என் முடிவில் உன் தொடர்ச்சி - பாகம் - 3
- Sridhana

- Jul 7, 2020
- 4 min read
Updated: Jul 15, 2020
தெளிவு - பாகம் - 3!
மூன்றாம் எழுத்தாளர்!
எழுதியவர் - திருமதி. பௌசியா கான்
இத்தனை காலமாய் தான் அனுபவித்திராத புது அனுபவத்தை தன்னுள் ஏற்படுத்திய யாழினி, இவ்வளவு நேரமாய் காத்திருந்த நண்பன் தன் உயிர்த்தோழன் சதிஷ் தான் என்பதை பார்த்து சற்றே அதிர்ந்து தான் போனான் ஜனா. இருப்பினும் பெரிதாய் ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் நண்பனை பார்த்து "ஹாய் டா மச்சான்" என்றான் சகஜமாய். சதிஷும் ஜனாவை அங்கு எதிர்பார்க்காததால் சற்று ஆச்சர்யமானான். "என்னடா இது! நாள் முழுவதும் நம்முடன் முகம் கொடுக்காம கோவமா இருந்தவன் இங்க என்னடானா யாழினிகிட்ட பேசிகிட்டு இருக்கானே!" என்று மனதிற்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டு "ஹாய் டா" என்றான்.
கேள்விகள் பல தன்னுள் எழும்பி குழப்பிக்கொண்டிருக்க அதை வெளியில் காட்டாமல் சமாளிக்க ஜனா பட்ட பாடு இருக்கே 'அய்யய்யோ'. நண்பனின் குழப்பத்தை அறிந்துகொண்ட சதிஷ் சூழ்நிலையை சற்றே சகஜமாக்க முற்பட்டு பேச தொடங்கினான். தன் பால்யஸ்நேகிதியான யாழினியைப் பற்றியும், அவர்களின் பத்து ஆண்டுகால நட்பு பற்றியும் பேசினான். ஆம் சதிஷும் யாழினியும் பத்து வருடகால நண்பர்கள். இராணுவத்தில் இருந்த யாழினியின் தந்தைக்கு பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களுக்கு மாற்றலாக, யாழினியும் அவள் தாயும் தங்கையும் சொந்த ஊரான சென்னையில் குடியேறினர். யாழினி மூன்றாம் வகுப்பு சேர்ந்த அதே பள்ளியில், அவள் பிரிவில் ஏற்கனவே படித்துக்கொண்டிருந்த சதிஷின் நட்பு கிடைத்தது அவளுக்கு. அன்றிருந்து இன்று வரை நெருங்கிய நண்பர்களாய் ஒரே குடும்பம் போல் அவர்களின் நட்பு இன்றும் தொடர்கிறது.தாயில்லா சதிஷுக்கு யாழினியின் அம்மா காட்டும் அன்பு அருமருந்தாய் இருந்து அவன் தனிமையை களையச்செய்தது.அவன் தன்னையும் அக்குடும்பத்தின் ஓர் அங்கமாகவே நினைத்துக்கொண்டான். அவர்களும் அப்படியே அவனை எண்ணினார்கள்.
இதையெல்லாம் கேட்க கேட்க கொஞ்சம் கொஞ்சமாய் ஜனா தெளிவாகிக்கொண்டிருந்தான். இருந்தாலும் இன்னும் ஏதோ ஒன்று அவனை நெருடிக்கொண்டிருந்தது. ஏன் தன்னிடம் ஆறுமாத காலமாய் சதிஷ் இதை மறைத்தான் என்ற கேள்வி அது. இருந்தும் சதிஷிடம் அதை கேட்க அவனுக்கு இயலவில்லை, அதுவும் யாழினியின் முன்பு!
