என் முடிவில் உன் தொடர்ச்சி - பாகம் - 5
- Sridhana

- Jul 9, 2020
- 4 min read
Updated: Jul 15, 2020
பொன்னான ரகசியம் - பாகம் – 5
ஐந்தாம் எழுத்தாளர்!
எழுதியவர் - திருமதி. பிரியா ராஜ்குமார்
ஜனாவினால் சதிஷைப் பற்றிய ரகசியம் என்னவாக இருக்கும் என்று கணிக்க முடியவில்லை .யாழினியிடமிருந்து தன் நண்பனைப் பற்றி நண்பனுக்குத் தெரியாமல் அந்த ரகசியத்தை தெரிந்து கொள்ள விருப்பமில்லை ஜனா விற்கு.சொல்ல வேண்டிய விஷயமாக இருந்தால் என்னிடம் கூறியிருப்பான் சதிஷ். இருக்கட்டும் அவனே சொல்லட்டும் என்று கூறி தன் நண்பனை விட்டு கொடுக்காமல் பேசினான் ஜனா, “சரி நேரமாகிவிட்டது நான் கிளம்புகிறேன்”, என்று யாழினியிடம் விடை பெற்று வீட்டை நோக்கி நடக்கலானான்.
ஜனாவின் மனதில் மறுபடியும் ஒரு வானிலை மாற்றம். புயல் வீசத் தொடங்கியது . யாழினியின் வார்த்தைகள் தான் அந்த புயலுக்கு காரணம். “என்ன ரகசியமாக இருக்கும்? சதிஷ் ஏன் என்னிடம் கூறவில்லை நான் அவனை மிகவும் நெருங்கிய நண்பனாகத் தானே நினைத்திருந்தேன் ஏன் இப்படி?”, என்று பல கேள்விகள் அவன் மனதில் மேளம் கொட்ட ஆரம்பித்தன.
யாழினியின் நட்பு கிடைத்ததை எண்ணி மகிழ வேண்டியவன் இப்போது சதிஷின் ரகசியத்தை அறிய வேண்டி துடித்தான்.
“சே… இன்று சதிஷ் கல்லூரிக்கு வந்து இருந்தால் எனக்கு இப்படி ஒரு பரிதவிப்பு ஏற்பட்டிருக்காது. யாழினி என்னிடம் இப்படி அவனது ரகசியம் பற்றி பேசி இருக்க மாட்டாள்.”, என்றெல்லாம் மனம் போராடிக் கொண்டே அவனது கால்கள் வீட்டை நோக்கி நடை பயணத்தை மேற்கொண்டது.
நேற்று யாழினியின் நட்பின் நிமித்தம் என் மனம் சுற்றி நடப்பவைகளை அறிய மறுத்தது. அதேபோல் இன்று எனது ஆருயிர் நண்பன் சதிஷினால்.....
“நட்பு என்னும் வட்டத்தில் ஆண்-பெண் இருவர் பாலும் ஒரே நிலையைத்தான் எட்டுகிறது மனம்!”, என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தான் ஜனா....
வீட்டினுள் நுழையும் போதே ஊர்வசி செய்த சமோசாவின் வாசம் ஜனாவின் நாசியை துளைத்தது... ஜனாவைப் பார்த்த ஊர்வசி “ஜனா வந்துட்டியா? போய் முகம் கைகால் கழுவி விட்டு வா சமோசா செய்து இருக்கிறேன் சாப்பிடலாம்”, என்று கூறினாள்.. முகம் கை கால்களைக் கழுவி உடை மாற்றிக் கொண்டு ஊர்வசி கொடுத்த சமோசாவும் டீயையும் சுவைக்கலானான் சுவைக்க மனமில்லாமல்.. சதிஷின் ரகசியம் பற்றிய யாழினியின் வார்த்தைகள் அவனை சமோசாவின் சுவையை அறிய வைக்கவில்லை.
சோகம் தோய்ந்த முகத்துடன் ஜனா இருப்பதை அவனது அம்மாவும் தங்கை செல்வியும் கவனித்துக் கொண்டே இருந்தனர். “டேய் ஜனா, என்னடா யோசனை? டீ நல்லா இல்லையா?ஏன் முகத்தை இவ்வளவு சோகமா வச்சிருக்க? காலேஜ்ல ஏதாச்சும் நடந்துச்சா?”, என்று தாய் ஊர்வசி வினவ ஜனா இயல்பு நிலைக்கு வந்து,” அதெல்லாம் இல்லம்மா; இன்னைக்கு காலேஜிக்கு சதிஷ் வரல அதான் ஒரு மாதிரியா இருந்தது. இன்று தான் முதல் முறை அவனில்லாமல் நான் என் கிளாஸ்ல தனியா உட்கார்ந்து இருந்தது.”, என்று கூறினான் சற்றே கவலையுடன். இதைக்கேட்ட செல்வி “அடேயப்பா! அவ்வளவு ஆருயிர் நண்பரோ? ஒரு நாள் கூட பிரிய முடியாதோ?, அப்ப ஏன் என் பிறந்த நாளைக்கு வரல? ரொம்ப ஓவரா போற டா ! என்னால முடியலப்பா பெரிய சதிஷ்”, என்று கிண்டல் அடித்தாள்.
