என் முடிவில் உன் தொடர்ச்சி - பாகம் - 8!
- Sridhana

- Jul 14, 2020
- 3 min read
Updated: Jul 15, 2020
காதல் - ஒரு சுகமான சுமை - பாகம் – 8!
எட்டாம் எழுத்தாளர்!
எழுதியவர் - திருமதி. விஜி விவேக்
அன்று செல்வியும் அதே ரம்மிய மனநிலையுடன் வீட்டை அடைந்தாள். சதீஷ் மற்றும் யாழினி இருவரையும் சந்தித்தையும், மேலும் இருவரும் பதட்டமாக எங்கோ சென்றதாகவும் அண்ணனிடம் தெரிவித்தாள். ஜனாவின் மனதில் மீண்டும் அதே கேள்விகள். நான் உயிரென நினைக்கும் இருவர் என்னிடம் எதை மறைக்கிறார்கள்?? ஏன் மறைக்கிறார்கள்?? எவ்வளவு யோசித்தும் விடை கிடைக்காத கேள்விகள். அன்று மட்டும் இல்லை, இன்றும் , நடந்து முடிந்து மாதங்கள் ஆனபொழுதும் அடிக்கடி மனதில் அதே கேள்விகள் தோன்றும். ஆனால் ஜனா ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தான், தன்னிடம் சொல்ல கூடிய விஷயம் என்றால் இந்நேரம் சொல்லி இருப்பார்கள் அல்லது நேரம் வரும் போது சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில் மற்ற வேலைகளை பார்க்க சென்று விடுவான்.
இப்படியாய் வருடங்கள் ஓடியது. கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டெர்வியூவில் பங்கேற்று நல்ல கம்பெனியில் வேளைக்கு சேர்ந்தான் ஜனா. தன் அப்பாவின் பாரத்தை கொஞ்சம் குறைக்கவும் தன் aviation கனவினை நினைவாக்கவும் தன் வேலையும் அதன் சேமிப்பும் உதவும் என எண்ணினான். சதீஷ் தன் அப்பாவின் தொழிலை நிர்வகிக்க தேவையான மேற்படிப்பை படிக்க வெளிநாடு சென்றான். யாழினி தன் விருப்பட்ட மேற்படிப்பை இந்தியாவிலே படித்தாள். சொல்லா காதலும் சுகம் தான் என்பது போல யாழினியும் ஜனாவும் ஒருவர்க்குஒருவர் காதலை சொல்லாமலே காதலித்தனர். இருவரின் கனவையும் சேர்ந்தே கண்டனர்.
இரவு 10 மணி. "காதலை யாரடி முதலில் சொல்வது நீயா இல்லை நானா??" - தூரத்தில் எங்கோ ஒலித்த பாடலை கேட்டவுடன் ஜனா தனக்குள் சிரித்து கொண்டான். இப்பொழுது தான் யாழினிடம் பேசிவிட்டு வைத்து இருந்தான். காதல் தான் எவ்வளோ சுகமானது என்று நினைத்து கொண்டான்.இன்னும் ரெண்டு நாளில் சதீஷ் படித்து முடித்துவிட்டு வரப்போகிறான் என்ற மகிழ்ச்சி வேறுஒரு புறம். நிம்மதியாக கண்ணயர்ந்தான். ஆனால் அவனுக்கு தெரியாதது, காதல் எல்லாருக்கும் சுகமானதாக இருப்பது இல்லை என்றும் அதன் சுமையை பக்கத்து அறையில் இருக்கும் தன் தங்கை அனுபவிக்கிறாள் என்றும்.
செல்வி, தனக்கு மிகவும் பிடித்த மருத்தவ படிப்பில் சேர்ந்து இப்பொழுது மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். தனக்கு மிகவும் பிடித்த படிப்பில் சேர்ந்தாலும் தன் மனதில் உள்ள வெறுமையை மாற்றமுடியவில்லை. அன்று அவள் மனதிற்குள் வந்த சதிஷ் இன்று அவள் உயிரில் இரண்டற கலந்தவனான். அவன் தன்னிடம் சொல்லாமல் வெளிநாடு சென்றது மிகவும் வலித்த போதும் அவன் மீது வெறுப்பு வரவில்லை. அவனுக்கு தன் மீது ஈர்ப்பு இல்லாவிடினும் அவன் தான் தன் உலகம் என்று முடிவெடுத்தாள். பேதை மனம் அறியவில்லை, தன்னை விட தன்னவன் தன்னை மிகவும் நேசிக்கிறான் என்று! சொல்லா காதலின் சுமை இது!!