மௌனமாய் இருந்த ஜனாவின் மௌனத்தை கலைக்கும்படிக்கு யாழினி "ஏன் சதிஷ் உங்ககிட்ட எங்க நட்பு பத்தி மறைச்சானு கேட்க மாட்டீங்களா ஜனா" என்று கேட்டாள். "எப்படி நம்ம மனசுல நெனச்சத இப்படி சரியா கேக்குறா! எண்ணங்களை வாசிக்கும் சக்தி ஏதாச்சும் இருக்குமோ!!" என்று அதிர்ந்து போனவனாய் பதிலின்றி திணறினான் ஜனா. அதை பார்த்த யாழினி மீண்டும் கல கலவென சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவனுள் ஏதோ ஓர் இனம் புரியா உணர்வை மீண்டும் ஏற்படுத்தியது. அது காதலா இல்லை ஈர்ப்பா!! ஏதும் புரியவில்லை அவனுக்கு. மூளையும் இதயமும் ஒன்றுக்கொன்று முரணாய் உணர்வுகளை வெளிப்படுத்தின. அதனுள் சிக்கிய அவனை சதிஷின் "டேய் மச்சான்" என்ற உலுக்கல் நிஜவுலகிற்குள் கொண்டுவந்தது. சற்றே தர்மசங்கட சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டான் ஜனா. ஒருவழியாய் "இல்ல இல்ல" என்று சொல்லி சமாளித்தான். யாழினி குறுக்கிட்டு, நான் தான் சதிஷிடம் யாரிடமும் ஆரம்பத்திலேயே சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருந்தேன் என்றாள். இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாதவர் போல் இருந்தால் கல்லூரி வாழ்க்கையின் இயல்பான அனுபவங்களை பெறமுடியும் என்று நினைத்ததாலேயே அப்படி சொன்னேன் என்றாள். பள்ளியில் நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததால் எங்கள் இருவருக்கும் தனித்தனியே தோழர்களோ தோழிகளோ இல்லை. அதனாலேயே இப்படி ஒரு முடிவு செய்தோம் என்றாள் யாழினி. சதிஷும் சிரித்துக்கொண்டே தலையசைத்தான் அதற்கு.
என்ன மாயம் செய்தீர்களோ ஜனா நீங்கள் சதிஷை, தினமும் உங்கள் புராணம் தான். என் நண்பன் அப்படி என் நண்பன் இப்படி என்று என்னிடமும் அம்மாவிடமும் உங்களைப்பற்றியே எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கிறான். எனக்கே பொறாமை வந்து விட்டது உங்கள் நட்பை பார்த்து, என்றாள் யாழினி. யாழினி பேசப் பேச ஜனாவுக்கு ஒரே வெட்கம். ஏற்கனவே நண்பன் யாழினியைப் பார்த்து வகுப்பில் மெய்மறந்து இருந்ததை கவனித்த சதிஷுக்கு, ஜனாவின் வெக்கம், ஒருபுறம் சிரிப்பையும், மறுபுறம் யாழினியின்பால் ஜனாவிற்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பையும் வெளிப்படுத்தியது. சதிஷ் கூடுதலாக "யாழினியின் அம்மாவும் உன்னை பார்க்க வேண்டும் என்றார்கள். இப்பவே நீயும் குடும்பத்தில் ஒருவன் போல் ஆகிவிட்டாய்" என்றான் நமட்டுச்சிரிப்போடு. மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு காபியும் குடித்துவிட்டு விடை பெற தயாராயினர். விடைபெறும்முன் யாழினி "இனி நம்மளும் ப்ரெண்ட்ஸ் தான் ஜனா" என்று புன்முறுவலோடு சொன்னாள். இதயத்தில் ஏதோ இரசாயன மாற்றம் நிகழ சிரித்துக்கொண்டே தலையசைத்தான் ஜனா. "ம்ம்ம்ம் ம்ம்ம்ம்" என சதிஷ் கேலி செய்ய, ஒன்றும் புரியாமல் விடை பெற்றாள் யாழினி. சதிஷும் ஜனாவும் விடைபெற்றுக்கொண்டு அவரவர் வீட்டிற்கு கிளம்பினர்.
யாழினியின் சிரிப்பையும் முத்துப்போல் அவள் உதட்டிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு வார்த்தைகளையும் எண்ணி எண்ணி சிரித்துக்கொண்டே பித்து பிடித்தவனைப் போல் வீட்டை நோக்கி நடக்கலானான் ஜனா. காணும் யாவையும் கண்ணுக்கு இனியனவாய் தெரிந்தது அவனுக்கு. வழக்கமாய் போகும் பாதை தான் ஆனால் இன்று ஏனோ வசந்தமாய் அவனுக்கு தோன்றியது. ஒன்றுக்கொன்று முரணாய் இருந்த இதயமும் மூளையும் ஒருசேர இப்பொழுது அவள் நினைவாய் ஆனது. இது தான் காதலோ! என்று தனக்குள்ளேயே பிதற்றிக்கொண்டு நடந்தான் இல்லை இல்லை மிதந்தான்.
