மறைத்த காதல் - பாகம் 5!
- Sridhana

- Apr 23, 2020
- 2 min read
பாகம் - 5
திக்குமுக்காடி ஒருவழியாக பேச ஆரம்பித்தாள் துளசி. “உங்கள” ன்னு துளசி பேச ஆரம்பிப்பதற்குள் விரைவாக அழுத்தினான் கார் பிரேக்கை மாறன்.
இவ்வளவு சீக்கிரம் எதற்காக மாறன் காரை நிறுத்தினான் என்று புரியாமல் மாறனையே பார்த்துக்கொண்டிருந்தாள் துளசி. மாறனுக்கும் மனமில்லை காரை நிறுத்த. இருந்தும் அவர்கள் திருமண மண்டப நுழைவாயிலை அடைந்ததால்தான் காரை நிறுத்த வேண்டியிருந்தது. ராஜன் நிற்பதைக்கண்ட பின்னர் துளசியும் திருமண மண்டபத்தை அடைந்துவிட்டதை உணர்ந்தாள். துளசியின் முகத்தில் இருந்த ஏமாற்றத்தை மாறன் கவனித்தான். துளசி காரில் இருந்து இறங்குவதற்கு முன், மாறன் கீழே இறங்கி தயக்கத்துடன் ராஜனிடம், "மாமா, தயவுசெய்து என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள், நான் இன்னும் ஒரு முறை சென்று திரும்பி வரலாமா?" துளசி அதிர்ச்சியடைந்ததோடு தர்மசங்கடமாகவும் உணர்ந்தாள். அவளுக்குள் தானே கேள்வி எழுப்பினாள், "இவர் ஏன் இப்படி செய்கிறார்? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?" என்று. மாறனின் பெற்றோர்களோ குழப்பமடைந்து மாறனை முறைத்துப் பார்த்தார்கள்.இதைக்கேட்ட ராஜனுக்கு ஆச்சரியமாக இருந்தும் வெளிகாட்டாமல் மரியாதையோடு மாறனிடம், "நிச்சயமாக மாப்பிள்ளை" என்று கூறினார். நிறைய எதிர்பார்ப்புகளுடன், மாறன் துளசியுடன் மீண்டும் காரை ஓட்டத் தொடங்கினார். "துளசி, இப்போது சொல்லுங்கள், உங்களைப் பேசவிடாமல் நானே பேசிக்கொண்டிருந்தேன். நீங்கள் பேசத்தொடங்கியதும் மண்டபத்திற்கே வந்துவிட்டோம். என்னிடம் ஏதாவது சொல்ல விரும்பினீர்களா?" என்றான் மாறன். மாறன் தனது கேள்வியை முடிப்பதற்குள் துளசி, "இப்போது ஏன் மீண்டும் வாகனம் ஓட்ட வேண்டும் என்று கேட்டீர்கள்?". மாறன் காரை சாலை ஓரத்தில் நிறுத்தினான். இரண்டு நிமிடம் மாறனின் அமைதி துளசியை மீண்டும் மெதுவாக பேசவைத்தது. “நீங்கள் இப்படி எனது அப்பாவிடம் கேட்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை” என்று பொறுமையாக பேசினாள். மெல்லச்சிரித்தான் மாறன். “எனக்கு உங்கள, வாங்க-போங்கன்னு மரியாதையா பேசுவது, ஏதோ ரொம்ப பெரிய ஆள்கூட பேசுவது போல் பயமா இருக்கு” என்றாள் துளசி. “மரியாதை மனதில் இருந்தால் மட்டும் போதும், உனக்கு தோன்றுவதுபோல் என் மரியாதை கெடாதவாறு என்னை அழைத்தால் போதும்” என்று துளசியின் கைகளைப்பிடித்தபடி கூறினான் மாறன்.
கைகளைப்பிடித்ததும் பேசும் வார்த்தைகள் எதுவும் காதுக்குள் விழவில்லை துளசிக்கு. மெதுவாக நிமிர்ந்து மாறன் கண்களைப்பார்த்து “ஏழு வயதில் நான் என் தாயை இழந்தேன். அப்போதிலிருந்து என் தந்தையும் ராகவனும் என்னை பாசமாக கவனித்து வருகிறார்கள். என் தந்தை மற்றும் சகோதரரின் ஒவ்வொரு அசைவும் என் மகிழ்ச்சிக்காக மட்டுமே இருந்தது. எங்களிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும், எங்கள் வாழ்க்கையில் ஒருவித அன்பை இழக்கிறோம். அந்த அன்பை, நீ எங்கள் வீட்டில் கொண்டுவருவாய் என்று நம்புகிறேன். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், நான் உன்னைப் பார்த்த முதல் தருணத்திலேயே நான் உன்னை காதலிக்க ஆரம்பித்துவட்டேன் என்று சொல்ல முடியாது, ஆனால் நீ இதுவரை பேசியது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.“ என்று கூறியபோதே மாறன் முகம் சிறிது சோர்வடைந்ததை உணர்ந்தாள் துளசி. மாறன் கண்களைப்பார்த்து - அவன் கைகளை மெல்லப்பிடித்து, “ஆனால் கண்டிப்பாக உனக்கு நல்ல மனைவியாகவும், உன் பெற்றோர்களை என் பெற்றோர்களாக எண்ணி என் மொத்த பாசமும் கொட்டி கவனித்துக்கொள்வேன். “ என்றாள் துளசி. துளசியின் கைகளை மெல்ல வருடிவிட்டு சிரித்தான். “நமக்காக காத்திருப்பார்கள் “ என்று சொல்லி வண்டியை எடுத்தான் மாறன். இருவரும் சிரித்தபடியே அழகான மௌனத்தை ரசித்தவாறு நெருங்கினர் மண்டபவாயிலை. குழப்பத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த அனைவரின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது வண்டியிலிருந்து சந்தோசமாய் இறங்கிய துளசி மாறனைப்பார்த்தவுடன். ராஐன் அருகில் மெல்ல வந்து கார் சாவியை நீட்டினான் மாறன்...

-தொடரும்...





Nice.. Maran character 😍
Wonderful