என் முடிவில் உன் தொடர்ச்சி - பாகம் - 9!
- Sridhana

- Jul 15, 2020
- 5 min read
அவிழும் முடுச்சுகள் - பாகம் – 9!
ஒன்பதாம் எழுத்தாளர்!
எழுதியவர் - திருமதி. ஷீலா தேவி பாலமுருகன்
சதீஷ் சற்று முன்னேறிச் சென்று தன் தந்தையின் அருகில் நின்றான். அவர் சதிஷ் அக்காவின் திருமணத்தால் தான் பட்ட அவமானங்களையும், மனக்குமுறல்களையும், வேதனைகளையும் அவனுடைய அக்காவிடம் மிக சத்தமாகக் கூறிக்கொண்டிருந்தார்.
அந்த விழாவிற்கு வந்த அனைவரும் வாயில் போட்டு மெல்ல ஒரு நல்ல சங்கதி கிடைத்துவிட்டது என்று ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். அடுத்தவர் பிரச்சனை என்றால் சுவாரசியமாக அல்லவா இருக்கும் சிலருக்கு. தன் வீட்டில் இருக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தும் ஆர்வம் அதிகம் அடுத்தவர் வீட்டை எட்டிப் பார்க்க.
சதீஷ் தன் தந்தையை அழைத்து "அனைவரும் பார்க்க நம் வீட்டு விஷயங்களை பேச வேண்டாம். அமைதியாக இருங்கள். நமது மகிழுந்து அருகில் சென்று பேசலாம்" என்று கூறி வந்தவர்கள் அனைவரையும் காலை உணவு சாப்பிட சொல்லி விட்டு தந்தை, அக்கா, மாமா என அனைவரையும் அழைத்துக் கொண்டு மகிழுந்து அருகில் சென்றான்.
சதீஷின் அக்கா தன் தந்தையின் காலை பிடித்து அழத்தொடங்கினாள். "என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா. நாங்கள் செய்தது தவறுதான் சத்தியமாக உங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவுகூட இல்லை எனக்கு. ஆனால் என் திருமணம் எப்படி நடந்தது என்று இப்பொழுது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். இருந்தும் என் மேல் தவறு உள்ளது உங்கள் பேச்சை கேட்காதது என் தவறுதான். நான் அன்று அந்த திருமணத்திற்கு சென்றிருக்க கூடாது. என்னை மன்னித்துவிடுங்கள். அன்னையின் அன்பு தந்தையின் அரவணைப்பு இரண்டும் ஒரு சேர கிடைத்தது உங்களிடத்தில். அன்னை இல்லாத வலி தெரியாது எங்களை வளர்த்தீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா" என்று கதறினாள்.
பெற்றோர்களில் பலவகை உண்டு தன் பிள்ளையின் காதலை ஏற்றுக் கொள்பவர்கள், ஏற்றுக் கொள்ள மனம் இருந்தும் அடுத்த பிள்ளையின் வாழ்க்கை என்ன ஆகும் நம்மை அறிந்தவர்கள் நம்மை என்ன நினைப்பார்கள் என்று எண்ணி ஏற்றுக்கொள்ளாதவர்கள், ஆணவக்கொலை செய்பவர்கள். சதீஷ் தந்தை இதில் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவராக இருந்தார்.
'பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு' என்று ஒரு பழமொழி உண்டல்லவா. அதுபோல் தன் மகள் கண்ணீர் விடுவதை கண்டால் எந்த தந்தையாலும் தாங்கிக்கொள்ள முடியாது. தன் மகளை அள்ளி அணைத்துக் கொண்டார். பின் தன் பேத்தியையும் ஒரு கண்ணால் பார்க்க மறக்கவில்லை. தன் பேத்தியை தன் மனைவியின் மறு உருவமாக உணர்ந்தார்.
மருமகனும் "என்னை மன்னித்துவிடுங்கள் மாமா. அனைத்து தவறுக்கும் நான்தான் காரணம்" என்றார். பின்னர் தன் பேத்தியை தூக்கிக் கொண்டு பெயர் என்ன என்றார். தன் மனைவியின் பெயர் வைத்திருப்பதைக் கண்டு உணர்ச்சி வெள்ளத்தில் பொங்கினார். பின்னர் அவர்கள் மூவரையும் விழா அரங்கிற்குள் அழைத்துச் சென்றார்.