ஒருவழியாய் வீடு வந்து சேர்ந்த அவனுக்கு "ஏன் லேட்" என்று கேட்ட தங்கையின் கேள்வி செவிகளுக்குளேயே நுழையவில்லை. பதிலேதும் கூறாமல் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு கனவுலகத்தில் மிதந்தான். அம்மாவிடம் செல்வி இதைக் கூற "காத்து கருப்பு எதாவது என் புள்ளைக்கு அடிச்சுருக்குமோ" என்று புலம்பிக்கொண்டே அறைக்கதவை வேகமாய்த் தட்டினாள் தாய் ஊர்வசி. யாரோ அவன் கனவை கலைத்தது போல் இருந்தது ஜனாவிற்கு. நிஜத்திற்கு திரும்பிய அவன் சட்டென்று கதவைத் திறந்தான். பதற்றத்தோடு ஊர்வசி மகனின் முகத்தை தடவி "என்ன ஆச்சு, என்ன ஆச்சு ஜனா" என்று கேட்டாள். “ஒன்றும் இல்லை அம்மா” என்று ஒருவாறு அம்மாவை சமாளித்தான். தங்கை செல்விக்கு அண்ணன் மீது சின்ன சந்தேகம். "அடிச்சது காத்து கருப்பா இல்ல வேற ஏதாவதா ஜனா" என்று நக்கலாக கேட்டுச் சென்றாள். ஜனா "அச்சோ இவ்வளவு அப்பட்டமா தெரியற மாதிரி நடந்துக்குறோமே" என்று நாக்கை கடித்துக் கொண்டான். "கவனமாயிரு ஜனா" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
அம்மா குளித்துவிட்டு உடைமாற்றச் சொல்ல தானும் அப்படியே செய்துவிட்டு சிற்றுண்டி உண்ண வந்தான். பிறகு சிறிது நேரம் அன்று கல்லூரியில் நடத்திய பாடங்களை மீண்டுமாய் படிக்க அமர்ந்தான். ஏனோ அவனால் எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை. சற்றுநேரத்தில் தந்தை வந்துவிட அனைவரும் இரவு உணவிற்கு தயாராயினர். எப்பொழுதும் இரவு உணவு ஒன்றாய் உண்பது அவர்கள் குடும்பத்தின் வழக்கம். அதுதான் பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றாய் அமர்ந்து அன்றைய தினத்தின் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் தருணம். ஒருவருக்காய் ஒருவர் காத்திருந்து ஒன்றாய் கழிக்கும் நேரமது. எப்படியோ ஒரு வழியாய் தன்னை இயல்பாய் தந்தை முன் காட்டிக்கொள்ள முயற்சித்து ஒருவாறாய் அதில் வெற்றியும் பெற்றான் ஜனா. உணவு உட்கொண்டதும் உடனே ஜனாவும்,செல்வியும் தினமும் உறங்கச் செல்வர். செல்வனும், ஊர்வசியும் சிறிது நேரம் தனியே பேசிவிட்டு உறங்கச்செல்வது வழக்கம்.
அன்றும் அதே போல் செல்வனும், ஊர்வசியும் பேசிக்கொண்டிருந்தனர்.ஹார்மோன்களின் குழப்பத்தில் சிக்கி தவித்த ஜனாவிற்க்கு புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவே இல்லை. அன்றைய நாள் நடந்த அத்தனை எதிர்பாராத நிகழ்வுகளையும் உள்ளம் அசைபோட்டுக்கொண்டிருந்தது. கண்ணை மூடினாலும் விழித்தாலும் யாழினியின் சிரிப்பும் அவள் பேசிய வார்த்தைகளும் படம் போல் அவன் மனக்கண்ணில் ஓடியது. தூக்கம் வராமல் புரண்ட அவனுக்கு தந்தையின் சோர்வான குரல் கேட்க அதில் இழைந்திருந்த கவலையை உணர்ந்தான். தாயும் தந்தையும் குடும்பத்தின் வரவு செலவுகளைப் பற்றியும், செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும், பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றியும் கவலையோடு பேசிக்கொண்டிருந்தது அவன் செவிகளில் ஆணி அறைந்தது போல் விழுந்தது. கனவுலகில் மிதந்த அவனை நிஜ உலகிற்கு பயணிக்க வைத்தது. எந்த சூழ்நிலையில் அவன் தன் கனவுப்படிப்பைத் துறந்து இளநிலை கணினிப்படிப்பை தேர்ந்தெடுத்தான் என்பதை நினைவு கூர்ந்தான். இதுவரை எந்த கஷ்டங்களையும் தங்கள் முன் பேசாத அப்பா அம்மாவின் அன்பை எண்ணி நெகிழ்ந்து தானும் முடிந்த அளவு குடும்பத்திற்கு உறுதுணையாய் இருக்க மனதிற்குள் தீர்மானம் செய்து கொண்டான். இதயத்தை மூளை வென்றது போல் ஓர் உணர்வு அவனுக்கு. பெற்றோரை நினைத்துக்கொண்டே கண்ணயர்ந்தான் ஜனா.
திருமதி. பௌசியா கான் அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து
எழுத்தாளர் திருமதி. அஞ்சனா அவர்களின் பாகம் - 4 தொடரும் !




Love isn't a only thing in life.. 90% of guys falls for love and that starts up their love queue but ends with responsibility. Increase in level of maturity!
👏👏Seerana kathai pokku.. Superb..
தெளிவான தெளிவு !
Could through the flow & heads up for the responsibility is quite interesting in all men’s life at this phase !