சற்றும் பொறுக்காத ஜனா “ஏய் செல்வி, சும்மாயிரு. அவனை எதுவும் சொல்லாத. அவன் அப்படித்தான் எனக்கு! நான் என்ன வேணும்னாலும் செய்வேன் அவனுக்காக. அவனும் அப்படித்தான் என்று கூறிவிட்டு”, செல்லமாக அவள் தலையில் ஒரு குட்டு வைத்தான்.
தாய் ஊர்வசி, “டேய் ஜனா ஏன்டா தங்கச்சியை தலையில் அடிக்கிற? அவ சின்ன புள்ள ஏதோ சொல்லிட்டு போறா விடு”, என்று கூறிவிட்டு செல்வியை பார்த்தும்,” ஏண்டி ஜனாவுக்குத் தான் சதிஷ்ன்னா உயிர்ன்னு தெரியும் இல்ல அப்புறம் ஏன் அவனை வம்பு இழுக்குற போய் படி போ”, என்று கூறி இருவரையும் சரி செய்தாள்.
இவ்வளவு நடந்தும் ஜனாவின் மனம் மட்டும் இயல்பு நிலைக்கு வரவில்லை, வரவும் முடியவில்லை...! வீட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும் அதே நினைவு. அவனால் எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை. ஜனாவின் தந்தை செல்வமும் வேலை முடிந்து வீடு திரும்பினார். ஊர்வசி இரவு உணவு தயாரித்து பரிமாற தயாரானாள்.
“ஜனா, செல்வி சாப்பிட வாங்க!”, என்று அழைத்தாள். ஊர்வசிக்கு செல்வத்தைக் காட்டிலும் ஜனா செல்வி மீது கூடுதல் அன்பு. தாய் ஆயிற்றே...!
“என்னங்க நீங்களும் சாப்பிட வாங்க, சாப்பாடு எல்லாம் ரெடி!”, என்று செல்வத்தையும் அழைத்தாள் ஊர்வசி.... வழக்கம் போல் பேசிக்கொண்டு இரவு உணவு அருந்தி விட்டு உறங்கச் சென்றான் ஜனா.
படுக்கையில் இந்த சதிஷ் ஏன் ஒரு போன் கூட செய்யவில்லை என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் ஜனாவின் கைபேசியில் அழைப்பு பார்த்தால் சதிஷ்! மலர்ந்த முகத்துடன் கைபேசியை எடுத்து சதிஷிடம் ,பேச ஆரம்பித்தான் ஜனா. “டேய் மச்சான், ஏண்டா இப்படி சொல்லாம லீவ் போட்டுட்டே. இன்னைக்கு ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணேன் மச்சி.”, என்று கொட்டி தீர்த்தான் ஜனா..
மறுமுனையில் சதிஷ் “சாரிடா மச்சான் உன் கிட்ட சொல்லாதது தப்புதான்.யாழினிக்குத் தெரியுமே நான் இன்னைக்கு காலேஜிக்கு வரமாட்டேன்னு அவள் சொல்லிடுவான்னு இருந்துட்டேன் டா. ஒரு முக்கியமான வேலை மச்சி அதான் வர முடியல. வேலை நாளைக்கு தான் முடியும். அதனால நாளைக்கும் நான் காலேஜுக்கு வர முடியாதுடா.”, என்று கூறிவிட்டு பிறகும் அவனே தொடர்ந்தான் .... இதை பற்றி உன்னிடம் சொல்ல தான் போன் பண்ணேன். இதுவரை இதைப் பற்றி பேசுவதற்கான சூழ்நிலை அமைய வில்லை அதனால் தான் நான் இதைப் பற்றி உன்னிடம் கூறவில்லை”, என்று ஆரம்பித்தான் சதிஷ்....
ஜனாவின் மனது,"ஒருவேளை யாழினி கூறிய சதிஷ் பற்றிய ரகசியம் இதுவாக இருக்குமோ", என்று எண்ண ஆரம்பித்தது...
சதிஷ் தொடர்ந்தான், “ஜனா எனது தாயின் இறப்பைப் பற்றி நீ இதுவரை என்னிடம் கேட்டதும் இல்லை. மாறாக நானும் அதை பற்றி உன்னிடம் கூறியதும் இல்லை. யாழினி மட்டுமே அறிவாள் இவ்விஷயத்தை. நான் கஷ்டப்படுவேன் என்றுதான் நீ கேட்காமல் இருக்கேன்னு எனக்குத் தெரியும் இப்போ சொல்றேன் கேளு...!”
