மறைத்த காதல் - பாகம் - 4!
- Sridhana

- Apr 21, 2020
- 2 min read
பாகம் - 4 ! “மகளில்லா எங்கள் வீட்டிற்கு மருமகளாக உங்கள் மகள் வந்தால் மட்டும் போதுமே, எதற்கு இதெல்லாம் ? “ என்று பட்டென்றுச்சொன்னார் செல்வம். “தவறாக நினைக்கவேண்டாம் சம்மந்தி, எல்லாம் ஒரு ஆசையில் செய்றதுதான். நம்ம பிள்ளைங்களுக்கு தான செய்கிறோம், மறுக்காம ஏத்துக்கோங்க” என்று செல்வம் கைகளைப்பிடுத்துக்கொண்டு கேட்டார் ராஜன். செல்வம் மறுவார்த்தை பேசத்தொடங்குவதற்குள் ராகவன் “மாப்பிள்ளை, வண்டியை எடுங்க! ஒருமுறை ஓட்டிப்பாருங்க” என்றான். மாறன் தன் தந்தையைப் பார்த்து “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று தன் கண்ணசைவாலே உணர்த்தினான். செல்வத்தைப்பார்த்து “நீங்களும் ஏறுங்களேன், ஒரு முறைச்சுற்றி வாருங்கள்” என்றார் ராஜன். “இல்ல சம்மந்தி அப்புறம் பார்க்கலாம், நீங்க உங்க மாப்பிள்ளையோடு போயிட்டு வாங்க” என்றார் செல்வம். மாறன் கார் கதவைத்திறந்தபோது துளசியின் கண்களில் “நானும் வரலாமா?” என்ற ஏக்கம் தெரிந்தது. “மாமா, துளசியை நான் அழைத்துச்செல்லலாமா?” என்று வினவினான் மாறன். வாய்விட்டு கேட்டதனால் தட்டமுடியாமல் “சரி மாப்பிள்ளை” என்று ராஜன் சொன்னவுடன், ராகவனோ “ஆகட்டும் ஆகட்டும்” எனச்சொல்லி கிண்டலாய்ச் சிரித்தான். மாறனின் தாய் லீலா முன்கதவைத்திறந்து, “வா மா, வந்து ஏறு” என்றாள். பின்னாள் மாறனின் பெற்றோர்கள் ஏறுவார்கள் என்றெண்ணி, “சரிங்க அத்தை” என்றாள் துளசி. அதுவரை இருந்த சந்தோஷம் சிறிது படபடப்பாக மாறியது துளசிக்கு, மாறனின் பெற்றோர்கள் வண்டியில் ஏறாததைக்கண்டு. “வண்டியில் ஏறுங்க அத்தை” என்ற துளசியிடம், “நீங்க இருவரும் பார்த்து போயிட்டு வாங்க, நாங்க இங்க இருக்கோம்” என்றாள் லீலா. தூக்கிவாரிப்போட்டது துளசிக்கு, வண்டியிலுருந்து அவளும் இறங்கிவிடலாமா என்றெல்லாம் தோன்றியது. யோசித்துக் கொண்டிருக்கையிலேயே, மெல்ல நகர்ந்தது கார். ஆம், இருவர் மட்டும் ஒரு காருக்குள்! இருவரும் தனியாகப்பேச வழித்தேடிக்கொண்டிருந்த மாறனுக்கும் இந்தப்பயணம் எதிர்பாராத ஜாக்பாட்டாகத்தான் இருந்தது. தார்ரோட்டில் வண்டிகள் எதுவும் செல்லவில்லை. இருந்தும் வண்டியின் வேகம் நாற்பதைத் தாண்டவில்லை. “மா” என்று பேச ஆரம்பித்த துளசியின் வாயை அடைத்தது மாறனின் “துளசி” என்ற மென்மையானக்குரல். துளசியின் வலதுகையை மெல்லப்பிடித்தான் மாறன். பதட்டமாக இருந்த துளசிக்கு மாறனின் கை சூடு இதமாக அரவணைத்தது. மாறனை பார்த்தபடி, மாறன் பேசத்தொடங்கியதை கவனித்தாள். சின்ன தயக்கத்தோடு “துளசி ... கட்டுப்பாடற்ற மகிழ்ச்சியில் எந்த பாடலும் இல்லாமல் என் இதயம் எனக்குள் நடனமாடுவதை என்னால் உணர முடிகிறது. ஆனால் நான் அதை வெளியே காட்டவில்லை. ஒரு மனிதனாக இந்த பிறப்பு கடவுளிடமிருந்து நமக்கு கிடைத்த மிக அருமையான பரிசு என்று நான் நினைக்கிறேன். இந்த அழகான வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் வாழ நீங்களும் நானும் ஒன்றிணைகிறோம். உண்மையில்.... (சின்னச்சிரிப்பு) உண்மையில் என் கண்கள் உங்கள் கண்களைச் சந்தித்த முதல் கணத்திலிருந்தே நான் உங்களை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன், உங்களோடு வாழ .. ஆசையாக உள்ளது... உங்களுக்கு ஒரு நண்பர் தேவைப்படும்போது நான் உங்கள் சிறந்த நண்பராக இருப்பேன், உங்களுக்கு கண்டிப்புத் தேவைப்படும்போது நான் உங்கள் மீது அக்கறையுள்ள தந்தையாக இருப்பேன். எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது எந்தவொரு நபருக்காகவும் உங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன். “ என்று பேசிமுடித்தான் மாறன். துளசிக்கு பேச ஏதும் வார்த்தைகளே கிடைக்கவில்லை. திக்குமுக்காடி ஒருவழியாக பேச ஆரம்பித்தாள் துளசி. “உங்கள” ன்னு துளசி பேச ஆரம்பிப்பதற்குள் விரைவாக அழுத்தினான் கார் பிரேக்கை மாறன். -தொடரும்...





Nice. Rocking as usual
Super going da.. Creating eager to knw wat next.. Keep going..