என் முடிவில் உன் தொடர்ச்சி - பாகம் - 7!
- Sridhana
- Jul 13, 2020
- 5 min read
Updated: Jul 15, 2020
மூடுபனி - பாகம் – 7
ஏழாம் எழுத்தாளர்!
எழுதியவர் - திருமதி. ஷர்மிளா ஆனந்த்
ஜனாவின் ஏவியேஷன் தேடல் ஒருபுறம் இருக்க மனதின் ஒரு மூலையில் இன்னொரு தேடலுக்கான விடை மட்டும் கிடைக்கவில்லை. அதை பற்றி
சிந்திக்கக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தான். அவனால் சதீஷ் யாழினி இருவரையும் தவறாக நினைக்க முடியவில்லை. யாழினி மனதிற்குள் வந்த நாளை அவன் நினைக்காத நேரமில்லை. அவள் தனக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் எத்தனை என்று தனக்குள்ள சிரித்துக்கொண்டான்.
அனால் அவனுக்கு இந்த காதலை உடனே சொல்லவிருப்பமில்லை. சொல்லாமல் இருப்பதில் தான் எத்தனை சுகம்? இந்த காதல் அவனை பிதற்ற
செய்யவில்லை. அவனை ஒழுக்கப்படுத்தியுள்ளது என்று பெருமை பட்டுக்கொண்டான். யாழ் என்ற இரண்டு எழுத்து அவனுள் வீணை மீட்டுக்கொண்டு இருந்தது. நாட்கள் மிக அழகாக நகர்ந்தன.
"உள்ள வரலாமா" என்று சதீஷின் குரல் கேட்டு படித்துக்கொண்டு இருந்த புத்தகத்தை மூடி வைத்தான் ஜனா. "இப்ப எப்படி இருக்கீங்க" என்று
படுத்திருக்கும் ஜனா அம்மாவை பார்த்து கேட்டான். " இப்ப கொஞ்சம் பரவாயில்லை" என்றாள். நர்ஸ் ஒருவர் " அம்மாவுக்கு இன்ஜெக்ஷன் போடணும்" என்றவுடன் இருவரும் வெளியில் வந்தார்கள். ஜனாவின் அம்மாவிற்கு நான்கு நாட்களுக்கு முன் பிபி அதிகமாகி விட்டதால் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். சதீஷ் தினமும் அம்மாவை பார்க்க தவறாமல் வந்து விடுவான். அம்மா கூட கேட்டார்கள் "ஏன்டா சதீஷ்யை தினமும் வரச்சொல்கிறாயா?" என்று.. சதீஷ் சொன்னால் கேட்க மாட்டான் என்று ஜனாவும் ஒன்றும் சொல்ல வில்லை.
இந்த ஒன்றரை வருடத்தில் அவர்களின் நட்பு இன்னும் வலுவடைந்தது. சதீஷ் "சரிடா மச்சான் நாளைக்கு பார்க்கிறேன். சீக்கிரமே அம்மாவிற்கு உடம்பு தேற வேண்டும். நீ இல்லாமல் கல்லூரிக்கு போகவே பிடிக்கவில்லை. யாழ்
கூட நாளை என்னுடன் வருவதாக கூறினாள்" அந்த பெயரை கேட்டவுடன் ஜனா சிரித்துக்கொண்டான். அலைபேசியல் அம்மாவைப் பற்றி கேட்டு கொண்டுதான் இருக்கிறாள். அவளிடம் ஒரு முறையாவது பேசவில்லை எனில் அந்த நாளுக்கே அர்த்தம் இருக்காது என்று சிறிய புன்முறுவலோடு சதீஷைப் பார்த்தான். அவன் சென்றதும் அம்மாவை பார்க்க சென்றான். நன்றாக உறங்கிகொண்டு இருந்தார்கள். கதவை சாற்றிவிட்டு அருகில் இருக்கும் வராண்டாவில் நடந்தான். அதே மாடியில் இன்னொரு புறம் பிரசவம் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டது. "குழந்தை சிவப்பா அப்பா மாதிரியே இருக்கு, எத்தனை அழகான பெரிய கண்கள், கருப்ப அத்தை மாதிரியே இருக்கு பாரேன், இப்பவே எவ்வளவு நீளமான விரல்கள், இப்படி நர்ஸ் ஒரு குழந்தையை பிரசவ பிரிவில் இருந்து வெளியில் கொண்டு வரும் போது இந்த பேச்சுக்களை கேட்கவே சுவாரஸ்யமாக இருந்தது ஜனாவிற்கு.