சதிஷின் ரகசியம் இதுதான் என்று ஆணித்தரமாக நம்பினான் ஜனா. “ஆமாம் சதிஷ், நீ சங்கடப் படுவதைப் பார்க்க என் மனதில் தைரியம் இல்லை. அதான் நான் உன் அம்மாவை பற்றி உன்னிடம் பேசுவதே இல்லை .சாரி மச்சி!“, என்று சதிஷ்க்கு பதில் கூறினான் ஜனா.
“எனது அம்மா இறந்தது ரத்தப் புற்று நோயினால் ஜனா. ஆமாம் பிளட் கேன்சர்!”, என்று சற்றே தழுதழுத்த குரலில் கூறினான் சதிஷ்.....
ஜனாவின் மனம் கணத்தது. என்ன பேசுவதென்று தெரியாமல் வாய்மூடி கண் கலங்கினான். “சிறுவயதிலேயே நான் தாயை இழந்தவன். அதுவும் என் தாய் அந்த கொடிய நோயினால் பட்ட கஷ்டம் அனைத்தையும் பார்த்த துர்பாக்கியசாலி! ஒவ்வொரு கீமோதெரப்பி க்கு பிறகும் ஒரு புது பரிணாமம் பெறுவார் என் தாய் ..முடியில்லாமல், குளிர் சுரம் கொப்புளங்கள் மருந்தின் வீரியத்தின் விளைவுகள் இவை அனைத்தும் .. என் தாய் பட்ட கஷ்டம் ஒருபுறமிருக்க எனது தந்தை, தாயின் மருத்துவ செலவிற்காக பட்ட கஷ்டம் மிகவும் கொடுமை. அவருக்குத்தான் மன உளைச்சலோடு உடல் உளைச்சலும். அனைத்து கீமோதெரப்பி ட்ரீட்மென்ட்டும் முடிந்து வீடு வந்து ஆறு மாதம் இருந்து பின் இறந்து விட்டார் என் அம்மா. அப்போது நான் சிறுவன் என்றாலும் என் மனதில் ஆழமாய் பதிந்தது எனது தந்தையின் கஷ்டமும்...அப்போதிலிருந்து என் அப்பாவிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன் ...ஏழைகளுக்கு இலவசமாக கேன்சர் ட்ரீட்மென்ட் அளிக்க ஏதாவது செய்யனும் பா என்று...எனது அப்பாவும் காலம் வரும் நாம் செய்வோம் என்று கூறினார்.”, ஒருவாராக கூறி முடித்தான் சதிஷ்.
என்ன முடிவெடுத்தான் சதிஷ் என்று ஜனா யோசிக்க சதிஷ் தொடர்ந்தான், “இதற்கு முடிவாக ஒரு 500 புற்றுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனை கட்ட ஏற்பாடு செய்ய இருக்கிறோம் டா. அதற்குத்தான் இன்று அப்பாவுடன் போனேன். எங்க இடத்துல ஹாஸ்பிடல் கட்ட அப்ரூவல் கிடைத்து விட்டது. அதனால் தான் இப்போது உன்னிடம் சொல்கிறேன்.உன்னிடம் சொல்லாத விஷயம் இது .சொல்லி விட்டேன் என் மனம் மகிழ்ச்சி அடைந்தது ஜனா. இதற்கு நீயும் என்னுடன் துணையாக கடைசி வரை இருக்க வேண்டும் ஜனா. இருப்பாயா?”, என்றான் சதிஷ் வாஞ்சையுடன். “கண்டிப்பாக சதிஷ்!”, என்றான் ஜனா ஆணித்தரமான குரலில் சதிஷ்க்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக...!
ஜனாவை சோர்வாக்கிவிட்டேனோ என்ற குற்றவுணர்ச்சி சதிஷை கொஞ்சம் வாட்டியது. பின் ஜனாவை இயல்பு நிலைக்கு கொண்டுவர சதிஷ் பேச்சைமாற்றினான்.
“என்னடா நீயும் யாழினியும் காபி ஷாப்ல ஐஸ்கிரீம் சாப்பிட்டீங்களாமே? யாழினி உன்னைப் பத்தித்தான் ஒரே பேச்சு ...”, என்று சதிஷ் ஜனா விடம் கூற ஜனாவின் மனது மீண்டும் யாழினிவசம் சென்றது…
திருமதி. பிரியா ராஜ்குமார் அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து எழுத்தாளர் திருமதி. என்.எஸ்.பி. அவர்களின் பாகம் - 6 தொடரும் !




When will you upload next part ?
Excellent in continuation. Eagerly waiting wat will happen in next episode
Content to society adds value..
However,Tough to travel suddenly from sad mood to normal mood of Jana..
Superb continuation. All characters included.. 👏👏👍