மறைத்த காதல் - பாகம் 7!
- Sridhana

- Apr 25, 2020
- 2 min read
பாகம் - 7
ராகவனும் துளசியும் பேசிக்கொண்டிருக்கையில் பெரிய சத்தம் இருமுறை கேட்டது - நாகரீகம் தெரிந்த ராஐன் சிறிது கோபமாக திறந்த கதவில் தட்டிய சத்தம்தான் அது. தன் தந்தை அறையின் உள்ளே வருவதைக்கண்டு “சிக்கிவிட்டாள் துளசி” என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே திறுதிறுவென்று முளித்தான் ராகவன். ராகவன் பேசியதில் தன்தவறை ஏற்கனவே உணர்ந்திருந்தாள் துளசி. எங்கே தன் தந்தை தன்னை கோபமாக பேசிவிடுவாரோ என்று பயந்து ராஜன் பேசத் துவங்குவதற்குள் “என்னை மன்னிச்சிருங்க அப்பா, உங்க பரிச வேணாம்னு சொன்னதும் எனக்கு மனசு கஷ்டமா போச்சு, அதைச்சரியா வெளிக்காட்ட தெரியாமல் சட்டென்று உள்ளே வந்துட்டேன் அப்பா” என்று கூறி ராஜன் தோளில் சாய்ந்தாள் துளசி.
மகள் தவறை உணர்ந்ததை அறிந்ததும் பறந்தது ராஜனின் கோபம். தந்தையின் தோளில் சாய்ந்த துளசியைத்தட்டிஎழுப்பியது ராஜன் சட்டைப்பையில் இருந்த கைப்பேசியின் ஒலி. அழைப்பது சம்மந்தி என்று தெரிந்தது செல்வம் என்ற பெயர் வருவதைக்கண்டு. “சொல்லுங்க சம்மந்தி, எதையாவது விட்டுச்சென்றுவிட்டீர்களா?” என்றார் ராஐன். “மாமா, மாறன் பேசுகிறேன்... துளசிகிட்ட பேசனும் கொஞ்சம், இப்ப பேசலாமா?” என்று பொறுமையாய் ராஜனிடம் முறையிட்டான் மாறன்.
“இதோ தருகிறேன்” என்று கைப்பேசியை துளசியிடம் நீட்டி “மாப்பிள்ளைதான் பேசுமா” என்றார் ராஜன்.
கைப்பேசியைத் தன் காதில் வைத்ததும் “துளசி” என்ற அந்தக்குரல் அவளை அமைதியாய் நிற்கச்செய்தது. வெட்கத்தில் தான் துளசி பேசாமல் நிற்கிறாளோ என்றெண்ணி “ராகவா, துளசி பேசட்டும், நம்ம வீட்டிற்கு போக ஏற்பாடு செய்யலாம்” என்று சிரித்தபடி அறையின் வெளியே சென்றனர் ராகவனும் ராஜனும்.
“துளசி, என் மேல் கோபமா” என்ற கேள்வி துளசியின் அமைதியை களைத்தது. “இப்போ இல்லை” என்றாள் துளசி. “அப்போ இதுவரை கோபமாகத்தான் இருந்தியோ?” என்று போட்டுவாங்கத்தொடங்கினான் மாறன். “ம்ம்” மட்டும் கேட்டது மாறனுக்கு.
“உன் கோபம் புரிகிறது எனக்கு. மாமா ஆசையாகத்தான் வாங்கித்தந்தார் ஆனால், ஏனோ எனக்கு வாங்க மனம்வரவில்லை. இவ்வளவு விலையுயர்ந்த பரிசு மிக அதிகம். உனக்குத்தேவையான அனைத்தும் என்னால் முடிந்தவரை உனக்குக்கிடைக்கச்செய்வேன். உன்னை என்றும் சிரித்தபடி பார்த்துக்கொள்வேன். நான் இருக்கிறேன் உனக்காக என்றும். அவர்களைவிட நன்றாகப் பார்த்துக்கொள்வேன் எனச்சொல்லமுடியாது, ஆனால் உனக்கு பிடித்தவாறு பார்த்துக்கொள்வேன். இனியும் மாமா சிரமம்பட வேண்டாம். ” என்றான் மாறன். இதற்கும் “ம்ம்” என்று துளசி கூறினாள். “நான் எங்க இருக்கேன்னு கேட்கமாட்டியா?” என்று மாறன் துளசியிடம் கேட்டான். “எங்கு இருக்கிறீர்கள், அதற்குள் வீட்டிற்கு போய்விட்டீர்களா?” என்றாள் துளசி. “இன்னும் போகவில்லை, சொன்னால் சிரிக்கக்கூடாது- எனது கார் டயர் காற்று இறங்கிவிட்டது. இப்பொழுது கார் டயர் மாற்றுபவர் வந்து மாட்டிக்கொண்டிருக்கிறார்.” என்றான்
மாறன். “அய்யயோ, இதை சகுனத்தடை என்பார்களா அத்தை மாமா ?” என்று பயத்தோடு கேட்டாள் துளசி. “இல்லை, என் மருமகள் நாம் கிளம்பும் பொழுது வருத்தப்பட்டாள், அதற்கு தான் கடவுள் இப்படி தண்டிக்கிறார்ன்னு அம்மா சொன்னாங்க. என் செல்ல துளசியைக் கொஞ்சம் பேசி சரி செய்யலாம்ன்னு மாமாக்கு கூப்பிட்டேன்” என்றான் மாறன். “என்னை மன்னித்துவிடுங்கள்” என்றாள் துளசி. “இருக்கட்டும் அதை விடு, இரவு உனக்கு அழைக்கிறேன், இப்போ எதையும் யோசிக்காமல் நிம்மதியாக சிரித்தபடி சுற்றி வா என் அழகான ராட்ச்சசி” என்று செல்லமாகக் கூறினான் மாறன். இருந்தும் “என்னை மன்னித்துவிடுங்கள்“ என்று மீண்டும் கூறினாள் துளசி. “இன்னும் எவ்வளவோ இருக்கு இந்த சின்னவிஷயத்திற்கு ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறாய்” என்று கேட்டான் மாறன். அதற்கு துளசி “நான் உங்களிடம் மறைத்த ஒரு விஷயம் உள்ளது” என்று மெதுவாகச்சொன்னாள். இதயம் கொஞ்சம் வேகமாகத்துடித்தது மாறனுக்கு. இருந்தும் வெளிகாட்டாமல், “என்ன அது ?” என்றான் மாறன்...

- தொடரும்...





👍🏻