மகிழ்ச்சியின் காரணமாக இவர்களாவே என்னவெல்லாம் யூகித்து பேசுகிறார்கள். நல்லதை சொன்னால் அதுவே நடக்கும் என்பார்களே அது தான் காரணம். இதேபோல் தானும் ஒரு நாள் ஒரு அப்பாவாக வெளியில் தன் குழந்தையை பார்க்க நிற்பேன் அல்லவா அந்த நொடி எப்படி இருக்கும் என்று தனக்குள்ள சிரித்துக்கொண்டான்.அம்மாவிற்கு சரியாகி வீடு திரும்பிவிட்டார்கள். செல்வி இப்போது மருத்துவம் பயிலுவதால் வகுப்புக்களை தவற விட முடியாது என்பதால் தான் ஜனா அம்மாவுடன் மருத்துமனையில் இருந்தான்.
மறுநாள் காலை ஜனா கல்லூரி போவதற்கு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தான். காலை நேர பரபரப்பு அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
குறிப்பாக அறக்க பறக்க அம்மா கூட்டிச்செல்லும் சிறுவர் சிறுமியரை பார்க்கவே அவனுக்கு சிரிப்பாக இருக்கும். அந்த காலை வெயில் கண்கள் கூச
தன்னுடன் எடுத்து வந்த குளிரூட்டும் கண்ணாடியை அணிந்தான். குழந்தைகளின் பள்ளி பேருந்து அவனை கடந்து சென்றது. வெறும் குழந்தைகளின் அழகிய தலைகள் தெரிந்தன. சிரிக்கிற குழந்தை, இன்னொரு சிறுவனோடு பேசிக்கொண்டு இருக்கும் குழந்தை, பள்ளி போகவே பிடிக்காமல் மிரண்டு முழித்து கொண்டு இருக்கும் குழந்தை, தூங்கி கொண்டுஇருந்த குழந்தை என்று அனைவரும் சட்டென்று மனதில் பதிந்துவிட்டனர். இவர்களுக்கு என்ன வயது இருக்கும் ஆறு அல்லது ஏழு வயது இருக்குமா? உடனே அவனுக்கு தோட்டத்தின் பூக்கள் நினைவிற்கு வந்தன. அவை ஒரு சில நேரங்களில் செடிகள் பெரிதாக வளரும்போது தோட்டத்து சுவரை தாண்டி வெறும் பூக்கள் மட்டும் எட்டிப்பார்க்கும்... நித்ய மல்லியும், ரோஜாவும், செம்பருத்தியும் அப்படி வெறும் பூக்கள் மட்டும் தெரிய பார்க்க அழகாக இருக்கும். அப்படி தான் இருக்கு இந்த குழந்தைகளின் தலையை மட்டும் பார்க்கும் பொழுது.. இன்று என்னவாயிற்று எனக்கு காலையில கவிதை பேச இல்லை பிதற்ற ஆரம்பித்து விட்டேனா! எனக்குள் இருந்த ரசிகனை தூண்டி விட்டது யார்?
அன்று யாழினியின் பிறந்தநாள். "என்னவளின் பிறந்தநாள் இன்று" இதை ஒரு நூறு முறையாவது மனதினுள் ஜனா சொல்லியிருப்பான். நமக்கு மிகவும்
பிடித்தவர்களின் பிறந்தநாள் நம் பிறந்தநாளை விட எத்தனை ஆனந்தம். அவள் நன்றாக இருக்க மனம் கடவுளை வேண்டியது. அன்று மாலை அவளை
தனியாக சந்திக்க நினைத்துக்கொண்டான். என்றுபோல் அன்றும் யாழினி அவன் கண்களுக்கு தேவதையாக தெரிந்தாள். சிறு வயதில் அம்மா சொன்ன
கதை நினைவுக்கு வந்தது. அதில் வந்த அத்தனை தேவதைகள் ஒரு சேர வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவளுடைய வரவு அன்று.
