மறைத்த காதல் - பாகம் 25!
- Sridhana
- Jun 14, 2020
- 2 min read
பாகம் 25!
ஏதோ ஒன்று மாறனை அந்த குறுஞ்செய்தியை பார்க்க உந்தியது. அதைத் திறந்ததும் உள்ளே,"துளசி, ஒரு முக்கியமான விசயம் உன்னிடம் தனியாகப் பேச வேண்டும். வழக்கம் போல் உன் கணவன் இல்லாத நேரத்தில், நான் உன் வீட்டிற்கு வருகிறேன்", என்று இருந்தது. மாறன் திகைத்துப்போனான். யாருடைய எண் என்றுபார்ப்பதற்குள் துளசி எழுந்து வர மாறன் திருதிருவென முழித்து நகர்ந்து போனான். மனது முழுதும் புரண்டது ஆயிரம் கேள்விகள்.
துளசி தவறுதான் செய்கிறாள் என்ற முடிவுக்கே வந்துவிட்டான் மாறன். இருந்தும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. துளசி சமையல் அறைக்குள் சென்று காப்பி போடத்தொடங்கினாள். "துளசி, கொஞ்சம் இங்க வா?", என்று கணத்தகுரலில் அழைத்தான் மாறன். பல்லியை பார்த்துவிட்டாரோ என்று மனதிற்குள் முணுமுணுத்துக்கொண்டு துளசி மாறனை நோக்கி விரைந்தாள்.
"என்னிடம் ஏதாவது மறைக்கிறாயா துளசி?", என்றான் மாறன். "அதுவந்து .. அதுவந்து .. என்னை மன்னித்துவிடுங்கள், சின்ன தவறுதான். உங்களுக்கு தெரியாமல் சரி செய்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் எப்படி நீங்க தெரிஞ்சுக்கிட்டீங்க?", என்றாள் துளசி. மாறனுக்கு படபடப்பு ஏறியது.
"தூக்கக்கலக்கத்தில் காப்பியில் சக்கரைக்கு பதில் உப்பு போட்டுவிட்டேன். திரும்ப காப்பி போடுறேன்", என்றாள் துளசி. மாறனுக்கு இன்னும் அதிகமா ஏறியது கோபம். எந்த நேரத்தில் என்ன விளையாட்டு இவளுக்கு என்று மனதிற்குள்ளேயே அதிக கோபம்கொண்டான். இருந்தும் நேற்று தான் பெரிய சண்டை நடந்து முடிந்தது, இன்று இந்த புது சண்டை வேண்டாம் என்று போலிசிரிப்பொன்று வீசி நகர்ந்து போனான்.
துளசிக்கு மாறனின் கேள்வியில் இருக்கும் நோக்கம் புரிந்தது. விரைந்து தன் கைபேசி இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தாள். அவளுக்கு எந்த அழைப்போ குறுஞ்செய்தியோ வராததைக்கண்டு சற்று நிதானமானாள்.
ஏன் மாறன் இப்படி நடந்துகொள்கிறான் ? என்ற கேள்வி ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, மீண்டும் மாறன் துளசியை அழைத்தான். "இன்று நான் கடைக்கு போகவில்லை, சற்று அலுப்பாக உள்ளது.", என்றான் மாறன்.
"சுரம் ஏதும் இருக்கா?", என்று பாசத்தோடு அருகில் சென்று மாறனின் நெற்றியில் பதறிக்கொண்டு தொட்டு பார்த்தாள். சில்லென்று இருந்தது மாறனின் தேகம். "ஏன் என்ன ஆச்சு?", என்று எதார்த்தமாக பேசினாள் துளசி. மாறனுக்கு சந்தேகம் இன்னும் அதிகமானது. "ஏன் நான் இருப்பது உனக்கு என்னை இடையூறா இருக்கா ?", என்றான் மாறன். தூக்கிவாரிப்போட்டது துளசிக்கு. துளசியின் உடல் சில்லென்று ஆனது.
கண்டிப்பாக மாறன் ஏதோ ஒரு விசயத்தை தெரிந்து வைத்துள்ளான் என்று துளசிக்கு புரிந்தது. "சரி, சரி, இருங்க. உங்களுக்கு காலை உணவு சமைக்கிறேன்”, என்று கூறி சமையல் அறைக்கு சென்றாள் துளசி. துளசி கைகளில் இருந்த கைப்பேசியை மட்டும் மாறன் வாங்கிக்கொண்டான்.
ஒருவரிடம் பேசிவிட்டு தருகிறேன் என்று வாங்கிக்கொண்டான் மாறன்.
துளசிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பயத்தை வெளியில் காட்டாமல் மெல்ல நகர்ந்து சமையல் அறைக்குள் போனாள் துளசி. "இவர் ஏன் இப்படி புதிதாக நடந்துகொள்கிறார்?", என்று குழம்பிய படி சமைத்துக்கொண்டிருந்தாள். பகலும் நகர்ந்தது, மதியம் முடிந்தது, இரவும் வந்தது. மாறனுக்கு ஒரே ஆச்சரியம், "யாரும் வரவில்லையே? யாருக்கோ வரவேண்டிய செய்தி துளசிக்கு தவறுதலாக வந்துருக்குமோ? நான்தான் அவசியமின்றி துளசியை சந்தேகம் பட்டுவிட்டேனோ?, அதில் துளசி என்று அவள் பெயர் இருந்ததே - பின் எப்படி தவறுதலாக வந்துருக்கும்", பலகேள்விகள் தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்தான் மாறன்.
துளசி அனைத்துவேலைகளையும் முடித்துவிட்டு கதவினை பூட்டச்சென்றாள். என்றும் வழக்கமில்லாமல் காலையில் மாறனின் செருப்புகளை வாசலில் வைத்தாள் துளசி. கதவினை அடைக்கையில் அதனை மெல்ல உள்ளே எடுத்துக்கொண்டு கதவினை அடைத்தாள் துளசி. அடைத்துவிட்டு திரும்பி பார்க்கையில் துளசி முன் நின்றான் மாறன்.
-தொடரும்

Nice.....😍..🤔creating curiosity.. 😘