மறைத்த காதல் - பாகம் 3!
- Sridhana
- Apr 20, 2020
- 1 min read
Updated: Apr 22, 2020
பாகம் - 3
தந்தையின் குரல் கேட்டு விரைந்து சென்ற ராகவன், “அப்பா” என்று ஒரு வார்த்தைதான் பேசினான். “இவர்களுடைய குடும்பத்தினருக்கு சாப்பாடு நம் மண்டபத்தில் இருந்து அனுப்பிவைக்கச்சொல்லுயா” என்றார் ராகவனின் தந்தை ராஜன். “சரிங்க அப்பா” என்று அமைதியாக கூறினான் ராகவன். “மாப்பிள்ளைக்கு நாம் வாங்கிய பரிசு எங்கே? கொஞ்சம் எடுத்துட்டு வாய்யா” என்றார் ராகவனின் அப்பா. “வரேன் அப்பா” என்று சொல்லிய அடுத்த நொடி மணமகள் அறையை நோக்கி ராகவன் விரைந்தான். ராகவனின் அப்பா மாறனை நோக்கி மெதுவாகச் சென்றார். மாறன் அருகில் ராஜன் செல்வதற்குள், மூச்சு இளைப்பதை வெளியில் காட்டாமல் ஓடி வந்து அவர் பக்கம் நின்றான் ராகவன். இருவரையும் கண்டவுடன் எழுந்து நின்றார்கள் மாறன் குடும்பத்தினர். “உங்களுக்கான சின்ன நிச்சயப்பரிசு தட்டாமல் வாங்கிகோங்க மாப்பிள்ளை” என்று மாறன் கைகளில் சிறு வருணித்த அட்டைப்பெட்டியை கொடுத்து கைக்குலுக்கினார் ராஜன். கைக்குலுக்கியவாறே மாறனின் கைவிரலில் மின்னிய ஏழுகல் வைர நிச்சய மோதிரத்தைக் கண்டு ரசித்தார் ராஜன். “இதெல்லாம் எதற்கு மாமா” என்று மெதுவாக சிரித்தான் மாறன். தள்ளியிருந்த துளசி இதை கண்டும்காணாமல் இருப்பதுபோல் அங்கும் இங்கும் பார்த்தபடி நின்றாள்.
“திறந்து பாருங்கள் மாப்பிள்ளை” என்றான் ராகவன். மாறனுக்கு வாங்கவேண்டாம் என்று ஒருபுறம் தோன்றினாலும், மறுபுறம் ராஜனிடம் மறுத்துபேசவும் முடியாமல் மெல்லத்திறந்தான் பரிசை. முழுவதாகப்பரிசை திறக்கும் முன்பே திகைத்துபோன மாறன் “பிஎம்டபுள்யூ” என்று எழுதிய கார் சாவியைக்கண்டு. “அய்யோ மாமா எதற்கு இதெல்லாம்” என்று பதறினான் மாறன். எதார்த்தமாக வாழ்ந்து பழகிய மாறனின் பெற்றோர்களுக்கும் அதே மனநிலைதான். இருந்தும் ராஜன் “உங்களுக்குச் செய்யாமல் வேறு யாருக்கு செய்யப்போகிறோம்” என்று ராகவன் தோள்களைப் பிடித்தபடி பெருமையாகப் பார்த்தார். “வாங்க மாப்பிள்ளை வெளியில் தான் வண்டி நிற்கிறது” என்று கூறி மாறன் கைகளைப்பிடித்து அழைத்துச்சென்றான் ராகவன். “அய்யோ என்னை விட்டுவிட்டு இவர்கள் மட்டும் எங்குச்செல்கிறார்கள்” என்று துளசி புலம்பி முடிப்பதற்குள் “துளசி மா இங்க வா டா” என்றார் ராஜன். சேலை கட்டியதைக்கூட மறந்து துள்ளி குதித்து ஓடினாள் தந்தையிடம் துளசி. மண்டப வாசலை நெருங்கியதும் வாயடைத்து போனர் அனைவரும், வெள்ளைக்கப்பல் போல் நின்ற “பிஎம்டபுள்யூ - எக்ஸ்7” வண்டியைப்பார்த்ததும். துளசியின் முகத்தை வைத்தே துளசிக்கும் இது இன்ப அதிர்ச்சியாக இருந்ததை உணர்ந்தான் மாறன். “ராஜன் குடும்பம் பற்றி விசாரித்தபோது பலத்த கை என்றார்கள் ஆனால் இவ்வளவு பலத்த கை என்று தெரியாமல் போச்சே” என்று யோசித்துக்கொண்டிருந்த மாறனின் தந்தை செல்வத்தைப் பார்த்து “சம்மந்தி பிடித்திருக்கிறதா உங்களுக்கு ?” என்று அமைதியாகக்கேட்டார் ராஜன். “மகளில்லா எங்கள் வீட்டிற்கு மருமகளாக உங்கள் மகள் வந்தால் மட்டும் போதுமே, எதற்கு இதெல்லாம் ? “ என்று பட்டென்றுச்சொன்னார் செல்வம்.
-தொடரும்
Comments