அவள் ,மிக மகிழ்ச்சியாக காணப்பட்டால், அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாள். அவளை பார்க்கும் போது சிறு வயதில் குழந்தைகள் மிக
ஆர்வமாக தங்கள் பிறந்தநாளை கொண்டாடும் மகிழ்ச்சிக்கு நிகராக இருந்தது. ஆம் அது தான் யாழினி லட்சிய கனவு இருந்தாலும் சின்ன சின்ன
நிகழ்விற்கு ஆனந்தப்படுவாள். "என்ஜாய் லிட்டில் தின்க்ஸ் இன் லைப்" என்பதை அடிக்கடி சொல்லுவாள். உன் கனவுகளை துரத்தும் போது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க மறக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
சதீஷ் முக வாட்டத்தோடுகாணப்பட்டான். இப்போதெல்லாம் பல நாள் சதிஷ் இப்பிடி தான் இருக்கிறான். என்னவாயிற்று இவனுக்கு என்று ஜனா
யோசித்துக்கொண்டே " என்ன சதீஷ் உடம்பு சரியில்லையா" என்று கேட்டதிற்கு அவனால் சட்டென்று பதில் கூற முடியவில்லை. " இல்ல காலையில டைம் இல்லனு சாப்பிடல அதான் சோர்வாக இருக்கு" என்று சமாளிக்க முயன்றான்.. இந்த பதிலில் தன நண்பன் சமாதானம் அடைந்தது கண்டு ஒரு பெருமூச்சு விட்டான். ஜனா சதீஷின் மன ஓட்டத்தை அறியாமல் பேசிகொண்டேபோனனான்.சதீஷின் குழப்பத்திற்கு காரணம் செல்வி. செல்வியை ஏன்தான் சந்தித்தோம் என்று நினைத்துக்கொண்டான். தெளிந்த நீரோடைபோல் போய்க்கொண்டு இருந்த தன் வாழ்வு செல்வியின் நினைவுகளால் அலை அடித்துக்கொண்டு இருந்தது. ஜனாவிற்கு தெரிந்தால் என்ன நினைத்துக்கொள்வான் என்ற பயமும் பதட்டமும் அவனுள் இருந்துகொண்டே இருந்தது. இந்த குற்ற உணர்ச்சியை போக்க என்ன செய்வது அறியாமல் திகைத்தான்.இதோ கல்லூரி தொடங்கி இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. முதல் ஆறு மாதம் ஜனாவின் நட்பு, பின்பு நான், யாழ், ஜனா மூவரும் என்று கல்லூரி வாழ்க்கை களைகட்டியது. அந்த நாட்கள் மிகவும் ரம்மியமானவை. அவையெல்லாம் செல்வியை சந்தித்த பிறகு மாறிவிட்டது. அவளை கண்ட அந்த முதல் நாள் மனதில் நிழலாடியது.
ஒன்றரை ஆண்டு முன்பு நடந்த நிகழ்வு ஆனால் மனதிற்கு பிடித்த விஷயமாக இருந்தால் அது நேற்று நடந்தது போல் காட்சி அளிக்கிறது. அன்று மாலை
வழக்கம் போல் கல்லூரியில் இருந்து வீட்டுற்கு செல்லும் வழியில் புகைவண்டி பெட்டி நின்று விட்டது. பக்கத்தில் இருக்கும் இயந்திர வல்லுனரை தொலைபேசியில் அழைத்தான். காத்துகொண்டு இருந்த தருணத்தில் அந்த வீதி இரண்டு பக்கமும் போகன்வில்லா மரங்கள் சூழ எவ்வளவுஅழகு என்று ரசித்துக்கொண்டு இருந்த தருணத்தில் "ஹலோ நீங்க சதீஷ் தானே " என்று ஒரு மென்மையான குரல் கேட்டு திரும்பி பார்த்தான். பளிச்சென்ற புன்னகையுடன் செல்வி நின்று கொண்டு இருந்தாள். இவனால் சட்டென்று அடையாளம் கண்டு கொள்ளமுடியவில்லை. " நான் ஜனாவின் தங்கை என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள்"."நீங்க தானே அந்த மச்சான் குரலுக்கான சொந்தக்காரி? என்று சிரித்தான். "ஆம்" என்று ஒரு வெட்க புன்னகை அவளிடமிருந்து. "மன்னித்து விடுங்கள் என்னால் உங்கள் பிறந்தநாள் அன்று நேரில் வாழ்த்து சொல்ல முடியவில்லை". சதீஷ்யை பார்த்தவுடன் செல்விக்கு மிகவும் பிடித்து போயிற்று. ஜனா இந்த ஆறு மாத காலமும் சதீஷ் பற்றியே பேசி அவனைப்பற்றி மனதிற்குள் என்றுமே ஒரு மரியாதை இருந்தது. அந்த ஆறடி உயரமும், கலையான முகமும், அதற்கேற்ற கண்ணியமும் அவனை தனியே நிறுத்தி காட்டியது. ஆனால் பேச்சும் பார்வையும் கம்பீரமாக இருந்தது. இப்போது புரிந்தது செல்விக்கு அண்ணா ஏன் இவன் புராணம் தினமும் பாடுகிறான்.