அவர்கள் உள்ளே சென்றதும் தனியே நின்று கொண்டிருந்த சதீஷ் அருகில் ஜனா மற்றும் யாழினி சென்றனர். சதிஷ் "வா ஜனா. இதுவரை உன்னிடம் பலமுறை சொல்ல வந்து, பிறகு சொல்லாமல், இப்பொழுது சொல்லி உன் கூட நான் செலவிடும் அழகான தருணத்தை என் கஷ்டம் சொல்லி வீணடிக்க வேண்டாம் என்று எண்ணி மறைத்ததில் ஒன்றுதான் என் அக்கா" என்றான். மறுகணம் இன்னும் ஏதோ உள்ளது போல என்று தன் மனதில் எண்ணிக்கொண்டான் ஜனா.
அப்பொழுது அவ்வழியாக சென்ற செல்வி இவர்கள் மூவர் நின்று பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டு அருகில் சென்று "நானும் உங்கள் ஜோதியில் கலந்து கொள்ளலாமா?" என்றாள். சட்டென்று சதீஷின் முகம் ஒரு நட்சத்திரம் போல மின்னியது. "நீ இல்லாமலா வந்து ஐக்கியமாகி விடு" என்று கூறினான் தன் இதழோரத்தில் ஒரு சிறு புன்னகையுடன். ஜனாவும் யாழினியும் ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்று வெளிக்காட்டும் விதமாக ஒருவரை ஒருவர் பார்த்து முழித்துக் கொண்டனர். செல்வி தன் கண்ணசைவில் சதீஷை நிஜ உலகிற்கு கொண்டு வந்தாள். உடனே சதீஷ் சட்டென்று "மன்னிச்சுக்கோ. நீங்கள் ஐக்கியமாகுங்க" என்றான். ஜனாவிற்கும் யாழினிக்கும் மனதில் ஏதோ தென்பட்டது இருந்தும் வெளிக்காட்டவில்லை.
பிறகு தன் நண்பர்கள் அருகில் நின்றிருப்பதை உணர்ந்த சதீஷ் "நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன். ம்ம்ம்ம் ஆம் என்அக்காவை பற்றித்தானே " என்று மறுபடியும் ஆரம்பித்தான். "என் அக்காவும், என் அப்பாவின் வணிக பங்குதாரர் ஒருவரின் மகனும் காதலித்து வந்தனர். உன் தங்கையின் பிறந்த நாளன்றுதான் அது எனக்குத் தெரியவந்தது. ஆதலால் தான் என்னால் அன்று பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. பிறகு ஒரு நாள் அவர்கள் இருவரும் உங்கள் வீட்டு அருகில் வண்டியில் சுற்றிக் கொண்டு இருந்ததை நானும் யாழினியும் அவ்வழியாக சென்ற போது பார்த்து விட்டோம். பிறகு ஒரு மரத்தின் அருகில் மகிழுந்தை நிறுத்திவிட்டு அவர்களை அங்கு வர வைத்தோம். ஆனால் மாமாவோ அவரின் நண்பர் ஒருவருக்கு அவரின் உதவி அவசரமாக தேவைப்படுவதாக கூறிவிட்டு அக்காவை மட்டும் விட்டுச் சென்றார். பிறகு எனக்கும் அக்காவிற்கும் சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தது. அப்பாவிற்கு தெரிந்தால் என்னவாகும் என்று. பிறகு அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டோம். ஆனால் அப்பா எங்களை பார்த்ததை நாங்கள் உணரவில்லை. வீட்டிற்க்கு வந்து என்ன நடந்தது என்று விசாரிக்கையில் நான் அனைத்து உண்மைகளையும் உடைத்து விட்டேன். பிறகு அப்பா அக்காவை திட்டினார். அன்றிலிருந்து அக்கா மாமாவிடம் பேசுவதையும், பார்ப்பதையும் கொஞ்சம் குறைத்துக்கொண்டாள். ஆனால் அவரோ அவளை விடவில்லை. சிறிது நாள் கழித்து அக்கா அவளது தோழியின் திருமணத்திற்கு சென்று இருந்த பொழுது அங்கு வந்த மாமா நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கோவிலுக்கு செல்லலாம் எனக்கூறி அக்காவையும் அழைத்துச் சென்றார். அங்கு சென்றவுடன் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த அக்காவிடம், அக்காவிற்கு தெரியாமல் தாலி கட்டி விட்டார். பெண்கள் அழுகுரல் இப்பூவுலகில் யாருடைய காதுக்கும் கேட்காதல்லவா. அன்று அவள் கூறிய உண்மை, அந்தக் குரல் அன்று எங்களுக்கும் கேட்டகவில்லை. உன் தங்கையை சந்தித்த நாள் தான் அன்று. அவளை நூலகத்தில் இறக்கிவிட்ட அந்த நொடி யாழினியிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அக்காவின் திருமணம் ஒரு கோவிலில் நடந்துள்ளது. உன் தந்தை கோபமாக அங்கு செல்கிறார் என்று. உடனே உன் தங்கையை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு, மகிழுந்துவை அங்கு நிறுத்திவிட்டு, பெரிய வீதி வழியாக அம்மன் கோயில் நோக்கி சென்றோம். ஆனால் செல்வதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டது. அப்பா அக்காவை பார்க்கவும், பேசவும் என்னை அனுமதிக்கவில்லை" என்றான்.
