மறைத்த காதல் - பாகம் 29 !
- Sridhana
- Jun 29, 2020
- 2 min read
Updated: Jun 30, 2020
பாகம் - 29 !
நீங்க எனக்கு எந்த குறுஞ்செய்தியும் இனி அனுப்ப வேண்டாம். நாங்கள் இருவரும் வெளியூருக்கு ஒரு வாரம் செல்கிறோம். வந்தவுடன் நானே உங்களுக்கு அழைக்கிறேன்.", என்று படபடப்போடு பேசினாள் துளசி. துளசி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் துளசியின் கைபேசியில் அவளுக்கே தெரியாமல் பதிவாகத்தொடங்கியது. துளசி பின் ராகவனுக்கு அழைத்து சிறிது நேரம் நடந்த சண்டைகள் அனைத்தையும் கூறி புலம்பினாள். ராகவனிடம் பேசிய பின் துளசியின் மனது சற்று தெளிவாக இருந்தது.
மாறன் கடையில் இருந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் துளசியை இறுக்கி அணைத்துக்கொண்டான். சில நாட்களாக சண்டைகள் மட்டும் அதிகம் இருந்ததால் மாறனுக்கு துளசியின் நெருக்கத்தை எங்கோ தொலைத்ததுபோல் தோன்றியது. துளசியின் மூச்சுக்காற்று வெளியேறக்கூட சிரமப்பட்டது மாறன் கட்டிஅணைத்த இறுக்கத்தில். அந்த நெருக்கத்தில் மாறனை முழுதாக உணர்ந்தாள் துளசி. சந்தேகமில்லாத நெருக்கம் அது. துளசியின் பழைய மாறன் எனத்தெளிவாக விளங்கியது துளசிக்கு. செல்லகொஞ்சல்கள் கிண்டல்கள் என நகர்ந்தது பொழுது.
பகலவன் மறைந்தான், நிலவொளி பளிச்சென்று வீசியது. பௌர்ணமி இரவில் இருவர் மட்டும் மாறனின் காரில் பயணிக்க தொடங்கினார்கள். வழக்கம் போல துளசிக்கு பிடித்த பாடல்கள் பாடத்தொடங்கின. அதனை சிறிது நேரம் ரசித்துக்கொண்டே பயணித்தனர். சற்று நேரம் கழித்து, துளசி பாடல்களை மாற்றினாள். ஒவ்வொரு பாடல் கேட்கையிலும் மாறனுக்கு துள்ளத்தொடங்கியது மனது, அவன் பழைய நினைவுகளும் தான். இருந்தும் வெளிக்காட்டவில்லை. மாறன் மெல்லசிரித்துக்கொண்டே வண்டியை ஓட்டினான். "துளசி, இது அனைத்தும் எனக்கு பிடித்த பாடல்கள். உனக்கு எப்படி தெரியும்?", என்று ஆச்சரியத்துடன் வினவினான் மாறன்.
சட்டென்று திரும்பிய துளசி, "எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கு எப்படி பிடிக்கும்?", என்றாள். "ம்ம் ம்ம், எனக்கு உன்னை நன்றாகத்தெரியும் துளசி.", என்று சொல்லி அவள் முன்தலைமுடியை மெல்ல களைத்தான். "ஓ, அப்போ எனக்கும் தெரியும்.", என்றுகூறி மாறனின் கைகளை தட்டிவிட்டாள். "சரி, சரி, கோபம் வேண்டாம். நம்ம நிச்சயம் முடிந்து மூன்று வாரம் உன்னிடம் பேச அழைப்பேன், நீ வழக்கம் போல் 10 மணிக்கு தூங்கிவிடுவாய். எனக்கு சிக்கியது உன் அண்ணன் ராகவன் தான். அந்த மூன்று வாரமும் உன் அண்ணனை தூங்கவிடவில்லை நான். எனக்கு தெரியவேண்டிய எல்லா விஷயங்களையும் ராகவனிடமிருந்து கேட்டுக்கொண்டேன்.", என்று சிரித்துக்கொண்டே சொன்னான் மாறன். வாயைப்பிளந்தபடி துளசி, "அடப்பாவி, நானும் பலநேரம் ஆச்சரியப்பட்டுள்ளேன். எப்படி எனக்கு பிடிச்ச எல்லா விசயமும் உனக்கு பிடிக்கிறது என்று. மனசு சரி இல்லன்னு ராகவனிடம் நான் இன்று மட்டும் பேசாமல் இருந்திருந்தால், ராகவன் என்னிடம் எதுவும் சொல்லி இருக்கமாட்டான். நான் இப்பொழுது சொல்லாமல் இருந்திருந்தால் என் ஆயுள் முழுதும் இப்படியே மறச்சுருப்பதான?", என்றாள் துளசி.