“ அண்ணா உங்களின் புகைப்படம் காண்பித்தார். உங்களை பற்றி பேசாத நாளே கிடையாது”. “தனக்கு இப்படி ஒரு நண்பன் கிடைத்ததில் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி” என்றான். "ஆமாம் இப்படியே மாறி மாறி புகழ்ந்து கொண்டே இருங்கள் என்றாள். உங்களை பார்த்து விட்டேன் ஆனால் யாழினியை தான் இன்னும் பார்க்கவில்லை" என்றதற்கு சதீஷ் "அதற்கென்ன ஒரு நாள் அவளையும் வீட்டிற்கு அழைத்து வருகிறேன் என்றான்". இயந்திர வல்லுநர் புகை வண்டிப்பெட்டியை சரிபார்த்த பின்பு . " உங்களை வீட்டில் ட்ராப் செய்யட்டுமா?:என்றான். சிறிது தயக்கமாக இருந்தாலும் அவனிடம்
மறுப்பு சொல்ல மனம் வரவில்லை. சரி என்று கூறி "நூலகம் செல்கிறேன் அங்கே இறக்கி விடுங்கள்" என்றாள். காரில் ஏறிய பின் அவளுக்கு அது
ஆச்சரியமாக இருந்தது. புது அனுபவமாக இருந்தது அவனுடன் அந்த பயணம். மேலும் அவளை யோசிக்க விடாமல் அவனின் கேள்வி "என்ன
படிக்கிறிங்க".. எனக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை. அதற்காக என்னை தயார்படுத்தி கொண்டு இருக்கிறேன், குடும்ப சூழ்நிலையின்
காரணமாக அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே என் இலட்சியத்தை அடைய முடியம் என்றாள்.
ஜனா இதைப்பற்றி சதீஷிடம் கூறியது நினைவிற்கு வந்தது. அவன் தங்கை பற்றி பெருமையாக பேசுவான். நீ கட்டப்போகிற மருத்துவமனைக்கு ஒரு
மருத்துவர் தயாராகி கொண்டு இருக்கிறாள் என்று பேசியது நினைவுக்கு வந்தது. தன் இலட்சியத்தை பற்றி பேசும்போது செல்வி "நான் என்ன நினைத்து கொண்டு இருக்கிறேன் என்று திடுக்கிட்டாள். சதீஷ்யை வெறும் தன் அண்ணனின் தோழனாக பார்க்க வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டாள். என்ன நினைத்தாலும் அவன் கார் ஓட்டும் அழகை செல்வி ரசிக்கத்தவறவில்லை. எவ்வளவு நிதானமாக ஓட்டுகிறான், ஓட்டும் போது அவன் தலை குனித்து கேள்வி கேட்கும் அழகையும் ரசிக்கத்தவறவில்லை. அவன் சிரிக்கும் போது "சிரிக்காதே" என்று சொல்லனும்போல் இருந்தது செல்விக்கு. இதை பற்றி ஏதும் அறியாமல் "நூலகம் வந்து விட்டது செல்வி" என்றான். "மிக்க நன்றி" என்று காரில் இருந்து இறங்கினாள்.
இறங்கும் போது அங்கு யாழினி காத்துகொண்டு இருந்தாள். அவளை அங்கு பார்த்தவுடன் செல்விக்கு ஆனந்தம். "இப்பொழுதான் உங்களை பற்றி சதீஷியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். இன்று உங்கள் இருவரையும் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி." என்றாள். ஆனால் யாழினியிடம் அதே மகிழ்ச்சி காணப்படவில்லை. ஒரு புன்சிரிப்போடு "ஆம்" என்றாள். நூலகம் போக மனமில்லாமல் "சதீஷ் என்னை பேருந்து நிலையத்தில் இறக்கி விடுங்கள், வீட்டில் வேலை இருக்கிறது" என்றாள். சதீஷ் அதற்கு ஏதேனும் கேட்பான் என்று நினைத்தாள் ஆனால் மாறாக அவன் "சரி" என்றதும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தந்து செல்விக்கு. பின்பு தொடர்ந்த கார் பயணம் அமைதியாக சென்றது. இந்த மௌனம் அவளுக்கு பிடிக்கவில்லை. சதீஷ், யாழினி இருவரும் பதட்டமாக கண்ணப்பட்டனர். யாழினியை கண்ட பின்பு தான் சதீஷ் சற்றே மாறிவிட்டான்." என்னவாயிற்று இவர்களுக்கு" என்று செல்வி குழப்பிப்போனாள். பேருந்து நிலையம் வந்தவுடன் " சாரி செல்வி எங்கள் இருவருக்கும் முக்கிய வேலை உள்ளது" என்று சதீஷ்
காரை ஓரமாக பார்க் செய்தான். மூவரும் காரில் இருந்து இறங்கினார்கள். "பை விரைவில் பார்ப்போம்" என்று சதீஷ், யாழினி இருவரும் அவளிடம் விடை பெற்று அந்த பெரிய கடைவீதி வழியாக சென்றனர். அவர்கள் போவதை பார்த்து கொண்டு இருந்தாள் செல்வி. " அப்படி என்ன முக்கியமான வேலை இவர்களுக்கு" என்று ஆயிரம் கேள்வி தோன்றியது. அன்று மாலை ரம்மியமாக தெரிந்தது.
திருமதி. ஷர்மிளா ஆனந்த் அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து எழுத்தாளர் திருமதி. விஜி விவேக் அவர்களின் பாகம் - 8 தொடரும் !
Flashes us back and couldnt come back !