மறைத்த காதல் - பாகம் 6!
- Sridhana

- Apr 24, 2020
- 2 min read
Updated: Apr 24, 2020
பாகம் - 6
ராஐன் அருகில் மெல்ல வந்து கார் சாவியை நீட்டினான் மாறன்...
சிறிது குழப்பத்தோடு “என்ன மாப்பிள்ளை என்ன ஆச்சு?” என்றார் ராஐன். “அய்யயோ, போச்சா! தவறா எதாவது பேசிட்டேனோ? இவர் ஏன் கார் சாவியை அப்பாவிடம் கொடுக்கிறார்?” என்று தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருந்தாள் துளசி. “மாமா, உங்க ஆசைக்காகத்தான் வண்டியை ஓட்டிப்பார்த்தேன், துளசி எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா மட்டும் போதும், எங்கள் வீட்டில் உலவும் ஆனந்தம் துளசியால் பலமடங்காக பெருகும். அதுவே எங்களுக்கு போதும். இதற்குமேல் இந்த விஷயத்தில் என்னை வற்புறுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.” என்று மாறன் தன்மையாகப் பேசினான். வாயடைத்து நின்றார் ராஜன். மாறனின் பெற்றோருக்கு முகத்தில் பெருமை கலந்த சிரிப்பு வந்தது. ஆனால் துளசியோ இப்படி தன் தந்தை ஆசையாக கொடுத்த பரிசை அவர் மனம் வருந்தும்படி மாறன்
மறுத்துவிட்டானே என்ற கோபம் அவள் உச்சிக்கு சென்றது. “சரி சம்பந்தி, நாங்கள் அப்படியே கிளம்புகிறோம். அடிக்கடி சந்திப்போம் இனி” எனக்கூறி மாறனின் பெற்றோர்கள் மட்டும் சிரித்தனர். ராஐனால் இயல்பாக இருக்க முடியவில்லை இருந்தும் செல்வத்தின் கைகளைப்பிடித்து “சரிங்க சம்பந்தி” என்றார்.
நிமிர்ந்து தன்னை துளசியின் கண்கள் ஒருமுறைக் காணாதா என்று ஏக்கத்தோடு தத்தளித்தான் மாறன். இருவரும் காரில் பகிர்ந்த விஷயங்கள் அனைத்தையும் மறக்கச்செய்தது மாறன் மேல் இருந்த கோபம், அதுவே துளசியை நிமிர்ந்து பார்க்கவும் உந்தவில்லை.
லீலா துளசி அருகில் வந்து “வெளிய எங்கேயும் அதிகம் போகாத மா, பழச்சாறு எல்லாம்
நல்லா குடி மா” என்று சிரித்தபடி கூறினாள். லீலாவின் முகத்தைக்கூட பார்க்காமல் “சரிங்க அத்தை” என்று இரண்டே வார்த்தைகள் பேசிவிட்டு சட்டென்று மண்டபத்தின் உள் சென்றாள் துளசி. “முதல் நாளே ஊடலா” என்று மனதிற்குள் யோசித்துகொண்டு மெல்லச்சிரித்தான் மாறன். அனைவரும் மாறனின் வண்டியில் மாறன் வீட்டிற்கு கிளம்பினர்.
துளசியின் நடவடிக்கை ராஜனுக்கு ஏமாற்றத்தை தந்ததோடு மாறனின் இந்தமுடிவுதான் அதற்கு காரணம் என்று உணர்ந்துகொண்டார்.
அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ராகவன் மெல்ல துளசி அருகே சென்று “துளசி, உன் வாழ்க்கை மாப்பிள்ளையால் மிக அழகாக இருக்கப்போகிறது” என்று பேசத்தொடங்கினான். துளசி அருகில் இருந்த தண்ணீர் பாட்டில் பறந்தது ராகவன் மேல். ஆம், ராகவன் மேல் விட்டெரிந்தது துளசிதான். “அப்பா எவ்வளோ ஆசையா வாங்கிக்கொடுத்தாங்க, இத திருப்பிக்கொடுத்தாங்க, அவங்க நல்ல மாப்பிள்ளையா?” என்று கோபத்தில் கத்தினாள்.
”எம்மா, கொஞ்சம் கோபப்படாமல் நான் சொல்வதைக்கேள். அப்பா மாப்பிள்ளையின் குணமறியாமல் உன்
மேல் இருக்கின்ற பாசத்தில் இவ்வளவு விலையுயர்ந்த பரிசைக்கொடுத்தார். அப்போது கூட வேண்டாமென்று சட்டென்று உதறாமல், அப்பாவின் ஆசைக்காக ஓட்டிக்காட்டினார். ஆனால் எதற்காக இரண்டுமுறை ஓட்டினார் என்று தெரியவில்லை (கேளியாக சிரித்தபடியே). விலை உயர்ந்த வண்டி கூடத்தேவையில்லை, நீ மட்டும் போதுமென எவ்வளவு பெருந்தன்மையாக பேசினார் மாப்பிள்ளை. தன்மானமும் தன்நம்பிக்கையும் நிறைந்த மாப்பிள்ளையை தான் அப்பா உனக்காக தேர்ந்தெடுத்திருக்கிறார். ” என்று விளக்க ஆரம்பித்தான். ராகவன் பேசப்பேச கொஞ்சம் கொஞ்சமாக துளசியின் கோபம் குறையத்தொடங்கியது. “உன்னிடம் சொல்லாமல் போகிறோமே என்ற தவிப்பு அவர் தயங்கி தயங்கி வண்டியில் ஏறியதில் தெரிந்தது” என்றான் ராகவன். இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் பெரிய சத்தம் இருமுறை கேட்டது.

-தொடரும்





Nice