அமெரிக்கா!!! சதிஷ் இன்று இரவு இந்தியா செல்ல வேண்டும். தனக்கு பிடித்தவர்களுக்கு பரிசு பொருட்கள் வாங்குவதற்கு ஷாப்பிங் வந்து இருந்தான். நண்பன் ஜனாவிற்கு லேட்டஸ்ட் மாடல் லேப்டாப் வாங்கினான். அவன் படிப்பதற்கு தேவை படும் என்று. யாழினியோ அவனுக்கு சிரமம் ஏதும் கொடுக்காமல் தனக்கு தேவையானது என்று ஒரு பெரிய லிஸ்ட்டையே அனுப்பி இருந்தாள். சிரித்தபடி ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி கொண்டிருந்தான். கடைசியாக தமிழர்கள் நடத்தும் ஒரு நகை கடையில் அவள் சொன்ன மாடல் காதணி இருக்கா என்று விசாரித்து கொண்டு இருந்தான். கடைக்காரர் தேடிகொண்டிருக்கும் நேரத்தில், மற்ற நகைகளை பார்த்து கொண்டு இருந்தான். பின்னணியில் தமிழ் பாடல் ஓடி கொண்டுஇருந்தது. அந்நிய நாட்டிலும் நம்மவர்கள் நம் பாடல்களை கேட்பதை ரசித்தான். "நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்,
அடிக்கடி என் உடல் சிலிர்க்கவைத்தாய்!!!" கடையில் ஓடிய பாடலில் இதயம் கரைந்து கொண்டிருக்க, தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த ரெட்டை இதயம் போட்ட வைர மோதிரத்தை தன்னை அறியாமல் கை எடுத்தது. மனதில் விஸ்வரூபமெடுத்தாள் செல்வி!! அவன் எவ்வளவு முயன்றும் அவன் மனதை விட்டு அகலாத அவன் காதலி!!தன் நண்பன் தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்று எண்ணி கடல் கடந்து வந்தபோதும் அவன் உயிர் வாழ தேவையான காற்றை போல தன் நினைவால் அவனை வாழவைத்து கொண்டுஇருக்கும் அவன் காதலி!!! "காதலை சொல்ல சரியான தேர்வு", கடைக்காரரின் பேச்சால் நினைவில் இருந்து மீண்டான். குடுக்க போவதில்லை என்று தெரிந்த போதும் ஏனோ அந்த மோதிரத்தை வாங்க வேண்டும் என்று தோன்றியது. வாங்கினான்.
இந்தியா!! சதீஷின் கம்பெனிக்கு பக்கத்தில் உள்ள காலிமனையில் அனைவரும் கூடியிருந்தனர். அன்று சதீஷ் அம்மாவின் நினைவு நாள். அவர்களின் நினைவாக இலவச கான்செர் மருத்துவமனை கட்ட தேவையான ஆரம்ப வேலை நடைபெற்று கொண்டிருந்தது.சதீஷின் அப்பா ஒரு சிறிய விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார். ஜனாவும் யாழினியும் தன் குடும்பத்துடன் வந்து இருந்தார்கள். சதிஷ் ஏர்போர்ட்டில் இருந்து நேரே வருவான் என்று அனைவரும் காத்து இருந்தார்கள். தன் நண்பனை காணப்போகும் ஆவலில் ஜனாவும் யாழினியும். மனதிற்குள் குடிகொண்டு இருக்கும் காதலனை பார்க்கப்போகும் ஆவலில் செல்வியும்.
