மறைத்த காதல் - பாகம் 8!
- Sridhana

- Apr 28, 2020
- 2 min read
Updated: Apr 30, 2020
பாகம் - 8
துளசி “நான் உங்களிடம் மறைத்த ஒரு விஷயம் உள்ளது” என்று மெதுவாகச்சொன்னாள். இதயம் கொஞ்சம் வேகமாகத்துடித்தது மாறனுக்கு. இருந்தும் வெளிக்காட்டாமல், “என்ன அது ?” என்றான் மாறன்...
“நீங்கள் அப்பாவிடம் கார் வேண்டாம் என்று சொல்லியதும் நான் தான் உங்க வண்டில சின்ன ஆணி ஒன்றை, எங்க வீட்டு பணியாளரிடம் வண்டி டயரில் இறக்கச்சொன்னேன்.” என்று பயந்து கொண்டே சொன்னாள் துளசி. “அடிப்பாவி!, எதாவது எங்களுக்கு ஆகியிருந்தால்?” என்று துளசி கூறியதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் சற்று திணறினான். “உங்க கார் டயர் டியூப்லெஸ் தான், அதில் ஆணி ஒன்றும் செய்யாது. அதுவும் சின்ன ஆணி ஒன்றும் செய்யாது, காற்று மட்டுமே இறங்கும் என்று தெரியும் எனக்கு” என்று தவறு செய்ததைக்கூட மறந்து பெருமையாகப் பேசினாள் துளசி. துளசியின் அசட்டு சிரிப்பையும் விரல்கள் அசைவுகளையும் மாறனால் மனத்திற்குள்ளே கற்பனை செய்யமுடிந்தது. “இதை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் , குறிப்பாக அத்தையிடம்” என்று கெஞ்சத் தொடங்கினாள் துளசி. “உன் கோபமும் அழகு கெஞ்சலும் அழகு” என்று மாறன் கைப்பேசியில் சொல்லி முடிப்பதற்குள் “எனக்கு நல்லா கொஞ்ச கூடத்தெரியும்” என்றாள் துளசி. “ஓ ஓ.. அப்படியா ? எங்க என்ன கொஞ்சு, கேட்போம்!” என்றான் மாறன். “ஷ்ஷ்ஷ்...” என்ற சின்ன சத்தம் மட்டும் துளசியிடம் இருந்து வந்தது. “இப்போ கோபம் எதுவும் என்மேல இல்லையே?” என்றான் மாறன். “இல்லை இல்லை.. கோபம் பக்கத்து ஊருக்கே பறந்து போய்விட்டது... அது இருக்கட்டும் இன்னும் வண்டி சரிசெய்யவில்லையா? ராகவனிடம் வண்டி அனுப்பச்சொல்லவா? எவ்வளோ நேரம் இப்படி நிற்பீர்கள் அனைவரும்?” என்று சிறிது அக்கறையாக விசாரித்தாள் துளசி. “வண்டி தயாராகி விட்டது, என் அழகான ராட்ச்சசியோடு பேசிக் கொண்டிருப்பதால் நான் இன்னும் வண்டிக்குள் ஏறாமல் இருக்கிறேன்.”, என்றுச்சொல்லி சிரித்தான். வெட்கம் வந்தாலும் அதைப் பேசும்பொழுது வெளிக்காட்டாமல், “போதும் போதும் பேசியது, கிளம்புங்கள் வீட்டிற்கு” என்று அதட்டினாள் துளசி. சிரித்துக்கொண்டே “பயந்துட்டேன் பயந்துட்டேன், இதோ கிளம்புகிறேன். இரவில் அழைக்கிறேன் உனக்கு, நானும் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லவேண்டும்” என்றான் மாறன். “என்னவென்று இப்பொழுதே சொல்லுங்கள், இல்லையென்றால் என் மண்டைக்குள் பெரிய மேளம் கொட்டிக்கொண்டு இருப்பது போல் இருக்கும்” என்று பட படவென பேசினாள் துளசி. சிரித்தபடியே மாறன், “இரவில் அழைக்கிறேன், இதழ்கள் பேச அல்ல இதயங்கள் பேசுவதற்கு” என்றதும் ஒன்றும் ஓடவில்லை துளசிக்கு. சற்று வானில் பறப்பது போல் இருந்தது துளசிக்கு. “ம்ம்” மட்டும் கூறினாள் துளசி. மாறனின் கைப்பேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது, ஆனால் அவன் இதயம் இன்னும் பேசிக்கொண்டிருந்தது துளசியிடம்.
வெட்க்கப்பட்டு தனியே சிரித்துக் கொண்டிருந்த துளசியை, தள்ளி நின்று கவனித்த ராஜன் கண்கலங்கினார். “ராகவா, துளசியை அழைத்து வா, வீட்டிற்கு கிளம்புவோம்” என்று கண்களில் ஆனந்தக் கண்ணீரோடும் மனமகிழ்ச்சியோடும் சிரித்தபடி கூறினார் ராஜன். “அப்படி என்ன சொல்லப்போகிறார்?” என்ற கேள்வியோடு, ராகவன் அறையின் உள் வந்ததைக் கூட கவனிக்கவில்லை துளசி.
#ஸ்ரீதனா

-தொடரும்...





😍😍😘