தொடங்கினாள் துளசி. "ம்ம் ம்ம் இல்லை இல்லை, நான் அதை சொல்லவில்லை, நான்", என்று பேசத்தொடங்குவதற்குள் இதழ் பதித்தாள் மாறனின் இதழில். பேச்சொன்றும் இல்லை, தலையணைகள் மட்டும் உருண்டு புரண்டது கட்டில் மேலே. மெல்ல நகர்ந்தது இரவு இருவருக்கும்.
மறுநாள் காலை வழக்கம் போல் இல்லாமல் மாறன் எழும்புவதற்கு முன்பே துளசி எழுந்துவிட்டாள். சமையல் வேலை அனைத்தும் படபடப்பாக செய்துகொண்டிருந்தாள். மாறன் எழுந்ததும் கருப்பட்டி காப்பி கொண்டுவந்தாள் துளசி. "மாறா மாறா", என்று கொஞ்சி கொஞ்சி எழுப்பினாள் துளசி. விழிக்க மனமில்லாமல் உறங்கிக்கொண்டிருந்தான் மாறன். எழுப்ப எழுப்ப எழும்பாமல், புரண்டு புரண்டு உறங்கியதால், கொண்டு வந்த கொதிக்கும் கருப்பட்டி காப்பியை மாறனின் தலையில் அப்படியே கொட்டிவிட்டாள் துளசி. "ஐயோ, ஐயோ", என்று அலறிக்கொண்டு எழுந்தான் மாறன். எழுந்து பார்த்தால் அருகில் துளசி உறங்கிக்கொண்டிருக்கிறாள், தலையில் காப்பியும் கொட்டவில்லை, சமையலும் நடக்கவில்லை. பின் தான் கனவென்று உணர்ந்தான்.
"மாறா இன்னும் நாள் இருக்கு உன் தலையில கல்லைத்தூக்கி போட. இப்போ நீ காப்பி போடப்போ", என்றாள் துளசி. சின்ன சிரிப்போடு துளசியின் நெற்றியில் முத்தமிட்டு எழுந்து போனான் மாறன். சமையல் அறை செல்லுகையில், துளசியின் கைபேசிக்கு வந்தது ஒரு குறுஞ்செய்தி. ஏதோ ஒன்று மாறனை அந்த குறுஞ்செய்தியை பார்க்க உந்தியது. அதை திறந்தும் உள்ளே," துளசி, ஒரு முக்கியமான விசயம் உன்னிடம் தனியாகப் பேச வேண்டும். வழக்கம் போல் உன் கணவன் இல்லாத நேரத்தில், நான் உன் வீட்டிற்கு வருகிறேன்", என்று இருந்தது.
-தொடரும்

அருமை