மறைத்த காதல் - பாகம் 26!
- Sridhana
- Jun 15, 2020
- 2 min read
பாகம் - 26
கதவினை அடைக்கையில் அதனை மெல்ல உள்ளே எடுத்துக்கொண்டு கதவினை அடைத்தாள் துளசி. அடைத்துவிட்டு திரும்பி பார்க்கையில் துளசி முன் நின்றான் மாறன். "என்ன ஆச்சு துளசி? ஏன் என்னுடைய செருப்புகளை வைத்துக்கொண்டு இப்படி திருதிருன்னு முளிக்குற?", என்று வினவினான் மாறன். "தூசியாக இருந்தது, துடைக்க எடுத்தேன். ஏன் எல்லாத்துக்கும் கோபமா பேசுறீங்க?", என்று கடுகு போல் பொரியத்தொடங்கினாள். நாவின் நுனிவரை நின்றது,"உன்னோடு தொடர்பில் இருப்பது யார் என்று?", இருந்தும் எதுவும் பேசவில்லை. மெல்ல சிரித்தபடி நகர்ந்துபோனான். மாறனின் நடவடிக்கை முற்றிலும் மாறுபட்டு இருந்ததை உணர்ந்தாள் துளசி.
இருவரும் படுக்கை அறைக்குள் சென்றனர். "துளசி, ஒரு வாரம் நம்ம வேறு எங்காவது போகலாமா?, ஏற்காடு பக்கம் போகலாம். என்ன சொல்கிறாய்.?", என்று மாறனின் சந்தேகங்கள் பேசத்தொடங்கினான் மாறன். மனதில் ஓடிய குழப்பங்களை ஓரம்கட்டிவிட்டு, வெளியூர் பயணம் என்றதும் துள்ளி குதித்து "ஓ போலாமே", என்றாள் துளசி. துளசியின் அந்த வெகுளி சிரிப்பில் மாறனின் சந்தேகங்கள் அனைத்தும் மயங்கிவிழுந்தது. துளசியை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான் மாறன். துளசியின் நெற்றியை செல்லமாய் தொட்டுத்தொட்டு சென்ற முடிகளை மெல்ல வருடியவாறு, "என் வாழ்க்கை முழுதும் நீதான் நெறஞ்சு இருக்க துளசி, கடந்த நான்கு ஆண்டுகள் எப்படி உன்மேல அளவுகடந்த காதல் கொண்டேனோ அதைவிட அதிகமா நான் உன்னை இப்போ காதலிக்கிறேன். உன் சந்தோசம்தான் என் சந்தோசம். உன் தேவைகளை செய்துதரதும் உனக்கு பாதுகாப்பா இருப்பதும் தன் என்னோட வேலை துளசி", என்று கூறி துளசியின் நெற்றியில் இதழ்பதித்தான் மாறன்.
"மாறா இது எல்லாமே எனக்கு தெரியுமே, தெரியாத விசயம் இருந்த சொல்லுங்க கேப்போம்.", என்று வழக்கம்போல விளையாட்டுத்தனமாக பேசினாள் துளசி. இருந்தும் இதைகூறுகையில் துளசி மாறனை இறுக்கி அணைத்துக்கொண்டு கூறினாள். அவள் அணைப்பில் எந்த ஒரு களங்கமும் வெளிப்படவில்லை. துளசியின் அரவணைப்பு மாறனுக்கு பெரிதும் ஆறுதலாக இருந்தது.
"நாளை மறுநாள் நாம் கிளம்புவோம், நாளை நான் மற்ற ஏற்பாடுகளை செய்கிறேன்." என்றான் மாறன். "சரி சரி உறங்கலாம், எனக்கு கண்ணு தானாகவே மூடுகிறது" என்றாள் துளசி. மாறன் மெல்ல சிரித்துக்கொண்டே, "துளசி, உன்னைச்சார்ந்த விசயங்கள் ஏதாவது என்னிடம் மறைத்திருக்கிறாயா?", என்றான். துளசியிடம் இருந்து பதிலுக்கு சின்ன குறட்டை சத்தம் வந்தது. தூக்கத்தில் எழுப்பினால் துளசிக்கு அதிகம் கோபம் வரும். என்னவார்த்தை சொல்லி திட்டுவாள் என்று மாறனுக்கு கணிக்கவே முடியாது, அவ்வளவு பேசுவாள். மாறன் எதுவும் பேசாமல் அவனும் கண்ணுறங்க முயன்றான்.
புரண்டு புரண்டு படுத்தும் உறங்கமுடியவில்லை மாறனுக்கு. துளசியின் களங்கமில்லா முகமும், குழந்தை கனவு கண்டு சிரிப்பதுபோல் எப்பொழுதும் சின்ன சிரிப்பு துளசியின் இதழ் ஓரமும் இருப்பதை ரசித்துக்கொண்டே உறங்காமல் இருந்தான் மாறன். விடியற்காலை ஐந்து மணியளவில் துளசி கண்முழித்து பார்க்கையில் மாறன் துளசியையே உற்று பார்த்துக்கொண்டிருந்ததை கண்டு மிரண்டு போனாள். "மாறா, ஏன் இப்படி பிசாசு குட்டி மாதிரி முழிச்சு என்னை விழுங்குவது போல் பார்த்துக்கொண்டிருக்கிறாய்?", என்று சற்று பதட்டத்தோடு வினவினாள்.
"துளசி, உன்னைச்சார்ந்த விசயங்கள் ஏதாவது என்னிடம் மறைத்திருக்கிறாயா?", என்றான் மாறன். "மாறா, நான் சுத்தமானவள் மனதாலும் உடலாலும். திருமணத்திற்கு முன் என் மனதில் எவரும் புகுந்ததில்லை, எவரும் என்னை ஈர்த்ததுமில்லை. எந்த ஒரு சலனமுமில்லாமல் தான் நான் உங்களை திருமணம் செய்தேன். ", என்று பொறுமையாக சொன்னாள் துளசி. சட்டென்று மாறன், "திருமணத்திற்கு முன் சரி, திருமணத்திற்கு பின்?", என்று குதர்க்கமான கேள்வி ஒன்றை வீசினான்.
-தொடரும்

Comments