ஜனா மற்றும் செல்வி மனதில் இருந்த சதீஷ் பற்றிய முடிச்சுகள் அவிழ்த்தன. இருவருக்கும் மனது இலகுவானது. "ஒரு ஆண்டுக்கு முன் தான் அக்காவிற்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததாகவும், அப்பொழுது அக்கா, சொந்தம் பல இருந்தும் அனாதையாக இருந்து கஷ்டப்படுவதை அறிந்தேன். அன்று முதல் அவளிடம் பேச ஆரம்பித்தேன். இன்று அவளை இங்கு வர வைத்தேன்" என்று கூறினான்.
அப்பொழுது சதீஷ் தந்தை இவர்கள் அனைவரையும் சாப்பிட அழைத்தார். அனைவரும் மிக சந்தோஷமாக தங்களது காலை உணவை உண்டனர். விழாவிற்கு வந்து சிறப்பித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு சிறிய அன்பளிப்பை கொடுத்தார் சதீஷின் தந்தை. அப்போது தன் நண்பனுக்கு வாங்கிய மடிக்கணினியை பரிசளித்தான் சதிஷ். வேண்டாம் என்று கூறியும் அவனது கைகளில் திணித்தான் சதிஷ். வாங்க மனமில்லை இருந்தும் தன் நண்பனிடம் எதுவும் சொல்ல முடியாமல் வாங்கிக்கொண்டான்.
செல்வி, சதீஷ் தனக்கு ஏதாவது பரிசு அளிப்பான் என எதிர் பார்த்தாள். ஆனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. தனது பையில் இருந்த செல்விக்கு வாங்கிய ரெட்டை இதயம் பதித்த மோதிரம் தன் இதயத்தின் அருகில் துடித்ததை உணர்ந்தான். அவளை பார்த்து சிறு புன்னகை மட்டும் சிந்தினான். ஆனால் அவளோ பெண்களுக்கே உரிய ஒரு சிறிய வெளிக்காட்டிக்கொள்ளாத கோவம், முகத்தை சட்டென்று திருப்பிக்கொண்டாள். "நாளை சந்திப்போம்" என்றான் ஜனா. பிறகு இருவரும் சதீஷிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினர்.
மறுநாள் காலை விடிந்தவுடன் தன் அலுவலகத்திற்கு தொலைபேசியில் அழைத்து விடுமுறை வேண்டும் என்று கூறிவிட்டு , தாங்கள் படித்த கல்லூரியின் அருகில் இருந்த கஃபேவிற்குச் சென்றான் ஜனா. அங்கு வந்த ஜனாவும், சதீஷும் கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தனர், நேரம் போனதே தெரியாமல். கஃபேயில் அவர்கள் (யாழினியும் சேர்ந்து) செலவழித்த நிமிடங்களும் வந்து போனது. அப்போதுதான் ஜனாவிற்கு யாழினி ஒருமுறை கஃபேயில் வைத்து கூறியது ஞாபகம் வந்தது. சதீஷைப் பற்றி ஒரு ரகசியம் உன்னிடம் கூறுகிறேன் என்றாள். அதை சதீஷிடம் கேட்கலாமா வேண்டாமா என்று மனம் தவித்து கொண்டிருந்தது. டக்கென்று அதை சதீஷிடம் கேட்டுவிட்டான் ஜனா. "உன்கிட்ட என்னிடம் மறைக்க இனி ஏதும் ரகசியம் உள்ளதா" என்றான். ‘திருடனுக்கு தேள் கொட்டியது போல’முழித்தான் சதீஷ். ஜனாவின் தங்கை மீது தனக்கு இருக்கும் ஈர்ப்பை அறிந்திருப்பானோ என்றெல்லாம் மன ஓட்டம் இருந்தது. அனைத்தையும் அடக்கிக்கொண்டு, மன பதைபதைப்புடன் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் இதழ்கள் மட்டும் "இல்லை மச்சான்" என்றது. "என் அக்காவை பற்றி மட்டும்தான் கூறாமல் இருந்தேன் அதையும் நேற்று உன்னிடம் கூறிவிட்டேன்" என்றான் சதீஷ்.
