மறைத்த காதல் - பாகம் 9!
- Sridhana

- Apr 29, 2020
- 2 min read
Updated: May 2, 2020
பாகம் - 9
“அப்படி என்ன சொல்லப்போகிறார்?” என்ற கேள்வியோடு ராகவன் அறையின் உள் வந்ததைக் கூட கவனிக்கவில்லை துளசி. தலையில் செல்லமாய் தட்டி “இங்கு ஒருவருக்கு கோபம் உச்சத்தில் இருந்தது, என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை அவர் கண்கள் வெட்கத்தில் கீழே பார்த்தபடியே உள்ளது” என்று துளசியை வம்புக்கு இழுத்தான் ராகவன். பட்டென்று நிமிர்ந்த துளசி “வெட்கமா ? எனக்கா ? அய்யோ அய்யோ, உன் அருமை மாப்பிள்ளை போட்ட மோதிரம் கீழே விழுந்துவிட்டது. எங்கே விழுந்ததுன்னு தேடிக்கொண்டிருக்கிறேன். நீயும் கொஞ்சம் கீழே தேடு” என்று சிறிது விறுவிறுப்பாக பேசினாள் துளசி.
“என்ன ? மோதிரத்தை காணோமா? இதைக்கூட பத்திரமா வைக்கத்தெரியாதா ?” என்று அதட்டியபடி கீழே குனிந்து தேட ஆரம்பித்தான் ராகவன். ராஜன் வருவதை அவர் கால் நடையின் ஓசையை வைத்து அறிந்தாள் துளசி. சிறிது நேரம் ராகவன் தேடிய பின் துளசி ராகவனிடம் “இதையா இவ்வளவு நேரம் தேடுகிறாய்?” என்று வினவி நிச்சய மோதிரம் அணிந்த விரலை நீட்டினாள். “கையில் வைத்துக்கொண்டே என்னை ஏமாற்றுகிறாயா?” என்று அடிக்க நெருங்குகையில் நுழைந்தார் ராஜன்.
“என்ன ராகவா என்ன நடக்கிறது?” என்று கேட்டு நடப்பது அறியாது நின்றார் ராஜன். “ஒன்றுமில்லை அப்பா” என்று துளசியை முறைத்தபடியே நின்றான் ராகவன்.
ராஜன் அவர்களிடம் “வண்டி வந்துவிட்டது, கிளம்பலாம் நாம்” என்றதும், துளசி ‘எங்கு ராகவனிடம் சிக்கிவிடுவோமோ‘ என்று எண்ணி விரைந்து வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். கூடவே ராகவனும் பின் தொடர்ந்தான். “நானே முதன்முறையாக வெட்கப்படுகிறேன், அமைதியா போகாமல் என்னை ஏன் வம்புக்கு இழுத்தாய், அதனால் தான் இந்த சின்ன விளையாட்டு”, என்று முறைத்த அண்ணனிடம் ராஜன் காதில் எட்டாதவாறு மெல்ல கூறினாள் துளசி.
“இதற்காகவா என்னை அவ்வளவு நேரம் தேட வைத்தாய் ? உன்னை அப்புறம் பார்த்துக்கொள்கிறேன்”, என்று வண்டிக்குள் ஏறினர் அனைவரும்.
ராகவன் வண்டி ஓட்ட ஆரம்பிப்பதற்குள் ராஐன் கைப்பேசியில் அழைப்பு வந்தது.
“சம்மந்தி எண் தான், ஆனால் மாப்பிள்ளையாக இருக்குமோ?” என்று மனதிற்குள் தனக்குத்தானே பேசிக்கொண்டு “சொல்லுங்க மாப்பிள்ளை” என்றார் ராஜன். இரு நொடி அமைதிக்கு பின், “மாமா, நாங்க வீட்டுக்கு வந்துவிட்டோம். நீங்க மண்டபத்தில் இருந்து கிளம்பிவிட்டீர்களா?” என்று தயங்கி தயங்கி பேசினான் மாறன். “இப்போதுதான் கிளம்பினோம் மாப்பிள்ளை”, என்றார் ராஜன். “ராகவன் மற்றும் எல்லோரும் கிளம்பியாச்சா மாமா?”, என்று மீண்டும் வினவினான் மாறன். துளசியிடம் பேச விரும்புகிறார் மாப்பிள்ளை என்பதை உணர்ந்து “ராகவன் மற்றும் துளசி இருவரும் இங்குதான் இருக்கிறார்கள், துளசியிடம் தருகிறேன் மாப்பிள்ளை” என்றார் ராஜன். “சிக்கினாள் துளசி, என்னை மோதிரம் தேடவிட்டதற்கு கிடைத்த பரிசு” என்று மனதிற்குள் பேசிக்கொண்டான் ராகவன்.
மாறனிடம், “ம்ம்” என்று மிக அமைதியாக கூறினாள் துளசி. “கிளம்பியாச்சா?” என்று மாறன் கேட்டதற்கு, “ம்ம்” என்று மீண்டும் பதில் வந்தது துளசியிடம் இருந்து. “அப்பா அருகில் இருக்கிறாரா?” என்று மாறன் கேட்டதற்கு “இல்லை வண்டி பின்னால் ஓடிவருகிறார்” என்று சொல்லத்தோன்றியது துளசிக்கு.
இருந்தும் “ம்ம்” என்று சற்று அழுத்திச்சொல்லி முடித்தாள் துளசி. “சரி சரி, நான் வைக்கிறேன் இப்பொழுது. ஆனால் இரவுவரை என்னால் உன்னிடம் பேசாமல் இருக்கமுடியாது. உன் குறும்புத்தனம் என் கண்களுக்குள் அழகான காதல் குறும்படமாய் ஓடுகிறது. அவ்வளோ அழகு உன் அசைவுகள். ம்ம்ம். சரி நீ வீட்டிற்கு செல்லும் வரை குறுஞ்செய்தி அனுப்பு எனக்கு”, என்று ஆசையாய் கூறினான் மாறன். “ம்ம் தான உன்பதில், அதையும் நானே சொல்லிக்கொள்கிறேன்” என்று கூறி சிரித்தான் மாறன். கைப்பேசி துண்டிக்கப்பட்டது. கைவிரல் கோர்க்க ஆரம்பித்தன, எழுத்துக்களை - குறுஞ்செய்தியில் !
துளசிக்கு மாறனின் முதல் குறுஞ்செய்தி “துளசி” என்பதுதான். “துளசி” என்ற குறுஞ்செய்தி அவளை அருகில் இருந்து அழைப்பது போல் இருந்தது. ஆனால் உண்மையில் அருகில் இருந்து அழைத்தது ராகவன். “துளசி, கைப்பேசியை கொஞ்சம் தா, அதில் சார்ஜ் குறைவாக உள்ளது”, என்று சிரித்தபடி துளசியிடம் கேட்டான் ராகவன். “அய்யோ இவர் குறுஞ்செய்தி அனுப்புகிறார், ராகவன் குறும்புத்தனம் செய்கிறானே, என்ன சொல்லி ராகவனை சமாளிப்பது”, மனதிற்குள்ளே யோசிக்க ஆரம்பித்தாள் துளசி...

... தொடரும்





Nice 👍🏻