மறைத்த காதல் - பாகம் 28!
- Sridhana
- Jun 23, 2020
- 2 min read
Updated: Jun 23, 2020
பாகம் 28 !
விடியற்காலையில் மாறன் எழுவதற்குள் எழுந்து, அவசரஅவசரமாக துளசி அவள் கைப்பேசியில் குறுஞ்செய்தி அடிக்கத்தொடங்கினாள். "நானே சொல்லும்வரை என்னை தொடர்புகொள்ள முயற்சிக்க வேண்டாம், மாறனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. பதில் எதுவும் இதற்கு அனுப்பவும் வேண்டாம்", என்று ஒரு புது எண்ணுக்கு அனுப்பினாள் துளசி. வழக்கம் போல் வீட்டில் வேலை செய்பவர் வந்து காலை உணவு தயார் செய்து கொண்டிருந்தாள். மாறனும் எழுந்து முந்தைய நாள் நடந்த விசயங்களை பல்தேய்த்தபடி நினைத்துக்கொண்டு இருந்தான்.
துளசி எப்பொழுதும்போல் வீட்டில் செல்லச்சேட்டைகள் செய்துகொண்டு சுற்றிவந்தாள். மாறன் மட்டும் குற்ற உணர்ச்சியோடு தயங்கி தயங்கி பேசினான். "நம்ம எப்ப கிளம்பப்போகிறோம் வெளியூருக்கு?", என்று ஆசையோடு கேட்டாள் துளசி. மாறன் மெல்ல சிரித்துக்கொண்டு "நாளை கிளம்பலாம் துளசி", என்றான். "ஐ , நான் துணிகள் எல்லாம் எடுத்துவைக்கிறேன் நமக்கு.", என்று துள்ளிக்குதித்து ஓடினாள் அவள் அறைக்குள். அனைத்துவேலையையும் முடித்துவிட்டு வேலை செய்யும் பெண்ணும் கிளம்பினாள்.
துணிகள் எடுத்து வைக்க துடங்கினாள் துளசி. மெல்ல மெல்ல துளசியின் அருகே மாறன் வந்தான். ஒரு வார்த்தைகூட பேசாமல் துளசி அருகே வந்து நின்றான் மாறன். முந்தைய நாள் நிகழ்வுகளை நினைத்துக்கொண்டு மாறன் இருக்கிறான் என்று உணர்ந்தாள் துளசி. "என்ன மாறா, என்ன ஆச்சு, கடைக்கு கிளம்பவில்லையா ? இல்லை இன்றும் கடைக்கு போகவில்லையா?", என்று பேசத்தொடங்கினாள். தயங்கித்தயங்கி துளசி அருகே வந்த மாறன், துளசியை இருக்க அணைத்துக்கொண்டான். முதல் முறை மாறன் துளசியை அணைத்தபோது எப்படி இருந்ததோ, அதேபோல் அரவணைப்பை மாறனின் அணைப்பில் உணர்ந்தாள் துளசி. "மாறா !", என்று மட்டும் துளசி அழைத்தாள்.
இரண்டு நிமிடம் கழித்துதான் இருவருக்குமிடையே காற்றுக்கொஞ்சம் நுழையவிட்டான் மாறன்.
"மாறா, எதையும் யோசிக்காமல் கடைக்கு போயிட்டுவாங்க. நான் எதுவும் நினைக்கவில்லை.", என்று மாறனுக்கு ஆறுதலாகப்பேசினாள் துளசி.
சற்று இதமாக இருந்தது துளசியின் பேச்சும் அரவணைப்பும் மாறனுக்கு.
மாறன் இயல்பு நிலைக்கு மாறும் வரை அயராது ஆறுதல் வார்த்தைகள் வீசினாள், உடன் அவளையும் வீசினாள். கலைந்த படுக்கையும் துயில் இல்லா மேனியுமாய் மாறனின் மார்பில் சாய்ந்துகொண்டு பேசத்தொடங்கினாள் துளசி. "மாறா, இதற்கும் எங்க அப்பாவை இங்க வரைக்கும் அலையவைக்கவேண்டாம். எதுவும் அப்பாகிட்ட சொல்லாதீங்க. இந்த விசயம் அப்பாவிற்கு தெரிந்தால், அப்பா ரொம்ப வருத்தப்படுவார்.", என்றாள் துளசி. "சின்ன சின்ன சண்டைகள் இருப்பது இயல்புதானே இதில் நீ சொல்லும் அளவிற்கு வருந்த எதுவும் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.", என்று பட்டென்று பேசினான் மாறன். "நீங்கள் தந்தையாக இருந்து, உங்களுக்கு ஒரு மகள் பிறந்து, ஆசை ஆசையாய் வளர்த்து, கொஞ்சி கொஞ்சி பேசி, ஒருசொல் கூட தவறாக வரவிடாமல் ஒழுக்கமாய் வளர்த்து, வீட்டின் இளவரசியாய் சுற்றிவருபவளை, உங்களைப்போல் ஒரு மருமகன் சந்தேகக்கண்ணோடு பார்த்துக்கொண்டிருந்தால் அதன் வலியென்னவென்று உங்களுக்கு புரியும்.", என்று தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தாள் துளசி.
திருமணத்திற்கு முன்பே மாறனுக்கு குழந்தையே பிறக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர் கூறிய உண்மையை துளசியிடம் மாறன் மறைத்திருந்த நிலையில், துளசி பேசிய வார்த்தைகள் மாறனுக்கு சுருக்கென்று இருந்தது. மீண்டும் குற்றஉணர்ச்சியில் முகம் வாடினான் மாறன். "மாறா, எந்த பொண்ணுக்கும் அவங்க அப்பாவை தவறாக பேசினாலோ இல்லை ஏளனமாக பேசினாலோ கோபம் வருவது இயற்கை. நானும் அப்படித்தான் பேசிவிட்டேன். மனதில் எதையும் யோசிக்க வேண்டாம்.", என்று மாறனை கொஞ்சத்தொடங்கினாள் துளசி. கொஞ்சம் நேர கொஞ்சலுக்குப்பின் மாறன் கடைக்கு கிளம்பினான்.
மாறன் கிளம்பியதும், சற்று நேரம் கழித்து துளசி கைபேசியில் இருந்து குறுஞ்செய்தி வந்த எண்ணுக்கு அழைத்தாள். "நான் தான், துளசி பேசுகிறேன். இங்க ரொம்ப பிரச்சனை ஆகிவிட்டது. எப்படியோ சமாளித்துவிட்டேன். இனி நீங்கள் இங்கு வரவேண்டாம். எனக்கு தேவைப்படும் பொழுது நானே உங்களுக்கு அழைக்கிறேன். நீங்க எனக்கு எந்த குறுஞ்செய்தியும் இனி அனுப்ப வேண்டாம். நாங்கள் இருவரும் வெளியூருக்கு ஒரு வாரம் செல்கிறோம். வந்தவுடன் நானே உங்களுக்கு அழைக்கிறேன்.", என்று படபடப்போடு பேசினாள் துளசி. துளசி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் துளசியின் கைபேசியில் அவளுக்கே தெரியாமல் பதிவாகத்தொடங்கியது.
-தொடரும்

love story r crime story...😀