அவன் மனதில் செல்வியோ படித்துக் கொண்டிருக்கிறாள். இப்பொழுது தன் காதலை வெளிப்படுத்துவது சரியாக இருக்காது. அவள் படிப்பை அது பாதிக்கும் என்று எண்ணினான். பிறகு சதீஷ், ஜனாவை திசைதிருப்ப "உனக்கு யாழினியின் காதல் பற்றி தெரியுமா? அவள் எப்பொழுதாவது உன்னிடம் கூறியிருக்கிறாளா? என்றான்.
பனிக்கட்டி போல உறைந்து போனான் ஜனா. "அவள் அவளது அத்தை மகனை காதலித்து வருகிறாள். வீட்டிற்கும் அது தெரியும். அவன் வேலையில் ஒரு நல்ல இடத்திற்கு வந்தவுடன் திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்" என்றான். ஜனா அமைதியாக இருப்பதை கண்ட சதிஷ், "ஜனா" என்ற சத்தம் பனிக்கட்டியாக இருந்த ஜனாவை உருகச்செய்தது. ஜனாவின் உடல் முழுதும் புழுங்கி அவனது உடையை அது நனைத்தது.
அதிர்ச்சியில் இருந்த ஜனாவின் கண்களில் இருந்து நீர் வழிய தொடங்கியது. "என்னாச்சு" என்றான் சதிஷ். "ஒன்றுமில்லை கண்களில் தூசி பட்டுவிட்டது" என்று சமாளித்தான். "நாம் கிளம்பலாம். நாளை சந்திக்கலாம்" என்று கூறிவிட்டு சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ஜனா. மிகுந்த மன உளைச்சலில், அவன் தன்னுடைய வீட்டை நோக்கி வண்டியில் சென்றான். உலகமே இருளாகியதுபோல் உணர்ந்தான். அவனது உணர்ச்சியின் பிரதிபலிப்பாக அவர்கள் வீட்டிலும் மின்சார தடைஇருந்தது.
வீட்டிற்கு சென்றதும் தன்னுடைய அறைக்கு சென்று, ஒரு பெண் தன்னுடன் இயல்பாக பேசுவதை, பழகுவதை, தோழியாக தனக்கு செய்யும் உதவிகளை, குறுஞ்செய்தி பகிர்ந்ததை எப்படி என்னால் தவறாக நினைக்க முடிந்தது என்ற பல ஆயிரம் கேள்விகள் மனதை துளைத்துக்கொண்டிருந்தது. ஆண் பெண் என இரு பாலரும் பயிலும் கல்லூரியில் ஒரு பெண் தன்னை ஒரு நல்ல நண்பனாக நினைத்து பழகியதை எப்படி என்னால் தவறாக நினைக்க முடிந்தது என்று எண்ணி தன்னையே மனதிற்குள் திட்டிக்கொண்டிருக்கையில், சன்னலின் வழியே தன் தங்கை யாரிடமோ அலைபேசியில் உரையாடும் உரையாடல் அவன் காதில் விழுந்தது. அதில் சதிஷ் என்ற பெயரும் அடிபட்டதைக்கண்டு மேலும் அதிர்ந்து போனான்.
திருமதி. ஷீலாதேவி பாலமுருகன் அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து எழுத்தாளர் திருமதி. ராகவிஷாலினி அவர்களின் பாகம் - 10 தொடரும் !




When is next part ?
How come sathish could say this now that yazhini is loving her relatives when Sathish himself had wondered Jana and Yazhini would make a best pair ?
👏👏அப்பாட ஒரு முடிச்சு அவிழ்ந்தது.. love la innum sikkalkal vachrukingale writer g.. Interesting ah iruku.. normal life include pani solirukinga👌👌👍😍