"என்ன துளசி, என்ன மனசு சரி இல்ல?. நான் சந்தேகப்பட்டது ராகவனிடம் சொல்லிவிட்டியோ?", என்று மெல்லிய குரலில் தயங்கித்தயங்கி கேட்டான் மாறன். "ம்ம் ம்ம், எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருந்தது மனது. அதான், ராகவனிடம் பேசினேன்.", என்றாள் துளசி. துளசியின் முகம் வாடியது மாறனுக்கு தாங்கமுடியவில்லை. "சரி சரி இருக்கட்டும், என்மேல தவறுதானே? நான் அப்படி என் செல்லக்குட்டியை சந்தேகப்பட்டிருக்க கூடாது தான? வேற என்ன சொன்னார் ராகவன்?", என்று பேச்சைமாற்றினான் மாறன்.
துளசியின் முகத்தில் பட்டாசு போல் புன்னகை தெறித்தது மாறனின் புத்துணர்ச்சியான வார்த்தைகளில். "மாப்பிள்ளை ரொம்ப நல்லவர், வல்லவர், உன்மேல ரொம்ப அக்கறை உள்ளவர், உனக்காக எதையும் செய்பவர், இனி உன் வாழ்க்கைல உனக்கு பிடிச்சமாதிரிதான் எல்லாம் இருக்கணும், உனக்காக மட்டும்தான் அவர் வாழ்க்கை, உன் நிழல் போல உன்னைப்பாத்துப்பாராம், அது இதுன்னு பேசித்தள்ளிட்டான் ராகவன்.", என்றாள் துளசி. "ஓ, அப்படியா?. ராகவன் சொன்னது எல்லாம் நான் செய்தேன், ராகவனிடம் சொல்லாத உன்மேல் சந்தேகமும்பட்டுவிட்டேன். ", என்று மீண்டும் வாடினான் மாறன்.
மாறனின் முகவாட்டத்தை களைக்குமாறு, " மாறா, மாறா, அங்கு பார்", என்றாள் துளசி. மாறன் ஓரமாக வண்டியை மெல்ல நிறுத்தினான் கீழே இறங்கினர். கொட்டும் பனியும் குளிர்ந்த காற்றும் இருவரின் மேனியையும் சிலிர்க்கச்செய்தது. மலை உச்சியின் சாலையோரத்தில் இருவரும் நின்று எதிரே இருக்கும் இருமலைக்கும் நடுவே அழகாய் ஊஞ்சல் ஆடுவது போல் காட்சியளித்த பௌர்ணமி நிலவைக்கண்டு இருவரும் உறைந்துபோனார்கள்.
மாறனின் தோளில் சாய்ந்தபடி நின்ற துளசியின் கைவிரல்கள் மாறனின் கைவிரல்களோடு பின்னிக்கிடந்தன. மாறனின் பட்டுபோன்ற கைகளை மெல்ல எடுத்து துளசியின் வயிற்றில் வைத்து, "மாறா, நீ அப்பாவாகப்போகிறாய்", என்றாள் துளசி.
-தொடரும்

Nice..