எதிர்பார்த்த நேரமும் வந்தது. வந்தான் சதிஷ். அவ்விடமே சந்தோஷத்தில் கலகலத்தது. நலம் விசாரிப்புகளும் பரிசு பரிமாற்றங்களும் செவ்வனே முடிந்தது. அத்தனை நேரமும் இரு கண்கள் மட்டும் சதிஷ் தவிர வேறு எதையும் நோக்கவில்லை. சதீஷின் பார்வையும் அவ்வப்போது ஆசையுடனும் ஏக்கத்துடனும் பார்த்து பார்த்து மீண்டது. இந்த உணர்வு இருவருக்கும் பிடித்து இருந்தது. இதயத்தின் அத்தனை சுமையையும் ஒரு பார்வையில் சுகமாக்கும் சக்தி காதலுக்கு மட்டுமே உரியது. இவர்களின் பார்வை பரிமாற்றம் யாழினிக்கு எதுவோ புரிவது போலிருந்தது.உதட்டில் புன்முறுவல் பூத்தது.பின்பு, ஐயர் வந்து பூஜையை ஆரம்பிக்க அனைவரது கவனமும் அதில் திரும்பியது. விளக்கேற்ற ஐயர் ஆள் கூப்பிட, யாரும் எதிர்பாரா வண்ணம் சதிஷ் செல்விய கூப்பிட்டு, "எனக்கு இப்போதைக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர் நீதான், நீ வந்து விளக்கேற்று" என்று சொல்ல அனைரும் சிரித்தனர். ஆனால் சதிஷ் மனதிலோ, என் மனைவியாய் நீதான் இந்த இலவச மருத்துவமனையை நிர்வகிக்க வேண்டும் என்ற அவா இருந்தது.
பாக்கெட்டில் வைத்து இருந்த மோதிர பெட்டியை தொட்டு பார்த்து கொண்டான். பூஜையில் இருக்கும் அன்னையது புகைப்படத்தை பார்த்து, தன் மனதில் உள்ளது நல்லபடியாக நடக்க வேண்டும் என்றும், ஜனாவின் விருப்பத்தோடு தான் செல்வியை மணக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.
திடீரென சலசலப்பு சத்தம் கேட்க அனைவரது கவனமும் திசை மாறியது. சதீஷின் அப்பா யாரையோ பார்த்து கத்தி கொண்டிருந்தார். சதீஷோ நிலைமையை புரிந்து வேகமா ஓடினான். ஜனாவும் அவன் பின்னாலே போனான். அங்கு ஒரு பெண் மற்றும் அவள் கணவன் கையில் ஒரு குழந்தையுடன் நின்று இருந்தனர். அப்பெண்ணின் முகம் ஜனாவிற்கு எங்கோ பார்த்தது போல் இருந்தது. சதீஷிடம் யார் அது என்று கேட்க, "அது என் கூடப்பிறந்த அக்கா, அவ பக்கத்துல இருக்கறது அவ காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட என் மாமா!! சாரி மச்சி உனக்கு கொஞ்சநேரத்துல எல்லாம் சொல்றேன் " என்றபடி முன்னேறி சென்றான். அதிர்ச்சியில் உறைந்த ஜனாவிற்கு சட்டென்று நினைவு வந்தது. அன்று கடைதெருவில் தான் பார்த்தபொழுது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூன்று பேரில்,சதிஷ் , யாழினியுடன் கூட இருந்த பெண் இது ,சதீஷின் அக்கா! காதல் தான் எவ்வளவு விசித்திரமான உணர்வு. சிலருக்கு சுகம், சிலருக்கு சுமை, சிலருக்கு இன்பம், சிலருக்கு துன்பம்.ஜனாவின் மனதில் இருந்த முடிச்சுகள் அவிழ ஆரம்பித்தது புரிந்தது.
திருமதி. விஜி விவேக் அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து எழுத்தாளர் திருமதி. ஷீலாதேவி பாலமுருகன் அவர்களின் பாகம் - 9 தொடரும் !




தெளிவான நீரை குழப்பிய பாறாங்கல்லை
பொறுமையாக எடுத்து
தெளிந்த ஓடை ஆக்கியுள்ளீர் ...
👏👏Sema feeling😍😍.. selviyoda kaadhalum.. sathish & jana Natpuku kudukra mariyathaium.. 👌👌Thn oru marmam sollitinga ..😊..
Sema.....