மறைத்த காதல் - பாகம் 27!
- Sridhana
- Jun 21, 2020
- 2 min read
பாகம் - 27
"மாறா, நான் சுத்தமானவள் மனதாலும் உடலாலும். திருமணத்திற்கு முன் என் மனதில் எவரும் புகுந்ததில்லை, எவரும் என்னை ஈர்த்ததுமில்லை. எந்த ஒரு சலனமுமில்லாமல் தான் நான் உங்களை திருமணம் செய்தேன். ", என்று பொறுமையாக சொன்னாள் துளசி. சட்டென்று மாறன், "திருமணத்திற்கு முன் சரி, திருமணத்திற்கு பின்?", என்று குதர்க்கமான கேள்வி ஒன்றை வீசினான்.
"திருமணத்திற்கு முன்பே அவ்வளவு கண்ணியதோடு இருந்த நான் திருமணத்திற்கு பின் என் ஒழுக்கத்தை இழப்பேனா?", என்று மாறனைப் பார்த்து சுட்டெரிக்கும் கோவத்தோடு பேசினாள்.
ஒரு நொடி பின்னே நகர்ந்தான் மாறன். துளசியை தொடக்கூட பயந்து நின்றான். "இல்ல துளசி, என்னை மன்னிச்சுரு, உனக்கு வந்த குதர்க்கமான குறுஞ்செய்தி என்ன குழப்பிருச்சு. நான் இதுவரை உன்னை ஒருநாளும் சந்தேகப்பட்டதில்லை.", என்று கெஞ்சத்தொடங்கினான்.
முறைத்த பார்வை சிமிட்டாமல் மாறனை முறைத்துக்கொண்டே இருந்தாள் துளசி. "நான் இல்லாத நேரம் சொல்லு நான் வருகிறேன்னு ஒரு செய்தி வந்தது உனக்கு. உனக்கு தெரியாமல் நான் அதை பார்த்துவிட்டு அதனை அழித்துவிட்டேன். யார் உனக்கு இப்படியெல்லாம் அனுப்புவது?", என்றான் மாறன்.
துளசியின் சிமிட்டா இமைகள் மெல்ல சிமிட்டியது. "இதுதான் விசயமா?, பக்கத்து வீட்டு நசீமா தான் அப்படி அனுப்புவாங்க. அவங்க நீங்க இருந்தா வரகொஞ்சம் வெட்கப்படுவாங்க. யாரு இப்படி செய்தி அனுப்பினாலும், அது ஏன் ஒரு ஆண் தான்னு தோணுது?", என்று மாறனின் முகத்தில் அறைந்தவாறு இருந்தது துளசியின் கேள்வி. மாறன் கண்களில் சொட்டுசொட்டாக கொட்டியது கண்ணீர். "மீண்டும் மீண்டும் மன்னிப்புக்கேட்க எனக்கே அசிங்கமாக தான் உள்ளது, இருந்தும் நான் செய்தது பெரிய தவறு தான். என்னை மன்னித்துவிடு.", என்று கூறி துளசியின் காலடியில் அமர்ந்தான் மாறன்.
மாறன் மேல் அதிக கோபம் இருந்தும் மாறன் கண்கலங்கி இருந்ததை கண்டு துளசிக்கு மனம் இளகியது. "சரி சரி, விடுங்க. நான் ஒருபோதும் உங்களுக்கு துரோகம் செய்யமாட்டேன், என் அப்பா அப்படி வளர்க்கவில்லை. இதுநாள் வரை என்னை எவ்வளவு நீங்கள் காதலித்தீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். இனியும் நீங்கள் காதலிப்பீர்கள் என்னை. அந்த காதலுக்கு ஒருநாளும் நான் துரோகம் செய்யமாட்டேன். என் வாழ்க்கையில் முதல் ஆணும் இறுதி ஆணும் கணவனாய் நீங்கள் மட்டும்தான். அனைத்திலும் எனக்கு பிடித்தவாறு நீங்கள் நடந்துகொண்டு இருக்குறீர்கள். என்னை உங்கள் உள்ளங்கைகளுக்குள் பொத்திப்பொத்தி வைத்து பொக்கிசம் போல் பார்த்துக்கொள்கிறீர்கள், உங்களை எப்படி நான் ஏமாற்ற யோசிப்பேன்?, உங்க மேல எனக்கு இருக்குற காதல் உங்களுக்கு புரியவில்லையா? அழகான தருணங்கள் எத்தனை நாம் சேர்ந்தே கடந்திருப்போம்? எனக்கு நீங்க உங்களுக்கு நான், நான் மட்டும் தான் என்று நினைத்துதான் வாழ்கிறோம். தேவையில்லாத சிந்தனைகளை நீங்க தவிருங்க. எதுவாக இருந்தாலும் என்னிடம் நேருக்குநேர் கேளுங்க மாறன்.", என்று மாறனிடம் பொறுமையாக கூறி துளசியின் மடியில் மாறனை சாய்த்துக்கொண்டாள். மாறனின் தலையைகோரியபடி மெல்ல சிரித்தாள் துளசி, "நல்ல வேலை சிக்கவில்லை", என்று அவள் மனதுக்குள் பேசிக்கொண்டாள்.
அழுது அழுது எப்பொழுது தூங்கினான் என்று தெரியாதவாறு தூங்கினான் மாறன். விடியற்காலையில் மாறன் எழுவதற்குள் எழுந்து, அவசரஅவசரமாக துளசி அவள் கைப்பேசியில் குறுஞ்செய்தி அடிக்கத்தொடங்கினாள். "நானே சொல்லும்வரை என்னை தொடர்புகொள்ள முயற்சிக்க வேண்டாம், மாறனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. பதில் எதுவும் இதற்கு அனுப்பவும் வேண்டாம்", என்று ஒரு புது எண்ணுக்கு அனுப்பினாள் துளசி.
-தொடரும்

Comments